முஸ்லிம் சமூகம் இரு பக்கமும் நிற்பதே நமக்குப் பாதுகாப்பாகும். எனவே, இரு தரப்பாக முஸ்லிம் மக்களும் நின்று கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கும் தமது வாக்குகளை அளிக்க முன்வர வேண்டும் என, ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
இராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று, இன்று (23) புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
இச்சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது,
கடந்த அரசாங்கத்தில் அளுத்கம, பேருவளை போன்ற இடங்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, அந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கு முதலில் முன் வந்தவன் நானாகும். காரணம், நான் எப்போதுமே சமூகத்தை நேசிப்பவன். ஆனாலும், அந்த அரசாங்கத்தை மாற்றி ஐ.தே.க. தலைமையிலான இந்த அரசை நாம் கொண்டு வந்த போது, இந்த அரசு கடந்த அரசை விட மிக மோசமான அரசாக இருந்ததைக் கண்டோம்.
இந்த அரசு மாற்றத்தில் முஸ்லிம்கள் எவ்வித நன்மைகளையும் அடையவில்லை. இந்த நிலையில், சமூகத்தின் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி பதவிகளை இராஜினாமாச் செய்த முஸ்லிம் அமைச்சர்கள், சமூகத்தின் எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்காமல் மீண்டும் பதவிகளை ஏற்றனர்.
முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு முக்கியம். ஆனால், ஐ.தே.க. அரசால் முஸ்லிம்களைப் பாதுகாக்க முடியாது என்பதே உண்மை. நாட்டின் வரலாற்றைப் பார்க்கும்போது, ஐ.தே.க. ஆட்சியிலேயே சிறுபான்மை மக்கள் அதிகமான பாதிப்புக்களைக் கண்டனர்.
இன்று 19 பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித்தின் பக்கம் உள்ள நிலையில், நானும் காதர் மஸ்தானும் மாத்திரமே, கோத்தாபயவின் பக்கம் நிற்கின்றோம். முஸ்லிம் சமூகம் இரு பக்கமும் நிற்பதே நமக்குப் பாதுகாப்பாகும். அந்த வகையில், முஸ்லிம் மக்களும் இரு தரப்பாக நின்று, கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் வாக்களிக்க வேண்டும்.
2015 இல் முஸ்லிம்களின் வாக்குகளால் அரசாங்கம் மாறியது. இம்முறை அவ்வாறு முடியாது. இந்த நிலையில், முஸ்லிம்களால்தான் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தோற்றார் என்ற அபாண்டமான பலி நமது சமூகத்துக்கு வரக்கூடாது. என்னைப் பொறுத்தவரையில், கோத்தாபயவினால் மாத்திரமே நிச்சயம் சமூகம் பாதுகாப்பைப் பெறமுடியும். இதனை என்னால் உறுதியாகக் கூற முடியும் என்றார்.
மேற்படி பத்திரிகையாளர் சந்திப்பில், அல் ஜஸீறா லங்கா ஊடக ஆசிரியரும் உலமாக் கட்சித் தலைவருமான முபாறக் அப்துல் மஜீத் மௌலவியும் கலந்து கொண்டிருந்தார்.