ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
பஸ்னா ஆதீப்-இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையின் ’விடியும் வேளை’ நிகழ்ச்சிக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரருமான ரவூப் ஹக்கீம் வழங்கிய நேர்காணல்
கேள்வி: நீங்கள் இந்த அரசாங்கத்தின் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்திருக்கிறீர்கள்?
பதில்: அரசின் பங்காளிக் கட்சி என்ற வகையில், எங்களுடைய சமூகம் சார்ந்த நலன்சார்ந்த விடயங்களான இனப் பிரச்சினைக்குரிய தீர்வு, அரசியல் யாப்பு திருத்தம், வெவ்வேறு சட்டவாக்க உருவாக்கம் போன்ற விடயங்களில் சமூகநலன் பாதிக்காது நாட்டின் தேசிய நலனை முன்னிறுத்தியும், இனங்களுக்கிடையிலான சமத்துவம் பேணும் விடயங்களில் மிக அவதானமாக இருந்து எங்களுடைய பங்களிப்பை நாம் செய்து வந்திருக்கிறோம்.
ஜனாதிபதியின் சில முரண்பாடான நடவடிக்கைகளின் காரணமாக சீர்த்திருத்த செயற்பாடுகள் பலவற்றில் இடையிடையே பலவித குறுக்கீடுகள் ஏற்பட்டு அவற்றில் தாமதம் ஏற்பட்டுள்ளன. இரண்டு பிரதானமான கட்சிகளையும் பொருத்தமில்லாமல் இணைத்துக் கொண்டு செல்கின்ற நிலை சாத்தியமற்றது என்ற எண்ணப்பாட்டுக்கு நாங்கள் வந்திருக்கிறோம்.
ஆகவேதான், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஆளுமையாக அடையாளம் காணப்பட்ட ஒரு வேட்பாளரை முன்னிறுத்தினால் மாத்திரமே இவற்றிலே சரியான முன்னேற்றத்தை காணமுடியும் என்ற புரிந்துணர்வுக்கு நாங்கள் எல்லோரும் வந்திருக்கிறோம். இதன் அடிப்படையிலேயே தற்போதைய தெரிவும் அதன் பின்னரான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசின் அங்கமாகவிருந்து எல்லா பிரதேசங்களிலும் எங்களால் முடியுமான ஆகக்கூடிய அபிவிருத்தி திட்டங்களை நாங்கள் செய்திருக்கிறோம். முன்னர் இருந்த அரசாங்கத்தைவிட பிராந்திய ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் பாரிய அபிவிருத்தி செயற்பாடுகளை செய்திருக்கிறோம். குறிப்பாக, பல பிரதேசங்களில் வீதி புனரமைப்பு, நீர் வழங்கல் தொடர்பான அபிவிருத்தி வேலை திட்டங்களை என்னுடைய அமைச்சின் நிதியொதுக்கீட்டில் செய்து முடித்திருக்கிறோம்.
நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி ஆகிய அமைச்சுக்களின் மூலமாக ஒவ்வொரு துறையிலும் அனைத்து இன மக்களும் பயன்பெறும் வகையில் சமத்துவம் பேணும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை செய்து கொடுத்துள்ளேன்.
யாழ். குடாநாட்டில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் வரட்சி நிலையை நிவர்த்தி செய்யவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்களை முன்னெடுப்பதிலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உடன்பாடின்மை போன்ற விடயங்களில் தடைகள் காணப்படுகின்றன.
யாழ்ப்பாணத்துக்கு கிளிநொச்சியிலிருந்தும் இரணைமடு குளத்திலிருந்தும் நீரை கொண்டுசெல்வதில் காணப்படும் அரசியல் முரண்பாடுகள், குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இத்திட்டத்தை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளன. இருந்தாலும் மிக விரைவாக இவற்றை நிவர்த்தி செய்து இத்திட்டத்டை முன்னெடுப்போம்.
இதற்காக இரணைமடு குளத்தை பாரிய செலவோடு இரண்டு அங்குளம் அளவுக்கு உயர்த்தி பாரிய வேலைத்திட்டத்தை செய்துள்ள போதிலும், நிலவிவரும் முரண்பாடு காரணமாக இத்திட்டத்தை முன்னெடுத்து செல்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு புறம்பாக முதன்முறையாக கடல் நீரை சுத்திகரித்து யாழ். குடாநாட்டுக்கு வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியோடு மிகப்பெரிய செயற்றிட்டத்தை அமுலாக்கும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அதேபோல் மன்னார் பிரதேசத்திலும் கூட பாரிய நீர் வழங்கல் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளோம்.
சில இடங்களில் கேள்விப்பத்திரங்கள் கோருவதற்கு தாமதங்கள் ஏற்பட்டாலும் பாரியளவில் அபிவிருத்தி திட்டங்களை செய்து முடித்துள்ளோம். பல இடங்களில் அபிவிருத்திகளை செய்து கொண்டிருக்கின்றோம். எதிர்வரும் காலங்களில் அந்த அபிவிருத்தி திட்டங்கள் யாவற்றையும் வெற்றிகரமாக முடிக்கவுள்ளோம்.
கிழக்கில் பொத்துவில் பிரதேசத்துக்கு ஹெடஓயா நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன திட்டத்தை வழங்கும் திட்டத்திலும் பல முரண்பாடுகளுக்கு மத்தியில் அதனை முன்னெடுத்து வெற்றிகண்டுள்ளோம். ஓட்டமாவடி, வாழைச்சேனை, திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி, மாத்தறை போன்ற உல்லாசப் பயணிகள் அதிகமாக வருகை தரும் பிரசேதங்களுக்கு சுத்தமான நீரை கொண்டு செல்வதற்குரிய பல திட்டங்களை இப்போது முன்னெடுத்துள்ளோம்.
இதுவரையில் சுமார் 17 நீர் வழங்கல் திட்டங்களை 300 பில்லியன் ரூபா செலவில் இலகு கடன் முறையில் நிதிகளைப் பெற்று அமுல்நடாத்தியுள்ளோம். இவ்வளவு பெரிய தொகையை முன்னைய எந்தவொரு அரசாங்கமும் முன்னெடுக்காத நிலையில், எமது இந்த அரசாங்கத்தின் மூலம் அபிவிருத்திக்காக இவ்வளவு நிதிகளை இலகு கடன் முறையில் பெற்றுக்கொண்டுள்ளோம்.
உயர் கல்வி அமைச்சை பொறுப்பெற்று 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில் புதிய வளாகங்களை அமைப்பதில் கவனம் செலுத்தியுள்ளோம். குறிப்பாக வவுனியா பல்கலைக்கழகத்தை தரமுயர்த்தியுள்ளோம். அதற்கான ஒரு வளாகம் மன்னாரிலும், முல்லைத்தீவிலும் அமைய வேண்டுமென்ற செயற்றிட்டங்கள் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளள.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக கல்வி பீடமொன்றை உருவாக்குவதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்மாந்துறையில் விவசாயத் துறைக்கு புதிய கல்வி பீடமொன்றை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மிக துரிதமாக முன்னெடுத்துள்ளோம்.
உள்ளூரில் இருக்கின்ற பல பிரச்சினைகளில் மிக முக்கியமான பிரச்சினைதான் காணிப் பிரச்சினை. மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்ட இந்தக் காணிகளை விடுவிக்கின்ற விவகாரங்களில் நாங்கள் கவனம் செலுத்திவருகிறோம்.
கேள்வி: 7ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வித நிபந்தனைகள் அற்ற நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரிப்பதான ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதுதொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?
பதில்: நிபந்தனைகள் என்பதை விடவும் பரஸ்பர இணக்கப்பாட்டின் மூலம் ஒரு செயற்பாட்டுக்காக இணங்குதல் என்பதே மிக முக்கியமான விடயமாக நோக்கப்பட வேண்டும். ஒரு தரப்பினரை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி, வலியுறுத்தி ஆட்சித் தலைவரை செய்விப்பது போன்ற பார்வை ஏற்படும்போது அது இந்நாட்டின் அரசியல் கலாசாரத்தை பொறுத்தமட்டில், நாட்டுப்புற பௌத்த சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் தவறான அபிப்ராயத்தை தோற்றுவிக்கின்றது.
இதனால், நாங்கள் இந்த தரப்பை வெல்லவைப்பதற்கான நோக்கத்தை தவறவிடும் அபாயம் இருக்கின்றது. இந்நிலையில்தான் ஒரு உபாயமாகவே இதனை கையாண்டுள்ளோம். நாங்கள் மாத்திரமல்ல, நாட்டிலுள்ள அரசாங்கத்தை ஆதரிக்கின்ற அனைத்து சிறுபான்மை கட்சிகளும் இந்த அணுகுமுறையை கையாள்வதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.
குறிப்பாக, மலையக கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் நேரடியாக தமது ஆதரவுகளை தெரிவிப்பதாக கூறியிருக்கின்றன. இரு கட்சிகளும் கடந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியதன் அடிப்படையில், ஆரம்பித்துள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை செய்து முடிக்கவும், எஞ்சியுள்ளவற்றை எதிர்வரும் காலங்களில் செய்வதற்கு ஒத்துழைக்கவும் புதிய வேட்பாளரை தெளிவுபடுத்தி அவரிடமிருந்து உத்தரவாதங்களை நேரடியாக பெற்றிருக்கிறோம். அத்தகைய தலைமையொன்றையே நாம் தெரிவு செய்துள்ளோம். இத்தகை தருணத்தில் தலைமைகள் மீது நம்பிக்கை வைப்பது மக்களின் பாரிய தார்மீக பொறுப்பாகும்.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்பு, இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், தலையீடுகள், எதிர்காலத்தில் எதிர்நோக்கவுள்ள கெடுபிடிகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கின்றபோது, நாங்கள் எந்த தரப்பை தெரிவுசெய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவான நிலைப்பாடு இருக்கவேண்டும். இத்தெரிவில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது.
ஏனென்றால், கடந்தகால நடவடிக்கைகளை ஒப்பீட்டு ரீதியாக பார்க்கும்போது இந்த செயற்பாடுகளின் பின்னாலிருந்த சக்திகளை ஊக்குவித்தது யார்? எந்த சக்திகள் எந்த தரப்பின் மேடைகளில் இன்று முழங்கித் திரிகின்றன என்பதை அவதானித்தாலே, இது சம்பந்தமான சரியானதொரு புரிந்துணர்வை மக்கள் அடைந்து கொள்ளலாம்.
என்னைப் பொறுத்தமட்டில் நாட்டின் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டுவதில் பாரபட்சம் இருக்க முடியாது. அதை நாங்கள் கடந்த காலங்களில் கண்டிருக்கிறோம். நாட்டில் பயங்கரவாத கெடுபிடி இருக்கின்றபோது கடுமையான நடவடிக்கைகள் நடக்கத்தான் வேண்டும். ஆனால், முழு முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதிகளாக சித்தரித்த நடவடிக்கைகளினால் மிகவும் புண்பட்டு போயிருந்த எமது சமூகத்தை மீட்டெடுக்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருக்கின்றது.
சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவது மட்டுமல்லாது சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்திலும் சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம் ஏனைய புலனாய்வு நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வுத்துறைக்குள்ளே இருந்த அசமந்தப்போக்கு இந்த நிலைமைக்கு காரணமாக இருந்தது. அது மட்டுமல்லாது இப்போது எங்களுக்கிடையே தெளிவொன்றும் பிறந்துள்ளது. ஒரு கும்பல் முஸ்லிம் சமூகத்துக்குள் ஒழிந்துகொண்டு செய்த இந்த நாசகார வேலை இனிமேலும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வேட்பாளர்கள் மேடை மேடையாக புலனாய்வுத்துறையை கட்டியெழுப்புவோம், நாட்டின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவோம் என்று முழங்கித் திரிகின்றனர். இவர்கள் என்னதான் முழங்கினாலும், இன்று முஸ்லிம் சமூகமானது சுயமாகவே நாட்டின் பாதுகாவலராக மாறியிருக்கின்றனர். எங்களது சமூகத்துக்குள் இவ்வாறான பயங்கரவாதம் தலைதூக்குவதற்கான அறிகுறி ஏதும் தென்பட்டால், அவர்களை காட்டிக்கொடுத்து அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதில் சமூகம் முனைப்புடன் இருக்கிறது.
மதத்தின் பெயரைப் பாவித்து புத்தி பேதளித்த இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மதத்துக்கு இழி பெயரை கற்பிக்கின்ற இவ்வாறாக கூலிப்படைகளின் மோசமான செயற்பாடுகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது. இதற்கு சமூகம்தான் முதலாவதாக பொறுப்புக்கூற வேண்டும் என்ற அடிப்படையில் எமது செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.
இந்தப் பிரச்சினையின் பின்னணியில் நாம் சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்கினோம். இதற்காக நிறைய சங்கடங்களை எமது சமூகம் சந்தித்தாலும், அவற்றையெல்லாம் சட்டத்தின் மூலம் நியாயமான முறையில் தீர்த்துக் கொண்டோம். இன்றும் கூட அந்தப் பிரச்சினைகள் முழுமையாக தீர்ந்துவிடவில்லை.
இருப்பினும் நாட்டின் நீதிச் சேவைகளை சரிவர நெறிப்படுத்துகின்ற இந்த அரசாங்கத்தின் முக்கியமான முன்னேற்றங்களுள் ஒன்றான நீதித் துறையின் சுதந்திரமான செயற்பாட்டை நாம் பல சந்தர்ப்பங்களில் அவதானித்துள்ளோம்.
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி பலவந்தமாக இந்த நாட்டின் ஜனநாயகம் பறிபோனபோது அதை பாதுகாப்பதிலே நீதிமன்றங்கள் வழங்கிய பங்கை மக்கள் மறந்துவிடலாகாது.
இவற்றையெல்லாம் இயலச்செய்த ஓர் அரசு, இதை முன்கொண்டு செல்வதற்கும் எங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள், கஷ்டங்கள் இனியும் நிகழாதிருக்க சரியான உத்தரவாதங்களோடு புதிய ஆட்சித் தரப்பை வலுப்படுத்துவதன் மூலம் அதனை செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
கேள்வி: சிறுபான்மை வேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்பில்லாத சூழலில், முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக ஹிஸ்புல்லாஹ் போன்றோர் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: அண்மைய பயங்கரவாத செயலோடு பேசப்பட்ட பூர்வீகமாக கருதப்பட்ட காத்தான்குடி நகருக்கு நான் சென்றிருந்தேன். அந்த மண்ணிலிருந்து வேட்பாளர் ஒருவர் வெளிவந்து, நாடு பூராகவும் தனக்கு அரசியல் செல்வாக்கு கிடைக்கும் என்ற மாயையில் மிக அபத்தமான வங்குரோத்து அரசியல் செயற்பாட்டை செய்துகொண்டிருக்கிறார். இதுதொடர்பில் காத்தான்குடியில் மிக விரிவாகப் பேசியிருந்தேன்.
இந்தப் பேர்வழிகள் ஏதோ பெரிய தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதாக ஒரு பார்வையை பரப்புவது மிகவும் பிழையான விடயமாகும். அவரை பச்சாதாபமடைய வேண்டியுள்ளதே ஒழிய, இதை பெரிய விடயமாக கருதி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. நான் அங்கு பேசிய பேச்சினாலே, மாற்றுத்தரப்பு தற்போது கடுமையாக பயந்துபோய் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
அவர்களைப் பொறுத்தமட்டில் மறைமுகமாக முஸ்லிம்களின் வாக்குகளை திசைதிருப்புவதற்கு எடுத்த முயற்சி வீணாகுவது ஒருபுறம், இவ்வாறு செய்த சிங்கள பெரும்பான்மையின மக்களின் வாக்குகளும் வீணாகிப்போகும் என்ற அச்சம் மறுபுறம் தோன்றியுள்ளது. முஸ்லிம் ஜனாதிபதி வேட்பார் ஒருவர் களமிறங்குவதைப் பார்க்கிலும், வெற்றி பெறக்கூடிய தரப்பை ஆதரிப்பதன் மூலமே எங்களது தரப்பு நியாயங்களை சரியாக முன்வைக்க முடியும்.
எங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய தரப்புக்கு ஆதரவை வழங்கி நிம்மதியான, சுபீட்சமான வாழ்க்கையை ஏனைய சமூகங்களுடன் இணைந்து வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தக்கூடிய வேட்பாளரை தெரிவுசெய்வதில் எங்களுக்கு சிக்கல்களும் இருக்கவில்லை. இதனடிப்படையில்தால் இந்த நடவடிக்கைகள் யாவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கேள்வி: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்: நிச்சயமாக கடந்த தேர்தலில் இடம்பெற்ற 80% வாக்குப் பதிவானது இம்முறை அதை விடவும் மேலாக வாக்குப் பதிவுகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய என்னிடம் கூறினார். கடந்த தேர்தலில் கல்முனை, மூதூர் போன்ற பிரதேசங்களில் அதிக வாக்களிப்பு பதிவாகியுள்ளன. சில வாக்குச் சாவடிகளில் 12 மணியளவில் வாக்குப் பதிவுகள் நிறைவு பெற்றன.
இப்போது வெறும் முகஸ்துதிக்காக முஸ்லிம்களின் பாதுகாப்பு, தமிழ் மக்களின் சுபீட்சம் சம்பந்தமாக இப்போது மேடைகளில் பேசித்திரிகின்ற இந்த தரப்பு கடந்த காலங்களில் எவ்வாறு நடந்துகொண்டன என்பதை நாம் மறந்து விடலாகாது. முஸ்லிம் சமூகத்தின் இருப்பு கேள்விக்குறியான நிலையில், தமது கௌரவத்தையும் தனித்துவத்தையும் காண்பிப்பதற்காகவும் தமக்கான தலைமையை தெரிவுசெய்வதில் மும்முரமாக தங்களது பங்களிப்பை வழங்குவார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
சிறுபான்மை பிரதேசங்களில் அச்சத்தை ஏற்படுத்தி தமது இருப்பை தக்கவைப்பதற்காக கிறீஸ் மனிதன் போன்ற திட்டங்களை திட்டமிட்டு மேற்கொண்ட ஆட்சியாளர் கூட்டம்தான் இப்போது புதிய முகமூடி போட்டுக்கொண்டு சிறுபான்மை மக்களுக்கு குரல் கொடுப்பவர்களாக பிரதிபலிக்க முற்படுகின்றனர். இதை விடவும் பெரிய ஏளனம் இருக்க முடியாது.
கடந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகளினால் முழு சர்வதேசமும் எம்மை விட்டு விலகக்கூடிய அபாயம் ஏற்பட்டது. நாங்கள் சர்வதேசத்தின் ஓர் அங்கமாக இருக்கின்ற நிலையில், அதன் நியதியை மீறிச் செயற்பட்டு ஒருநாளும் இந்நாடு சுபீட்சத்தை எட்டமுடியாது. இந்த விவகாரங்களில் நாட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைகள், அவற்றினால் ஏற்பட்ட தாக்கங்கள், பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து பொருளாதார தடையை விதிக்கக்கூடிய அபாயத்தை எட்டியது. அச்சமயத்தில் நாங்கள் ஒற்றுமையாக இருந்த காரணத்தினால் அதிலிருந்து தப்பித்துவிட்டோம்.
அடுத்த கட்டமாக நாட்டின் ஊழல் விவகாரங்கள் தொடர்பிலும் பேசுகின்றனர். முக்கியமாக மத்திய வங்கியின் விவகாரத்தை எடுத்துக்கொண்டால், அதிலும் வெளிப்படைத் தன்மையோடு நடந்துகொண்டமையினால் அனைத்தையும் மூடிமறைக்க எத்தனித்த போதிலும் அது கிட்டவில்லை. மாறாக அந்த இயந்திரங்கள் சரியாக இயங்கின. சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு மோசடி செய்யப்பட்ட 11 பில்லியன் ரூபா இப்போது முழுமையாக அரசுடமையாக்கப்பட்டுள்ளது. இதுவே முன்னைய அரசாங்கமாக இருந்தால் இத்தொகை முடக்கிவிடப்பட்டிருக்கும். வெளிப்படைத் தன்மையோடு அணுகும்போதே அதில் உண்மை தன்மை இருக்கும்.
கேள்வி: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் இரு தரப்பினரும் அரசியல் பின்புலம் சார்ந்தவர்களாக இருக்கும் நிலையில் சமூகத்துக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் இரு தரப்பினருடனும் பேச்சுவார்தை நடத்தி தனது ஆதரவை தெரிவித்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் நிலவுகின்றதல்லாவா?
பதில்: இந்த தேர்தலை பொறுத்தமட்டில் எங்களுக்கு வேறெந்த தெரிவுகளும் இருக்கவில்லை. வெறும் சாட்டுக்காக மாத்திரம் பேச்சுவார்த்தைக்கு செல்வதில் அர்த்தமில்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்ற சில பலவீனங்களை களைவதன் மூலம்தான் வெற்றியடையலாம் என்பதில் நான் தனித்துநின்று போராடியிருக்கிறேன். ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எங்களது பங்காளிக் கட்சிகளும் எனது முடிவை ஏற்றுக்கொண்டன. அதன் விளைவுதான் புதியதொரு இளம் வேட்பாளர் களமிறங்கியுள்ளார்.
இந்த புரிந்துணர்வு என்றோ நிகழவேண்டியது. அவ்வாறு ஏற்பட்டிருந்தால் நாங்கள் அன்றே வெற்றியை கிட்டியிருப்போம். இவ்வாறான யுக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒருவர் திடீரென தொப்பி பிரட்டியாக மாறி, பேரம்பேசிக் கொண்டிருக்கின்றார் என்பது அரசியல் நம்பகத்தன்மையை முழுமையாக வீணடிக்கின்ற செயலாக அமைந்துவிடும். நான் சிறுபான்மை சமூகமொன்றின் அரசியல் தலைமை என்ற அடிப்படையில் என்னைப் பற்றி என்ன விமர்சனம் செய்தாலும் அரசியல் நேர்மை என்ற விவகாரங்களில் நான் என்றுமே தவறியதில்லை.
கடந்த காலத்தில் கட்சி பாதிக்கப்படக்கூடாத சில முடிவுகளின் பின்னணியில் முன்னைய ஆட்சியை ஆதரிக்க வேண்டிய பலவந்த நிலைக்குள்ளானோம். கட்சிக்குள் பிளவு ஏற்படலாகாது, உறுப்பினர்களை காவுகொள்ளக் கூடாது என்பதற்காக நாங்கள் எடுத்த பிரயத்தனங்கள் வெளியில் பலருக்குத் தெரிவதில்லை.
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் நான் அடைந்த கஷ்டம் எவரும் அடைந்திருக்க மாட்டார்கள். 8 பாராளுமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பதற்காக புனித மக்கா நகருக்கு அழைத்துச் சென்று வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டுதான் மீளழைத்து வந்தேன். அவ்வளவு தூரம் அழுத்தம் கொடுத்தார்கள். நாட்டின் ஜனநாயகத்தை பின்கதவால் பறிக்க முற்பட்ட ஒருதரப்பு, இப்போது முன்கதவால் ஜனநாயகம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. இதனை முறியடித்து, நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக செயற்பட்டது குறித்து நாங்கள் பெருமைகொள்கிறோம்.
கேள்வி: ஏப்ரல் தாக்குதலைத் தொடர்ந்து குருநாகல், கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்களை இலக்குவைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது நீங்கள் வழங்கும் ஆதரவின் மூலம் இப்படியான இனவாத தாக்குதல்களை முறியடிக்கப்படுமா?
பதில்: சட்டத்தின் ஆட்சியை எவ்வித தலையீடுகளும் இல்லாமல் நடைமுறைப்படுத்துவதற்கு சரியான தலைமையிடம் ஆட்சி போவதன் மூலமே சாத்தியமாகும். இதைத்தான் நாங்கள் சட்டத்தின் ஆட்சி என்று சொல்கிறோம். இது ஜனநாயக நாட்டின் அடிப்படையாகும். இது இல்லாமலாகும்போது வெவ்வேறு தலையீடுகள் எட்டிப் பார்க்கும். சுயாதீன செயற்பாடுகளில் பலவீனங்கள் ஏற்படாது செயற்படுத்துவதற்கு ஒரு பொறிமுறை அவசியமாகின்றது. அதற்கான பொறிமுறை பற்றித்தான் நாங்கள் இப்போது சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
பாராளுமன்றத்தை பொறுத்தமட்டில் தனியான தெரிவுக் குழுவொன்றை அமைத்து, இது தொடர்பான சிபாரிசுகளை செய்துகொண்டிருக்கிறது. இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம். அதில் கூறப்படும் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.
இந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக யாரையும் விலைக்கு வாங்கி, கூலிக்கமர்த்தி செய்து கொள்ளலாம் என்ற அளவுக்கு மிக மோசமான ஊடுறுவல் நடந்திருக்கின்றது என்பது மிக துலாம்பரமாக தெரிகின்றது. என்னைப் பொறுத்தமட்டில் ஐ.எஸ். என்று சொல்லப்படுகின்ற விடயங்கள் யாவுமே வெளிப் பார்வைக்கு மாத்திரமே ஒழிய, நிச்சயமாக ஒரு வெளிச்சக்தியின் தலையீடும் இருக்கத்தான் செய்கின்றது.
நாட்டின் ஸ்திரத்தன்மையை குழைக்கச் செய்து தமது சொந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், தேவையேற்படும்போது ஆட்சி மாற்றத்தைக்கூட கொண்டுவந்து விட்டால் என்னவென்று சிந்திக்கின்ற அளவுக்கு இந்த சக்திகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எங்கள் மத்தியில் இருக்கின்றன.
அண்மைக்கால நிகழ்வுகளோடு சேர்த்து, யார் யாரெல்லாம் அங்கு போய் சேர்கிறார்கள் என்பதை கவனிக்கும்போது, அதிலே வெளிச்சக்தியின் செயற்பாடு இருந்திருக்கிறது என்றும் இதுவொரு சங்கிலித் தொடரான நிகழ்ச்சிநிரல் என்று யூகிக்க முடிகின்றது. ஒக்டோபர் 26 முதல் ஏப்ரல் 21 வரை இடம்பெற்ற விடயங்கள் யாவுமே இயல்பாக நடந்த விடயங்களல்ல. எல்லாமே திட்டமிட்டு சங்கிலித் தொடராக அரங்கேற்றப்பட்டு, கைதேர்ந்தவர்கள் செய்ய முற்பட்டு சில இடங்களில் தோற்றுப்போய் சில இடங்களில் வெற்றிபெற்றாலும் இன்னும் முற்றுப்பெறாத நிகழ்ச்சி என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அத்தகைய கும்பல்கள் வெற்றிபெற இடமளிக்கக் கூடாது. ஏனென்றால் இந்த நாட்டின் சிறுபான்மை மக்களின் சகவாழ்வுக்கு வேட்டு வைத்தாயினும் சரி, ஆட்சியை பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நடத்தப்படுகின்ற பெரியதொரு நாடகத்தின் அங்கமாகத்தான் இந்த விடயங்களை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
கேள்வி: பிரதான வேட்பாளர்கள் இவரும் சிறுபான்மை மக்களுக்காக அதை தருகிறோம், இதை தருகிறோம் எனக்கூறி அணிதிரட்டுவதை அவதானிக்க முடிகிறது. இதுதொடர்பில் உங்களது கருத்து என்ன?
பதில்: கேள்வியில் சிறிய திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. இரு தரப்புமே சிறுபான்மை மக்களுக்கு எதை வழங்குவார்கள் என்பதை இதுவரையில் தெளிவாக எங்குமே கூறாமல் நழுவி செல்லும் பாங்கையே காணக்கூடியதாக இருக்கிறது. கூர்மையாக அவதானித்தால் இதை விளங்கிக் கொள்ளலாம். மேலோட்டமாக சில விடயங்களை பேசிப் போகின்றார்களே ஒழிய, பெரும்பான்மை பௌத்த சிங்கள வாக்குகளில் குறியாக இருக்கின்றனர். எங்களுடைய தரப்பு இதனை ஓர் உபாயமாகவே பார்க்கின்றது.
கேள்வி: அவ்வாறானால், கோட்டாபே ராஜபக்ஷ பள்ளிவாசல்களுக்குச் சென்று தமது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் பாதுகாப்பதாக கூறுகின்றாரே?
பதில்: சட்டமும் ஒழுங்கும் இல்லாத நாட்டில் ஒருபோதும் சுபீட்சம் மலராது. ஆட்சி நீடிப்பை மாத்திரம் கருத்திற்கொண்டு சிறுபான்மைகளை இலக்கு வைத்து செய்கின்ற திருவிளையாடல்கள் இனியும் பலிக்காது. காலம் கடந்தாவது ஞானம் பிறந்திருக்கலாம் என்ற அடிப்படையில் பள்ளிவாசல்களிலும், கத்தோலிக்க தேவாலயங்களிலும் சென்று கதைத்திருக்கலாம்.
ஏப்ரல் தாக்குதலின் பின்னர் கத்தோலிக்க சமூகமும் முஸ்லிம் சமூகமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இவ்விரு தரப்புமே கடந்த தேர்தலில் அதிக பெரும்பான்மையாக ஆட்சி மாற்றத்துக்காக வாக்களித்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை திசைதிருப்ப அரங்கேறிய நாடகமே அது. இதைவைத்து பிழைப்பு நடத்துகின்ற வங்குரோத்து அரசியலுக்கு நாங்கள் முடிவுகட்ட வேண்டும். அதைத்தான் இந்த தேர்தலில் சிறுபான்மையின மக்கள் விளங்கிகொள்ள வேண்டும்.