ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார்
குரங்கை அலங்கரித்து கோயில் கோபுரத்தில் குந்தவைத்து அதன் கையில் பூமாலை கொடுத்தாலும் குரங்கின் எண்ணமும், செய்கையும் மாறப்போவதில்லை.காரணம், அதற்கு பகுத்தறிவு இல்லை. ஆனால் பகுத்தறியும் ஆற்றல் இருந்தும் பரிணாம வளர்ச்சியை, சமூக மாற்றத்தை புரிந்துகொள்ளாமல் சிலர் குறுகிய எல்லைக்குள் சூழன்றுக்கொண்டு, ஏனையோரையும் திசைதிருப்ப முற்படுவது சமூகத்துக்கு இழைக்கும் பெரும் துரோகமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பில் கட்சி செயற்பாட்டாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் மலையக மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஹட்டனிலுள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று (04.11.2019) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வேலுகுமார் எம்.பி.மேற்கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“ஜனாதிபதி தேர்தலின்போதே முழு நாடும் ஒரு தேர்தல் தொகுதியாக மாறும். மக்களுக்கான உரிமைசார் விடயங்களை பேரம்பேசி வென்றெடுப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமும் உதயமாகும். அவ்வாறு கிடைத்த வாய்ப்பை தமிழ் முற்போக்கு கூட்டணி இம்முறை தக்கவகையில் பயன்படுத்திக்கொண்டது.
எமது கூட்டணியால் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்று அவற்றில் பிரதான அம்சங்களை தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ளார். ‘மலையக மக்கள்’ என விளித்து எமக்காகவும் பக்கங்களை ஒதுக்கி – உரிய வகையில் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
அதிலும் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களை கைக்கூலி என்ற நிலையிலிருந்து விடுவித்து சிறுதோட்ட உரிமையாளர்களாக. தமிழ் விவசாயியாக, சுயதொழிலாளியாக மாற்றுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பொறிமுறை குறுகிய மற்றும் நீண்டகால அடிப்படையில் செயற்படுத்தப்படும். நிலையான வருமானம் கிடைக்கும்வரை, அவர்களுக்கான நாளாந்த வருமானமாக 1500 ரூபா உறுதிசெய்யப்படும் எனவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
புது யுகத்தை நோக்கி பயணிப்பதற்காக சமூகமாற்றத்தை கருதி எம்மால் காத்திரமான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே – மக்கள்நலன்கருதி ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தின் வெற்றிக்காக இரவு –பகல் பாராது தீவிரமாக உழைக்கின்றோம்.
ஆனால் எமது சமூகத்திலுள்ள சிலர், 50 ரூபா எங்கே? அதையே வழங்காதவர்கள் 1500 ரூபாவை வழங்குவார்களா என்ற விடயத்தை மட்டுமே சமூகமயப்படுத்தி அது தொடர்பில் மட்டுமே கருத்தாடலை உருவாக்க முயற்சிக்கின்றனர். மலையகத்துக்கான தனி பல்கலைக்கழகம், தொழில்நுட்ப கல்லூரி, தொழில் பேட்டை, தொழில்வாய்ப்பு, அனைவருக்குமான வீட்டு திட்டம் ஆகியவை பற்றி கதைப்பதே இல்லை.
இந்த அணுகுமுறையானது எமது சமூகத்தை நாமே சிறுமைப்படுத்தும் – மட்டந்தட்டும் செயலாகும்.
தற்போதுள்ள நடைமுறையின் பிரகாரம் கூட்டுஒப்பந்தத்தின் ஊடாகவே தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்படுகின்றது. இம்முறை கூட்டுபேரத்தின் ஊடாக பெறப்பட்ட சம்பளம் போதாது என்பதால் அரசாங்க பங்களிப்புடன் ஒரு தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் முயற்சித்தோம். இதற்காக பல கடினமான தடைகளை கடக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றும் கட்டத்துக்கு வந்தோம்.
குறிப்பாக தனியார் துறைக்கு அரச பங்களிப்புடன் கொடுப்பனவு வழங்கும் நடைமுறை சட்டரீதியாக இல்லை. அதனை செய்யவேண்டுமானால் சட்டத்தில் மறுசீரமைப்பு செய்யவேண்டும். இதனை ஒரே நாளில் செய்துவிடமுடியாது. தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கினால் ஏனை துறையினரும் எதிர்காலத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்படும். இவ்வாறு இந்த நடைமுறையில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இதன்காரணமாகவே தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது.
பிரதேச சபைகளின் நிதி, தோட்டப்பகுதிகளுக்கு செல்வதை தடுக்கும் சட்ட ஏற்பாட்டை மாற்றியமைப்பதற்கு கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் எடுத்தன. அதனைகூட நாமே வெற்றிகரமாக செய்துமுடித்தோம்.
எனவே, 50 ரூபா என்ற விவகாரத்தை செய்வது எமக்கு பெரிய விடயமல்ல. இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தலும் வந்துவிட்டதால் எமது மக்களை நிலையான வருமானம் பெறுபவர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்கினோம். அந்த முயற்சி கைகூடியுள்ளது. எனவே, போலிவார்த்தைகளுக்கு ஏமாறாமல் சிந்தித்து வாக்களிக்குமாறு எமது மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” என்றார்.