அதிக விலையில் சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் உணவகங்களில் உணவுப் பண்டங்களைக் கொள்வனவு செய்ய வேண்டாம்

ஐ. ஏ. காதிர் கான்-

திக விலையில் உணவுப் பொதிகள் மற்றும் சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் ஹோட்டல்கள், உணவகங்களில் உணவுப் பண்டங்களைக் கொள்வனவு செய்ய வேண்டாம் என்று, நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் காணப்படும் உணவகங்களின் தூய்மைத்தன்மை தொடர்பில் ஆராய்ந்து பார்த்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், சுகாதார பரிசோதகர்களிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உணவுப் பொதிகள் உள்ளிட்ட ஏனைய சிற்றுண்டிகளுக்கான விலையை அதிகரிக்க உள்ளதாகக் குறிப்பிட்டு உணவக உரிமையாளர்களின் சங்கத்தினரால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட செய்தி தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள இந்த இயக்கம், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உணவக உரிமையாளர்கள் எவ்விதக் காரணமுமின்றி விலையை அதிகரிக்கத் தீர்மானித்தமை தொடர்பில் அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுடன், இவ்வாறு அதிக விலையில் விற்பனை செய்யும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் உணவுகளைக் கொள்வனவு செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் நுகர்வோர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

அதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பெருமளவிலானவைகளின் சுத்தம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதால், அங்கு உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வது ஆரோக்கியமாக அமையாது.

ஆரோக்கியமான உணவைப் பெற்றுக் கொடுப்பதின் நோக்கில் அரசாங்கம் விவசாய அமைச்சின் ஊடாக நச்சுத் தன்மையற்ற சுத்தமான உணவை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இவ்வாறான இடங்களில் எமக்குத் தேவையான உணவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இதுபோன்ற 'சிறந்த போசனை சாலைகள்' மேலும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம்.

உணவுப் பொதிகளுக்கான பெறுமதி மற்றும் தரம் தொடர்பில் நுகர்வோர் மத்தியில் பல சிக்கல்கள் காணப்படுவதுடன், இதற்கான உரிய பெறுமதியை நிர்ணயிக்குமாறே நாங்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றோம். 

இந்நிலையில், உணவுப் பொதிகளைத் தயாரிக்கும் போது வைக்கப்படும் சோற்றின் அளவு மற்றும் மீன், இறைச்சி மரக்கறி வகைகளின் அளவுகள் தொடர்பிலும் தெரிந்து கொள்ளமுடியும்.
சந்தையில் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டாலும் உணவகங்களில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் மரக்கறிகளே கொள்வனவு செய்யப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், உணவகங்கள் விலை அதிகரிப்பை மேற்கொள்வது எவ்வித்திலும் நியாயமாகாது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் சுத்தம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு பொதுமக்கள் சுகாதாரப் பரிசோதகர்களிடம் வேண்டுகோள் விடுப்பதுடன், சுத்தமின்றிக் காணப்படும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -