ஐ. ஏ. காதிர் கான்-
கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பியகம பிரதேச செயலகப் பிரிவின் தாழ் நிலப் பிரதேசங்கள், (22) பிற்பகல் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.
இதுவரை இப்பிரதேசச் செயலகப் பிரிவில் மள்வானை, மாபிம மற்றும் பட்டிவில ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 58 குடும்பங்களின் 245 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மள்வானைப் பிரதேசத்தில் உள்ள சில பாடசாலைகள் வெள்ளத்தால் சுற்றி வர மூழ்கியுள்ளதால், பாடசாலை மாணவர்களின் வருகையும் மிகவும் குறைந்து காணப்பட்டதோடு, மள்வானை அல் முபாரக் கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 711 மாணவர்களும் (22) பாடசாலைக்குச் சமூகமளித்திருக்கவில்லை.
மேலும், மள்வானை மற்றும் மள்வானையோடு சம்பந்தப்பட்ட வீடுகள் மற்றும் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், வாகனப் போக்குவரத்தும் தடைப்பட்டது.
இதேவேளை, பியகம பிரதேச செயலாளர் சந்திமா சூரியராச்சி உட்பட கம்பஹா அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அதிகாரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கைகளை எடுத்தனர்.