நீண்டகால கோரிக்கையாக இருந்துவந்த நுவரஎலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயம் கடந்த நல்லாட்சிக் காலத்தில் சாத்தியமாக்கப்பட்டது. பாராளுமன்ற பிரேரணை, அமைச்சரவை அனுமதி, வர்த்தமானி பிரகடனம் என அனைத்து எல்லைகளையும் கடந்து தற்போது நடைமுறைக்கு வந்துள்ள திட்டத்தில் வலப்பனை நில்தண்டாஹின பகுதியில் தற்போதைய பிரதேச செயலகம் அமையப்பெற்றுள்ள நிலையில், புதியதையும் அதற்கு அண்மித்த வலப்பனை நகரில் அமைக்க முயல்வது நியாயமற்றது. முறைப்படி அது இராகலை நகரில் அமைவதே நியாயமாகும். இந்த நியாயமான கோரிக்கைக்காக மலையக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரஎலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
வலப்பனையில் இரண்டாவது புதிய பிரதேச செயலகத்தையும் வலப்பனை நகரை அண்மித்தே அமைக்க திட்டமிடப்படுவதனால் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் குறித்து கருத்து தெரிவித்த போதே திலகர் எம்பி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.
பெருந்தோட்டத்துறை மக்கள் அரச நிர்வாக பொறிமுறையில் இணைத்துக்கொள்ளப்படாமையே அவர்கள் வாழும் பிரதேசங்கள் அபிவிருத்திக் குறைவாக இருக்கின்றமைக்கான பிரதான காரணமாகும். நாட்டின் ஏனைய பகுதிகளில் ஒரு கிராம சேவகர் பிரிவுக்கான, பிரதேச செயலகப் பிரிவுக்கான சனத்தொகை என்பவற்றை பெருந்தோட்டப்பகுதியுடன் ஒப்பிட்டால் இதனை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். குறிப்பாக மலையகத் தமிழ் மக்கள் செறிவாக வாழும் நுவரஎலியா மாவட்டத்தில் இது மிகவும் சிக்கலான பிரச்சினையாக இருந்துவந்துள்ளது. இதற்காக இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அரசியல், தொழிற்சங்க, சிவில் சமூக அமைப்புகளால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. எனினும் பாராளுமன்றில் அதற்கான பிரேரணைகள் முன்வைக்கப்படவில்லை.
2015 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்துக்கு தெரிவானதோடு இதற்கான முறையான பிரேரணையை நான் முன்வைத்தேன். எனது கோரிக்கை ஐந்தாக இருக்கக்கூடிய பிரதேச செயலகங்களை 15 ஆக உயர்த்த வேண்டும் என்பதாகும். அதற்கான போதுமான புள்ளிவிபரங்களை நான் சபையில் சமர்ப்பித்தேன். அதனை ஏற்றுக்கொண்ட அப்போதைய உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன கோரிக்கை நியாயமானது எனினும் அதற்காக அடுத்த எல்லை மீள்நிர்ணயம் வரை காத்திருக்க வேண்டும் எனவே இப்போதைய எல்லை மீள்நிர்ணயங்களின் பிரகாரம் ஐந்து மேலதிக பிரதேச செயலகங்களை அமைக்க உடன்பாடு தெரிவித்தார். அதன் பின்னர் அதனை அமைச்சரவை பத்திரமாக தாக்கல் செய்யக்கோரி நாம் தமிழ் முற்போக்குக் கூட்டணியாக அமைச்சரை சந்தித்து எமது கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.அதனடிப்படையில் அமைச்சரவையும் அனுமதி அளித்தது. அதன் வர்த்தமானி அறிவித்தலையும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாக நாம் வலியுறுத்தியதன் பேரில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த 2019 ஒக்டோபர் 29 ம் திகதி வரத்தமானியில் அதனை வெளிவரச் செய்தோம்.
இவ்வாறு மிகுந்த போராட்டங்கள், அர்ப்பணிப்புகளுக்கு மத்தியில் கிடைக்கப்பெற்ற புதிய பிரதேச செயலகங்களின் அமைவிடங்கள் தொடர்பில் இப்போது சர்ச்சைகள் பிரதேச மட்டத்தில் எழுந்துள்ளன.குறிப்பாக வலப்பனையில் தற்போதைய நில்தண்டாஹின பிரதேச செயலகம் அமையப்பெற்றுள்ள இடத்தில் இருந்து 4 கிலோமீற்றர் தூரத்தில் வலப்பனை நகரில் அமைக்க திட்டமிடுகின்றனர். இதனால் உடப்புசல்லாவை, ராகலை பகுதியில் புதிய மாற்றத்தில் எந்த பிரயோசனமும் இல்லை. எதற்காக கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கமும் நிறைவேற்றப்படமாட்டாது. இந்த நியாயமற்ற செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வலப்பனை பிரதேச சபையில் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் பிரேரணை முன்வைத்துள்ளனர். கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைத்து தமிழ் உறுப்பினர்களும் இந்த பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.இதற்கு மேலதிகமாக ராகலை நகரில் மக்கள் போராட்டத்தையும் நடாத்தியுள்ளனர். கடந்த இரண்டு தசாப்த காலமாக இந்த கோரிக்கையை வெவ்வேறு தளங்களில் முன்னெடுத்தவன் என்றவகையில் புதிய பிரதேச செயலகம் அமைவதே நியாயமானது என அதற்கான மக்கள் போராட்டத்துக்கு எனது தார்மீக ஆதரவினை வழங்குகிறேன். இது வலப்பனை வாழ் மலையகத் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினை என்றவகையில் மாவட்ட எல்லைகளைக் கடந்து அனைத்து மலையக ஆர்வலர்களும் ராகலைக்கே புதிய பிரதேச செயலகம் வேண்டும் எனும் கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டார்.