“நல்லாட்சி அரசாங்கத்தில் எந்த நன்மையும் முஸ்லிம் சமுகத்திற்கு ஏற்படவில்லை.அதனால் அதன் உறுப்பினரான சஜித்தை விட்டு விட்டு நாங்கள் மொட்டை ஆதரிக்கிறோம்.”
“இனவாதிகள் நல்லாட்சிப் பக்கத்திலும் இருக்கிறார்கள்.கோத்தபாய பரவாயில்லை போல் எங்களுக்குத் தோன்றுகிறது.அதனால் பள்ளி நிர்வாகம் முஸ்லீம் சமுகத்தின் நிலையை கருத்தில் கொண்டு பொது ஜன பெரமுனவை ஆதரிக்க இருக்கிறோம்.”
“எங்கள் முஸ்லிம் சமுகத்திற்கு எந்தப் பாதுகாப்பையும் ரவுப் ஹக்கீம்,ரிஷாட் அமைச்சர்களாக இருக்கும் அரசாங்கம் தரவில்லை.அதனால் நாங்கள் கோட்டபாயவை ஆதரிக்கிறோம்.”
இந்தக் காரணங்களில் ஏதாவது ஒன்றுக்காக சாய்ந்தமருது மக்கள் கோட்டபாயவை ஆதரிப்பதாகச் சொல்லி இருந்தாலும் அந்தச் சகோதரர்களுக்காய் நான் புளகாங்கிதம் அடைந்திருப்பேன் அந்தக் காரணங்களில் எனக்கு தனிப்பட்ட உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட.
ரவூப் ஹக்கீமுக்கு எதிராக தங்களுக்கு பிரதேச சபை வேண்டும் என்று சாய்ந்தமருது மக்கள் அனைவரும் பள்ளித் தலைமையின் கீழ் ஒன்றுபட்டு விதம் விதமாகப் போராடியபோது நான் மிகவும் பெருமைப்பட்டேன்.ஒரு நோக்கத்திற்காக காங்கிறசை வளர்த்த மண் அதன் தலைமையை தூக்கி எறிந்த ஒற்றுமை என்னைப் புல்லரிக்க வைத்தது.அந்தப் போராட்ட குணம்தான் எமது மண்ணின் அடையாளம் என்று சொல்வது போல் இருந்தது.
பாருங்கள் இந்த ஒற்றுமையை, ஒரு நோக்கத்திற்காக ஒன்றுபடும் இந்த பலம் இதுதான் இந்த சமுகத்திற்கு தேவை.இந்த உணர்வுகள் தான் இந்த சமுகத்தில் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை எம்மில் வளர்க்கிறது என்று என் நண்பர்கள் பலரிடம் சிலாகித்திருந்தேன்.
ஆனால் இன்று எனது மனம் மிகவும் வேதனைப்படுகிறது.ஏதோ ஒன்று என்னைப் பிசைந்து பிசைந்து எடுக்கிறது.இல்லை அந்த மக்கள் அப்படி இல்லை என்று என் உள் மனது சொல்லிக் கொள்கிறது.இது ஒரு சிலர் எடுத்த முடிவாக இருக்கும்.ஊர் எடுத்த முடிவாக இருக்கக் கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன்.
'எங்கள் ஊருக்கு ஒரு பிரதேச சபை தந்தால் உங்களை ஆதரிக்கிறோம்'
இங்கு 'எங்கள் சமுகம்' அல்ல.எங்கள் சமுகத்தின் பாதுகாப்பு அல்ல.எங்கள் பெண்களின் ஹிஜாபுக்காக அல்ல.எங்கள் குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக அல்ல.ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான தகுதி அவர் பிரதேச சபை தருவார் என்பதற்காக.
இங்குதான் சமுகம் என்ற பிரமாண்டத்தில் இருந்து ஊர் என்ற சிறுமைக்குள் அரசியல் புகுந்து சிறுத்து விடுகிறது.
சாய்ந்தமருது மக்களுக்கு ஒரு பிரதேச சபை கொடுக்கப்பட வேண்டும் என்று பேசிய எழுதிய ஒரு அக்கரைப்பற்றானை சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் ஒரு கணம் நினைத்திருக்குமாக இருந்தால்,
அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவளித்த ஒரு நிந்தவூரானை சாய்ந்தமருது நிர்வாகம் நினைத்திருக்குமாக இருந்தால்
அவர்களுக்காக முகனூலில் எழுதிய ஒரு சம்மாந்துறையானை சாய்ந்தமருது பள்ளி நிர்வாகம் கரிசனை கொண்டிருக்குமாக இருந்தால்,
உங்கள் பிரதேச சபைக்காக ஆத்மார்த்தமாக உழைத்த அனைத்து வெளியூர் மக்களையும் நீங்கள் 'சமுகம்' என்று கருதி இருப்பீர்களானால்,
எப்படி உங்களுக்கான ஒரு தேவைக்காக ஊர்,பிரதேசம் பாராமல் ஆத்மார்த்தமாக வெளி ஊரைச் சார்ந்தவர்கள் ஆதரித்தோமோ, நாங்கள் ஆதரிக்கும் போதெல்லாம் எங்கள் கண் முன்னே தெரிந்தது எங்கள் “சமுகத்தில்” உள்ள சாய்ந்தமருது மக்கள்தான்.
ஆனால் இன்று நீங்கள் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவு எடுத்த போது உங்களுக்காய் ஆதரித்த சமுகத்தின் நலனை வைத்து நீங்கள் முடிவு செய்யவில்லை.உங்கள் ஊரை மாத்திரமே நீங்கள் சிந்தித்திருக்கிறீர்கள். உங்கள் சமுகத்தின் நலனைப் பற்றி அல்ல.
என்ன நடந்தாலும் பரவாயில்லை.யாரின் தாலி அறுந்தாலும் பரவாயில்லை.யார் அழிந்து போனாலும் பரவாயில்லை.இந்த சமுகம் சிதைந்து சின்ன பின்னமானாலும் பரவாயில்லை.எங்களுக்கு ஒரு சபை வேண்டும் அவ்வளவுதான்.எங்கள் அயலவனுக்கு என்ன நடந்தாலும் எதுவும் இல்லை.
ஊர்வாதம் இங்கிருந்துதான் ஊற்றெடுக்கிறது. சமுகம் என்று சிந்திக்காமல் ஊர் என்று சிந்திக்கும் சுயநலம் எம்மை சின்னாபின்னமாக்கிவிடும். இப்பொழுது கல்முனை மக்கள் எல்லோரும் ஒன்று கூடி ' சரி சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வழங்கக்கூடாது என்று வாக்களித்தால் நாங்கள் உங்களை ஆதரிப்போம்' என்று மொட்டுவோடு உடன்படிக்கை செய்தால் என்ன செய்வீர்கள்??
ஜனாதிபதித் தேர்தல் பிரதேச சபைக்கு பேரம் பேசும் தேர்தல் அல்ல.அது எங்கள் சமுகத்தின் இருப்பை நிர்ணயிக்கப் போகும் தேர்தல்.இதில் யாரை ஆதரிப்பது என்று கேள்விக்கு நாம் எடுக்கும் முடிவு எமது சமுகத்தின் நலனுக்காக இருக்க வேண்டுமே ஒழிய எமது ஊருக்கான மணிக்கூட்டுக் கோபுரம்,காப்பட் வீதி,கழிப்பறைக்காக இருக்கக் கூடாது.அதை கேட்பது பொதுத் தேர்தலில்.அது ஒரு மாவட்டத்தின் வேட்பாளரிடம் கேட்கும் விடயம்.ஒரு பொதுத் தேர்தலில்,பிரதேச சபைத் தேர்தலில் ஊர் நலனைப் பார்ப்பது வேறு ஜனாதிபதித் தேர்தலில் ஊர் நலனை முன்னெடுப்பது வேறு.ஜனாதிபதி நாட்டுக்கு.அதில் அளுத்கமை முஸ்லிம்,திகண முஸ்லிம்,ஹம்பாந்தோட்டை முஸ்லிம்,புத்தளம் முஸ்லிம் எல்லோரும் வருவார்கள்.அவர்கள் எல்லோருக்குமான முடிவாக எமது முடிவு இருக்க வேண்டும்.பொதுத் தேர்தலில் அம்பாரை மாவட்ட உறுப்பினரைத் தெரிவது.அதிலே இதைக் கேட்பது வேறு.
விரும்பிய வேட்பாளரை ஆதரியுங்கள்.நீங்கள் ஆதரிப்பதற்கான காரணம் எமது முஸ்லிம் சமுகத்தின் ஒட்டு மொத்த நலன் என்று தொனிப்பொருளில் இருக்க வேண்டும்.ஊர்,பிரதேசம்,மலை,மடு பார்த்து முடிவு எடுக்கும் தேர்தல் அல்ல இது.
சஜித்த விட கோத்தபாய இலங்கை முஸ்லிம்களின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் பொருத்தமானவர் என்று நினைத்தால் அவருக்கு வாக்களியுங்கள்.சஜித் என்றால் சஜித்துக்க்கு வாக்களியுங்கள்.அனுர என்றால் அனுரவை ஆதரியுங்கள்.ஒரு பிரதேச சபையும்,டி.எஸ் ஆபீஸும், மைதானமும் உங்கள் ஆதரவை தீர்மானிக்கப் போகிறது என்றால் முஸ்லிம் சமுகம் என்ற கோட்பாட்டை நீங்களே முதலில் குழி தோண்டிப் புதைத்தவர்களாவீர்கள்.
இல்லை.எனக்குத் தெரியும் எனது சகோதரர்கள் நீங்கள். நீங்கள் அப்படி இல்லை.இது உங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவும் அல்ல.ஒரு சிலரின் முடிவு உங்கள் மீது திணிக்கப்படுகிறது.நீங்கள் சமுகத்திற்க்காய் செயற்படுபவர்கள்.
நீங்கள் கோத்தபாயவை ஆதரியுங்கள்.ஆனால் அது எங்கள் சமுகத்தின் நலனுக்காகத்தான் நாங்கள் கோட்டபாயவை ஆதரிக்கிறோம் என்று ஒரு பொய்யாவது சொல்லி விடுங்கள்.உங்களைப் பார்த்து பெருமைப்பட்ட மனது பெருமைப்பட்டுக் கொண்டே இருக்கட்டும்.
இல்லை.நீங்கள் சுயநலவாதிகள் இல்லை.