சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறத் தேவையான வைத்திய அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்காக, மூன்று பிரதேச அலுவலகங்களை அமைப்பதற்கு, போக்குவரத்து முகாமைத்துவம், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அனுமதிப் பத்திரத்துக்குத் தேவையான வைத்திய அறிக்கைச் சான்றிதழ், போக்குவரத்து வைத்திய நிறுவனத்திடம் பெற்றுக் கொள்ளும் போது உள்ள நெருக்கடியைத் தவிர்ப்பதற்குத் தேவையான மாற்று நடவடிக்கை ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு, போக்குவரத்து முகாமைத்துவ மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
வைத்தியச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக, பெரும்பாலானோர் கொழும்புக்கு அப்பால் வெளி இடங்களில் இருந்து வருகை தருகின்றனர்.
இவர்களின் வசதிக்காக மூன்று பிரதேச அலுவலகங்கள் புதிதாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், இரத்தினபுரி, பண்டாரவளை, நுவரெலிய போன்ற பிரதேசங்களில் உள்ள மக்களின் வசதிக்காக அலுவலகம் ஒன்றும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் போன்று வட மத்திய மாகாண மக்களுக்காக துணை அலுவலகம் ஒன்று தம்புள்ளையிலும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதேபோன்று வடமேல், கம்பஹா மற்றும் அதற்கு அருகாமையில் உள்ள பிரதேச மக்களுக்காக நீர் கொழும்பில் துணை அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கும், தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீர குறித்த அலுவலகங்களை அமைப்பதற்கான பணிகளைத் துரிதமாக நிறைவேற்றுமாறும், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது தவிர, வாகன அனுமதிப் பத்திரத்தை அச்சிட்டு வெளியிடக்கூடிய வசதிகளைக் கொண்ட அலுவலகம் ஒன்றை அனுராதபுரத்தில் அமைப்பதற்கும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக, பெருந்தொகைப் பணத்தையும் காலத்தையும் செலவிட்டு, கொழும்புக்கு வருவது இதன் மூலம் தவிர்க்கப்படுகின்றது.