''ஆர்.பிரேமதாசா அவர்களை எமது மறைந்த தலைவர் ஜனாதிபதியாக்கியதுபோல் அவரது மகன் சஜித் பிரேமதாசாவை எமது இப்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதியாக்குவார்.இது சஜித்துக்குரிய தேர்தல் அல்ல.எமது தலைவர் ரவூப் ஹக்கீமுக்குரிய தேர்தல்.''
இவ்வாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறினார்.
சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இறக்காமத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் கூறுகையில்;
அன்று ஆர்.பிரேமதாசா அவர்களை ஜனாதிபதியாக்கியவர் எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள்.அதேபோல்தான் நாங்கள் இன்று மகன் சஜித் பிரேமதாஸா அவர்களை நாங்களே ஜனாதிபதியாக்குவோம்.
அந்த 52 நாள் ஆட்சிக் கவிழ்ப்பின்போதே எமது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் ரணிலிடம் கூறினார் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என்று.
இந்தத் தேர்தல் சஜித்துடைய தேர்தல் அல்ல.முஸ்லிம் காங்கிரஸுடைய தேர்தல்.முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடைய தேர்தல்.
இந்தத் தேர்தலில் நாங்கள் தோல்வியடைந்தால் முஸ்லிம் சமூகம் பெரும் ஆபத்தை எதிர்நோக்கும்.நாங்கள் மைத்திரியை வெல்ல வைப்பதற்காக 85 வீதமான வாக்குகளை அளித்தோம்.அந்த வேகம் இப்போது குறைந்துள்ளது.
கோட்டா தரப்பு முஸ்லிம்களின் வாக்களிக்கும் வீதத்தைக் குறைப்பதற்குத் திட்டமிட்டு செயற்படுகின்றனர்.பிரதேச உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து வாக்களிப்பைக் குறைக்குமாறு கூறி இருக்கின்றார்களாம்.
அவர்களுக்குத் தெரியும் முஸ்லிம்கள் கோட்டாவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்று.வாக்களிப்பை குறைத்தால் சஜித்துக்குச் செல்கின்ற வாக்குகளே குறையும் என்று அவர்களுக்குத் தெரியும்.இந்த சதிக்குள் யாரும் சிக்கிவிட வேண்டாம்.
எமது வாக்களிப்பு வீதம் 90 ஆக இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் முஸ்லிம்களின் நிலைமை மிக மோசமாக மாறிவிடும்.இதை நீங்கள் நினைவில் வைத்திருங்கள்.
ஒருபுறம் ஹிஸ்புல்லாஹ்.அவர் அவரது பல்கலைக்கழகத்தை காப்பாற்றுவதற்காக பாடுபடுகிறார்.தனித்துப் போட்டியிட்டு கோட்டாவுக்கு இரண்டாவது விருப்ப வாக்கைப் பெற்றுக்கொடுக்கும் வேலையில் அவர் இறங்கி இருக்கிறார்.இது எமது சமூகத்துக்குச் செய்யும் சதியாகும்.
கோட்டா இப்போது எமது மக்களுக்கு ஆதரவாக எது வேண்டுமானாலும் சொல்வார்.ஆனால்,அவர் வென்றதன் பின் மாறிக்கொள்வார்.எமது சமூகத்துக்கு எதிராக செயற்படுவார்.அவரைப்பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆகவே,மக்கள் சிந்திக்க வேண்டும்.ஒவ்வொருவரும் அன்னச் சின்னத்துக்கு வாக்களித்து சஜித் பிரேமதாசா அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.-என்றார்.