கல்முனை முதல்வர் றகீப் சூளுரை
அஸ்லம் எஸ்.மௌலானா-
மஹிந்த ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த முஸ்லிம் விரோத செயற்பாடுகளை முழுவீச்சுடன் தொடர்வதற்காகவும் சிங்களப் பெரும்பான்மை வாக்குகளினால் ஆட்சி அதிகாரத்தை அடைந்து கொள்வதற்காகவும் கோட்டாபயவே சஹ்ரான்களை போஷித்து, வளர்த்து, களமிறக்கியிருக்கிறார் என்கின்ற விடயம் தற்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
அடுத்த சந்ததியினரின் நலன் கருதி இந்த தர்ம யுத்தத்தில் கோட்டாவை தோற்கடிக்க வேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும் என்றும் குறிப்பிட்டார்.
கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்- அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இப்பிரசார கூட்டத்தில் முதல்வர் றகீப் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது;
"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் சமூகத்தின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், சிங்களப் பேரினவாதத்தின் இலக்கு முஸ்லிம் சமூகத்தின் மீது திரும்பியது. அதன் காரணமாக முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை எவரும் இலகுவில் மறந்து விட முடியாது. ஹலால் தடுப்பில் தொடங்கி பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன. அளுத்கம போன்ற பல இடங்களில் முஸ்லிம்களின் வீடுகள் எரிக்கப்பட்டு, சொத்துக்கள் அழிக்கப்பட்டன. பள்ளிகளில் பாங்கு சொல்வதற்கும் தடையேற்படுத்தப்பட்டிருந்தது. அக்காலப்பகுதியில் முஸ்லிம்கள் அடக்கி, ஒடுக்கப்பட்டு, அவர்கள் மீது பாரிய அட்டூழியங்கள், கொடூரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
இத்தகைய அடக்குமுறையில் இருந்து விடுதலை பெறுவதற்காகவே சிறுபான்மையினர் ஒட்டுமொத்தமாக மஹிந்தவுக்கு எதிராக வாக்களித்து 2015 ஜனவரியில் நல்லாட்சி உருவாக்கப்பட்டது. அதனால் முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, நிம்மதியாக வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அத்தேர்தலில் மைத்திரிக்கு சிறுபான்மையினர் ஆதரவு வழங்கியதென்பது மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காகவேயன்றி, மைத்திரி நல்லவர், வல்லவர், தகுதியானவர் என்பதற்காக அல்ல.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முதல் நான்கு வருடங்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களை நிலைகுலைய வைத்து, அவர்கள் மீது அக்கிரமங்களை கட்டவிழ்த்து விட்டு, ஒட்டுமொத்தமாக கருவறுக்க வேண்டும் என்கின்ற நோக்கிலேயே ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதில் சம்மந்தப்பட்ட சஹ்ரான்கள் கோட்டாபயவினால் சம்பளம் வழங்கப்பட்டு, போஷிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகின்றது. இதனை கெஹிலிய ரம்புக்வல, அனுர குமார திஸாநாயக்க போன்றவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவின் கருத்துக்கள் மூலமும் சஹ்ரான் பயங்கரவாதத்தின் பின்னணியில் யார் இருந்துள்ளனர் என்பதை எவராலும் ஊகித்துக் கொள்ள முடியும்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் பெண்களின் அபாயாவுக்கு பாரிய எதிர்ப்பு கிளம்பியது. முஸ்லிம் பிரதேசங்களில் வீதிகள் எங்கும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டன. முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் சோதனையிடப்பட்டன, முஸ்லிம் இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டனர், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது. மத்ரஸாக்கள் மூடப்பட வேண்டும் என்றனர். ஒரே நாடு ஒரே சட்டம் என்றனர். முஸ்லிம்களின் பொருளாதாரம் இலக்கு வைக்கப்பட்டது. சில இடங்களில் இனவாதிகள் களத்தில் குதித்து, முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசகள் மீது தாக்குதல்கள் நடத்தினார்கள். முஸ்லிம்களுக்கு எது நடந்தாலும் எவரும் என்னவென்று கேட்கக்கூடாது என்ற நிலை ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் சஹ்ரான் கும்பல் பயன்படுத்தப்பட்டதன் மூலம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
மஹிந்த ஆட்சியிலும் சரி நல்லாட்சியிலும் சரி முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக்கும்பல் என்பது ஒரே குழுவினர்தான் என்பதும் அதன் பின்னணியில் செயற்படுபவர் கோட்டாபய என்பதும் வெளிப்படையான உண்மையாகும். தமது ஆட்சியில் தொடக்கி வைக்கப்பட்ட முஸ்லிம் விரோத செயற்பாடுகளை முழுவீச்சுடன் தொடர வேண்டும் என்பதுடன் முஸ்லிம்களின் சமய, சமூக ரீதியான உரிமைகளை இல்லாமல் செய்ய வேண்டும், கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை துடைத்தெறிய வேண்டும் என்றும் அவர்கள் கங்கணங்கட்டிக் கொண்டு செயற்படுகின்றனர்.இத்திட்டங்களை வெற்றிகரமாக நடத்த வேண்டுமானால் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டும். அதற்காகவே சஹ்ரான்கள் பயன்படுத்தபட்டுள்ளனர். இந்த சஹ்ரான்களை போஷித்து, வளர்த்து, இவ்வாறு களமிறக்கியவர் கோட்டபாயவே என்கின்ற விடயம் தற்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.
மஹிந்த- கோட்டா தரப்பினர் இது பௌத்த நாடு என்கின்றனர். பௌத்த பெரும்பான்மை நாடு என்பது வேறு பௌத்த நாடு என்பது வேறு. பௌத்த பெரும்பான்மை நாடு என்றால் இண்ட்டில் சிறுபான்மையினர் தமக்கான அத்தனை உரிமைகளுடனும் வாழ முடியும் என்பதாக அமையும். ஆனால் இலங்கை பௌத்த நாடு என்றால் ஏனைய இனங்களுக்கு இந்நாட்டில் எந்த உரிமையும் கிடையாது என்பதாகும். அவ்வாறாயின் கோட்டாபய ஜனாதிபதியானால் இங்கு வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தினர் நிலை என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும். சிங்களவர்களின் வாக்குகளினால் மாத்திரம் அவர் வெற்றியீட்ட முனைவதன் சூட்சுமம் இதுதான் என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் கல்வி, கலாசார, பொருளாதாரக் கட்டமைப்புகளை முற்றாக அழிப்பதற்கான திட்டமிடல்களை பேரினவாத சக்திகள் மிக அழகாக செய்து முடித்து விட்டனர். அவர்களுக்கு இன்று தேவைபடுவது இராணுவ மயப்படுத்தப்பட்ட, மனிதாபிமானம் என்பது மருந்துக்கும் இல்லாத அதிகாரத் தலைமைத்துவம்தான்.
அதனால்தான் இந்த ஜனாதிபதித் தேர்தலை முஸ்லிம் சமூகத்தின் இருப்பையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்கான ஒரு தர்மயுத்தமாக பார்க்கின்றோம். அடுத்த சந்ததியினருக்காக இந்த தர்ம யுத்தத்தில் நாம் அனைவரும் முனைப்புடன் பங்காற்ற வேண்டிய பாரிய பொறுப்பை சுமந்திருக்கிறோம். இந்த தர்ம யுத்தத்தில் கோட்டா கும்பலை தோற்கடிக்க வேண்டியது நமது வரலாற்றுக் கடமையாகும்" என்றும் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் குறிப்பிட்டார்.