பிரதமரினால் நியமிக்கப்பட்டுள்ள ஹஜ் குழு மூலம் ஹஜ்ஜின் செலவீனங்கள் குறைக்கப்பட்டுள்ளன ; 2,850 ஹஜ் கோட்டா இம்முறை 3,500 ஆகவும் அதிகரிப்பு- பைஸர் முஸ்தபா பெருமிதம்
மினுவாங்கொடை நிருபர்-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள ஹஜ் குழு மூலம், இவ்வருட ஹஜ்ஜின் செலவீனங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அதிகளவிலான வசதி வாய்ப்புக்களும் ஹஜ் கிரியைகளின்போது இம்முறை ஹஜ் யாத்திரிகர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த காலங்களில் 2,850 ஹஜ் கோட்டா மாத்திரமே கிடைத்து வந்தது. இது இம்முறை 3,500 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமரின் அறிவுறுத்தலின்பேரில் செயற்படும் தேசிய ஹஜ் குழு, இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் குழுவாக அதன் பணிகளை திருப்திகரமாக முன்னெடுத்துச் செல்லும் என, முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி இச் பைஸர் முஸ்தபா நம்பிக்கை தெரிவித்தார்.
சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்து நாடு திரும்பிய இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் ஃபழீல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா ஆகியோர், இவ்வருட ஹஜ் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பில் நேற்று முன் தினம் சந்தித்து அளவலாவினர்.
இச்சந்திப்பைத் தொடர்ந்து அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே பைஸர் முஸ்தபா மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்துரை வழங்கும்போது, ஹஜ் கமிட்டி ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகச் செயற்படவேண்டும் என்பதுவே பிரதமரின் பிரதான நோக்கமும் விருப்பமுமாகும். அதன் குறிக்கோள் சேவை செய்வது மட்டுமே. ஹஜ் கடமைக்காக சவூதி அரேபியாவுக்குச் செல்லும் இலங்கையர்கள், குறைந்த கட்டணத்தில் பயணத்தை மேற்கொள்ள முடியுமான அனைத்து வசதிகளையும் இந்தக் குழு மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையும் எனக்குள்ளது. அத்துடன், கடந்த ஆண்டு ஹஜ் கடமையை மேற்கொள்ள ஒவ்வொரு யாத்திரிகர்களுக்கும் ஏழு இலட்சம் ரூபா வரை செலவிட வேண்டிய நிலை இருந்து வந்தது. தற்போது பிரதமரின் கீழ் இயங்கும் மத விவகாரங்கள் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் நியமிக்கப்பட்ட ஹஜ் குழு மூலம் ஹஜ்ஜின் செலவீனங்கள் எளிதாக்கப்பட்டுள்ளன. இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் தொடர்பிலான சேவைகளைத் திருப்திகரமாக நிர்வகிப்பதை உறுதி செய்வதற்கான ஒட்டுமொத்தப் பொறுப்பையும் இந்தக் குழு ஏற்றுக்கொள்கிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வினால் நியமிக்கப்பட்ட
2020 ஆம் ஆண்டிற்கான ஹஜ் குழுவில், முஹம்மது ஃபழீ ல் மர்ஜான் அஸ்மி (தலைவர்), முஹம்மது அஹ்கம் சப்ரி உவைஸ், ஸையித் அஹமட் நகீப் மெளலானா, எம்.ஜே. அஹமட் புவார்ட் மற்றும் தங்க உடையார் அப்துல் சத்தார் ஆகியோர் அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், 2019 டிசம்பர் மாதம் 23 ஆம் திகதியன்று
சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்குச் சென்ற ஹஜ் குழு உறுப்பினர்கள், சவூதி அரசாங்கத்தின் ஹஜ்ஜுக்குப் பொறுப்பான அமைச்சருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் மூலம், இம்முறை 3,500 ஹஜ் கோட்டாக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இது, கடந்த வருடங்களில் கிடைக்கப்பெற்ற 2,850 கோட்டாக்களை விட அதிக ஒதுக்கீடாகும் என்றார்.
