ஆட்சிமாற்றங்கள் இடம்பெறும்போது மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டம்களை அபகரிப்பது அநீதியானதும் அநாகரீகமானதுமான செயற்பாடு ஆகும். மண்சரிவு அபாயத்தில் பாதிக்கப்பட்ட ரம்பொடை லிலிஸ்லேண்ட், கயிறுகட்டி தோட்ட மக்களுக்கு இரண்டு முறையும் ஆட்சி மாற்ற சந்தர்ப்பங்களில் மிகுந்த வேதனை அளிக்கிறது. தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இந்த மக்களை தமது அரசியல் பழி தீர்ப்பதற்கு பயன்படுத்தக்கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரஎலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொத்மலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட லில்லிஸ்லேண்ட் தோட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதியீட்டத்துடன் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த 105 வீடுகளைக் கொண்ட கிராமம் அமைக்கும் பணியை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாக கூறி பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளதை அடுத்தே மேற்படி வேண்டுகோளினை விடுத்த்முள்ளார். அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
>
> கொத்மலை கயிறு கட்டி தோட்டம் 2015 ஆம் ஆண்டு பாரிய மண்சரிவு அபாயத்துக்கு உள்ளானது. இது மீரியபெத்தையை உடனடுத்து ஏற்பட்ட ஒன்றாகும். அந்த அனர்த்தத்தில் நேரடியாக பாதிப்புற்ற மக்களுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சராகவிருந்த பழநி திகாம்பரம் தலைமையில் 20 தனிவீடுகளுடன் “குறிஞ்சித் தென்னவன்” புரம் என கிராமம் அமைத்துக்கொடுத்தோம். அதேநேரம் எஞ்சியிருந்த குடும்பங்களும் அபாய எச்சரிக்கையின் கீழாகவே வாழ்ந்து வந்தனர். 2018 ஆம் ஆண்டு அந்த அபாயம் அதிகமாக உணரப்பட்டு எஞ்சிய 105 குடும்பங்களும் ரம்பொடை இந்து மகா வித்தியாலயத்தில் அகதிகளாக தங்க வைக்கப்பட்டனர். அதன்போது முன்னாள் அமைச்சர் திகாம்பரத்தின் வேண்டுகோளின் பேரில் அனர்த்த முகாமைத்துவ ராஜாங்க அமைச்சராகவிருந்த பாலித்த ரங்கே பண்டார பாதிப்புற்ற மக்களை நேரடியாக பார்வையிட்டு அவசர உதவிகளை வழங்கியதுடன் அந்த மக்களுக்கு புதிய வீடுகளை அமைக்கும் பொறுப்பினையும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக மேற்கொள்ள இணக்கம் காணப்பட்டது. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்றவகையில் அதன் இணைப்பு பணிகளை நானே மேற்கொண்டு இருந்தேன்.
அதன்படி 2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அடிக்கல் நாட்டி 105 வீடுகளுக்கான பணிகளை ஆரம்பித்து வைத்தோம். அதே ஆண்டு சதிப்புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றிய அரசாங்கத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சினைப் பொறுப்பேற்றவர்கள் முதல் வேலையாக செய்ததே இந்த 105 வீடுகளின் ஆரம்ப பணிகளை நிறுத்தியதே. அத்தோடு ஆரம்பநாளில் வைக்கப்படும் கொங்கறீட்டினாலான பெயர் பலகை யையையும் அடித்து துவம்சம் செய்திருந்தனர்.
நீதிமன்ற தீர்ப்பின்படி மீண்டும் நாம் அரசாங்கத்தை அமைத்த போது ஆரம்பம் முதல் அனைத்துப் பணிகளையும் தொடங்க வேண்டி இருந்தது. மலையக அதிகார சபையின் ஊடாக அந்த திட்டத்தினை முன்னெடுக்கும் முகமாக அதன் தலைவராக செயற்பட்ட சந்திரா ஷாப்டர் மற்றும் பணிப்பாளராகவும் அமைச்சரின் ஆலோசகராகவும் இருந்த எம்.வாமதேவன் ஆகியோரையும் அழைத்துச்சென்று தளத்தினை பார்வையிட்டோம். எனினும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் நிதி ஒதுக்கீடு முப்பது வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக அதனை முன்னெடுக்கவும் ஏற்பாடாகி இருந்தது. அதன்படியே மீளவும் அப்படியே பணிகளை ஆரம்பித்தோம்.
இந்த நிலையிலேயே இப்போது பணிகளை இடைநிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக மக்கள் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்போது அதிஷ்டவசமாக கிடைத்த பதவிகளைக் கொண்டு அபிவிருத்திகளைத் தடை செய்வதை விடுத்து மக்களுக்கான அபிவிருத்திகளை முன்னெடுப்பதே சிறப்பு. அந்த 105 குடும்பங்களும் ஒரு கட்சியை சார்ந்தவர்கள் அல்ல. மண்சரிவு அபாயத்தில் வாழ்பவர்கள். கயிறுகட்டி தோட்ட மக்களின் அவல வாழ்க்கையுடன் அரசியல் விளையாடுவது கவலை அளிக்கிறது. இரண்டாவது முறையாகவும் ஆட்சி மாற்ற சந்தர்ப்பங்களில் இவ்வாறு நடந்து கொள்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இந்த மக்களை தமது அரசியல் பழி தீர்ப்பதற்கு பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
