பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பொருளாதாரம் சரியில்லை எதை சாதிக்க இத்தனை அவசரமாக இந்த சட்டம் -கமல்காசன் காட்டம்

த்திய அரசு கொண்டுவந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கண்டித்திருக்கும் கமல்ஹாசன், "பாகிஸ்தான் இந்துவுக்கு வழங்கப்படும் உரிமை இலங்கை இந்துவுக்கு ஏன் இல்லை?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார். எதை சாதிக்க இத்தனை அவசரமாக இந்த சட்டம் என்ற கேள்விக்கு பதில் இல்லையென்றும் அவர் கூறியிருக்கிறார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறை குறித்தும், இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தில் வாய்ப்பளிக்காதது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

கிராமங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து செத்துக்கொண்டிருக்கும்போது அதைத் தடுக்க வழிசெய்யாமல் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பது அரசின் சூழ்ச்சி என்றும் பெண்கள் உயிர் பயத்தில் வாழும் நேரத்தில் அதை சரிசெய்யாமல், வாக்கு வங்கிக்காக சட்டப்பிழைகளைச் செய்வது அரசு மக்களுக்கு எதிராகத் தொடக்கும் போர் என்றும் கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.

எதிர்காலத்தின் தூண்களான மாணவர்கள் அரசியல் புரிதலுக்காக கேள்விகேட்கும்போது கண்ணீர் புகைக் குண்டுகளை எறிவதும் போலீஸை வைத்து அடிப்பதுமே அரசாங்கத்தின் பதிலாக இருப்பதாகவும் பொருளாதாரம் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நேரத்தல் குடியுரிமைச் சட்டத்திற்கான அவசரம் என்ன என்ற கேள்வியால்தான் நாடு முழுவதும் போராட்டம் வெடித்திருப்பதாகவும் கமல்ஹாசன் சுட்டிக்காட்டினார். 

பாகிஸ்தானின் இந்துவுக்கு வழங்கப்படும் உரிமை, இலங்கையின் இந்துவுக்கு ஏன் வழங்கப்படவில்லை என்றும் ஆண்டாண்டு காலமாக தமிழகம் தோள்கொடுக்கும் என்று நம்பும் இலங்கைத் தமிழர்களுக்கு நாம் சொல்லப்போகும் பதில் என்ன என்று கேள்வியெழுப்பிய கமல், கேள்விகளுக்குப் பதில் அளிப்பதைவிடுத்து, கேள்வி கேட்பவனின் குரலை ஒடுக்கும் வேலை நடப்பதாகக் கூறினார்.

மாணவர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் இந்திய ஜனநாயகம் வழங்கிய கருத்துரிமையின் மேல் விழும் அடி என்றும் கேள்விகளுக்கு நேர்மையான பதில் இல்லாததால் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் விழும் அடி என்றும் கமல் குற்றம்சாட்டினார்.

மாணவனுக்கு பதிலில்லை, விவசாயிக்கு வாழ வழியில்லை; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பொருளாதாரம் சரியில்லை. குற்றங்கள் கட்டுக்குள் இல்லை; வேலைவாய்ப்பு இல்லவே இல்லை எதை சாதிக்க இத்தனை அவசரமாக இந்த சட்டம் என்ற கேள்விக்கு நேர்மையான பதிலும் இல்லை என்று கூறிய கமல், இந்த அரசு செய்யும் வேலைகளை உலக வரலாறு முன்பே கண்டிருக்கிறது என்றும் கூறினார் கமல்.
www.importmirror.com
அ.தி.மு.க. இந்த மசோதாவுக்கு ஆதரவளித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "அது தமிழினத்திற்கும் தேசத்திற்கும் செய்த துரோகம்" என்று பதிலளித்தார். இந்தச் சட்டம் குறித்து பேசிய அமித் ஷா, இது ஊடுருவல்காரர்களுக்கு மட்டுமே எதிரானது என்று கூறியிருப்பது குறித்துக் கேட்டபோது, அவர் பிடித்த முயலுக்கு எத்தனை கால் என்று அவருக்குத்தான் தெரியும் என்று பதில் அளித்தார்.

தி.மு.க. கூட்டியிருக்கும் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கலந்துகொள்ளுமா எனக் கேட்டபோது, இது கட்சி, ஜாதி போன்ற எல்லைகளைக் கடந்தது என்றும், தங்களுக்கு அழைப்புவந்தால் கலந்துகொள்வோம் என்றும் கமல் தெரிவித்தார்.

அடுத்ததாக என்ஆர்சி எனப்படும் தேசியக் குடியுரிமைப் பதிவேடு சட்டம் வரும்போது களத்தில் எந்த அளவுக்குச் செல்லவேண்டுமோ, அந்த அளவுக்குச் செல்வோம் என கமல் பதிலளித்தார். பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட பல நட்சத்திரங்கள் இது குறித்துப் பேசவில்லையே எனக் கேட்டபோது, அவர்கள் பேச விரும்பவில்லையென பொருள்கொள்ளக்கூடாது என்றும் அவர்கள் அச்சத்தில் இருப்பதாகவும் இம்மாதிரியான முன்னுதாரணங்கள் கவலையேற்படுத்துவதாகவும் கமல் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் அடுத்ததாக என்ன செய்யப்போகிறீர்கள் எனக் கேட்டபோது, இதில் சட்ட ரீதியாக, நேரடியாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம் என்றும் போராடினால், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை என அடக்கிவிடுவார்கள் என்றும் கமல் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் கருத்துத் தெரிவிக்காதது குறித்துக் கேட்டபோது, விரைவில் அவர் தெரிவிப்பார் என நம்புவதாகக் கூறினார் கமல். இது குறித்துப் பேச பிரதமரைச் சந்திக்க முயற்சிக்கவில்லையா என்று கேட்டபோது, தான் பல முறை முயன்றதாகவும் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியதாகவும் வீடியோ கூட  அனுப்பியதாகவும் ஆனால், இன்னும் சந்திக்கவில்லை என்றும் கமல் கூறினார்.

கமல்ஹாசனின் இந்த செய்தியாளர் சந்திப்பிற்கு அவரது கட்சியினரும் பெரும் எண்ணிக்கையில் வந்திருந்தனர். சில கேள்விகளுக்கு கமல் பதிலளித்து முடித்ததும், "வருங்கால முதலமைச்சர் கமல் வாழ்க" என கோஷம் எழுப்புவதும் கைதட்டுவதுமாக இருந்தனர்.BBC
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -