ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்தப்பக்கம்- பாகம் 9


வை எல் எஸ் ஹமீட்-

முஸ்லிம்களுக்கெதிரான இனவாதத்தின் வளர்ச்சிப்பாதை
—————————————————-

இன்று அரசியல்மேடைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒருதலைப்பட்சமாக கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கெதிராக நடந்த அநியாயங்களை மட்டும் இந்த வேட்பாளரை ஆதரிப்பவர்களும் இந்த ஆட்சியில் நடந்தவற்றை மட்டும் அந்த வேட்பாளரை ஆதரிப்பவர்களும் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

சமூகத்திற்காக ஒரு பக்கம் நிற்பவர்களின் நிலைப்பாடாக இது தெரியவில்லை. மாறாக, ஏதோ ஒரு காராணத்திற்காக- அது தனிப்பட்ட ஆதாயமாக இருக்கலாம் அல்லது முஸ்லிம்கட்சிகள்மீது கொண்ட வெறுப்பாக இருக்கலாம்- எதுவாகிலும் தான் ஆதரிக்கும் பக்கத்தை கண்மூடித்தனமாக நியாயப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே இது இருக்கிறது.

இரு பக்கங்களையும் ஆராய்ந்து ஒப்பீட்டளவில் எது பாதிப்புக் குறைந்தது; என எடுக்கும் தீர்மானம்தான் இதயசுத்தியுடனான சமூகத்திற்கான தீர்மானமாக அமையமுடியும்.

எனவே, இத்தொடரின் அடுத்துவரும் இரண்டொரு பாகங்களை இரு பக்கங்களின் ஒப்பீட்டுக்காக ஒதுக்குவோம்.

கடந்த பாகத்தில் 2010 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், அடுத்துவந்த பொதுத்தேர்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து இனியும் யுத்தவெற்றியைச் சந்தைப்படுத்த முடியாது; என்பதால் இனவாதத்தைக் கையிலெடுக்க அந்த அரசு முனைந்ததையும் அதற்காக ஏன் முஸ்லிம்களைத் தேர்வுசெய்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இனவாதம் தலையெடுத்தல்
————————————

யுத்தம் முடிவுறும்வரை முஸ்லிம்களை பெரும்பான்மை சமூகமும் தொடர்ந்துவந்த அரசுகளும் ஓரளவு நட்புடனும் நம்பிக்கையுடனும்தான் நோக்கினார்கள். 1915 கலவரம், 1982 காலி வன்செயல், 2001ம் ஆண்டு மாவனெல்ல வன்செயல் போன்ற சில சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்தாலும் ஒரு பாரிய முஸ்லிம் வெறுப்பு பெரும்பான்மை சமூகத்திடம் காணப்படவில்லை.

இன்று முஸ்லிம்கள் அணிகின்ற சர்ச்சைக்குரிய ஆடைகள் கடந்த சில தசாப்தங்களாக முஸ்லிம்கள் அணிந்துதான் வந்தார்கள். அவ்வாறே ஹலால் சான்றிதழ் முறையும் அமுலில் இருந்தே வந்தது. இவை எதுவும் அவர்களுக்குப் பிரச்சினைகளாக இருக்கவில்லை.

வருடந்தோறும் தப்லீக் ஜமாஅத் பாரிய மக்கள் தொகையின் பங்குபற்றுதலுடன் இஜ்திமாக்களை நடாத்திவந்தார்கள். அதையும் பெரும்பான்மை சமூகம் வித்தியாசமான கண்கொண்டு நோக்கவில்லை.

83 ஜூலை இனக்கலவரத்தில் எத்தனையோ தமிழர்களை தைரியமாக அடைக்கலம்கொடுத்து காப்பாற்றுகின்ற அளவு பெரும்பான்மை சமூகத்துடன் முஸ்லிம்கள் சரிசமமாக தலைநிமிர்ந்து வாழ்ந்தார்கள்.

இவ்வாறு வாழ்ந்த ஒரு சமூகத்தின் வாழ்வில்தான் 2010ம் ஆண்டிற்குப்பின் இனவாத சூறாவளி வீச ஆரம்பித்தது.

திடீரென ஹலால் உணவுக்கெதிராக கோசங்கள் எழ ஆரம்பித்தன. ஹலால் சான்றிதழ் வழங்குவதன்மூலம் பெரும்பணம் சம்பாதித்து தீவிரவாதம் போஷிக்கப் படுவதாக குற்றஞ் சாட்டினார்கள்.

முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் பொருட்கள் வாங்கக்கூடாது; என்றார்கள். ‘Nolimit, Fashion Bug’ போன்ற நிறுவனங்களை பெயர்குறித்தே பிரச்சாரம் செய்தார்கள். மெதுமெதுவாக அப்பொழுதுதான் ‘ பொதுபலசேனா’ என்ற பெயர் வெளியில் வந்துகொண்டிருந்தது.

கோசங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் அதிகரித்துக்கொண்டே சென்றன. முஸ்லிம்களின் ஆடைகள், குறிப்பாக அபாயாவுக்கெதிராக கோசங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஒரு வித அச்சசூழ்நிலை முஸ்லிகளை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

பெண்கள் அபாயா அணிந்துகொண்டு வெளியில் செல்லும்போதெல்லாம் ஒரு அச்சநிலையிலே அவர்களும் அவர்கள் வீடுதிரும்பும்வரை அவர்களது குடும்பத்தினரும் இருந்தார்கள்.

இவர்களுக்கு துணையாக ராவண பலய, சிஹல ராவய போன்ற அமைப்புகளும் தோற்றம்பெற்றன. மாடறுப்பதற்கெதிராக கூச்சலிட்டார்கள். இறைச்சி ஏற்றிவந்த லொறி சில மதவாதிகளால் எரிக்கப்பட்டது. உள்ஹிய்யா கொடுப்பது ஒரு பெரும் சவாலாகியது. திருக்குர்ஆன் நிந்திக்கப்பட்டது. தொடராக பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்கடைகள் எரிக்கப்பட்டன.

இந்த பிந்திய இயக்கங்களை சில அமைச்சர்களே இயக்குவது வெளிச்சத்திற்கு வந்தது. ஆனாலும் அனைத்தும் தொடர்ந்தன.

மஹிந்தவின் ஆட்சிக்கு 2/3 பெரும்பான்மைப் பலம் இருந்தது. முஸ்லிம் அமைச்சர்கள் அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் எழுப்பிய குரல்கள் செவிடன் காதில் ஊதிய சங்காகின.

பாகிஸ்தானிலிருந்து பதினோராயிரம் முஸ்லிம் இளைஞர்கள் பயிற்பெற்று தீவிரவாதத்தில் ஈடுபடுவதற்காக வந்திருப்பதாக ஞானசாரதேரர் குறிப்பிட்டார். மட்டுமல்ல, மறைந்த தலைவர் M H M அஷ்ரப் இரு கொள்கலன்களில் ஆயுதம் கொண்டுவந்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

இவ்வளவு பாரதூரமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டும் அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை. ஆகக்குறைந்தது, இவ்வாறான குற்றச்சாட்டு சொன்னவரிடம் அவற்றிற்கான ஆதாரங்களைக்கூட பாதுகாப்புத் தரப்பினர் கேட்கவில்லை.

இவ்வனைத்துப் பிரச்சாரங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் பின்னால் இரண்டு பிரதான நோக்கங்கள் இருந்திருக்க வேண்டும்.

ஒன்று: பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் முஸ்லிம்கள்மீது தப்பபிப்பிராயத்தையும் வெறுப்பையும் தூண்டுவது. அதில் கணிசமான அளவு அவர்கள் வெற்றிபெற்றார்கள்; என்பது மறுக்கமுடியாத உண்மை.

இரண்டு: முஸ்லிம் இளைஞர்களுக்கு மத்தியில் தீவிரவாதத்தைத் தூண்டுவது.

இங்கு நாம் சிந்திக்கவேண்டிய ஒரு முக்கியவிடயம் இருக்கின்றது.

அதாவது, கடந்த ஆட்சியிலேயே, இந்த நாட்டின் வரலாற்றில் முஸ்லிம் தீவிரவாதத்தைப்பற்றி யாரும் கற்பனைகூட செய்திருக்கமுடியாத ஒருகாலத்தில் இந்த மதவாதிகள், முஸ்லிம் தீவிரவாதம்குறித்து எவ்வாறு பேசமுடிந்தது? ஏன் பேசினார்கள்? அப்பொழுதே முஸ்லிம்களைத் தீவிரவாதத்திற்குள் தள்ளி அதனைச் சாட்டாக வைத்து ஒரு இன சுத்திகரிப்பிற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்ததா?

இந்த சந்தேகம் அடுத்த தளத்திற்குப் போகும்போது இன்னும் அதிகரிக்கின்றது. அதாவது சஹ்ரான் குழுவினருக்கு கடந்த ஆட்சியில் பணம் வழங்கப்பட்டது; இன்று சம்பந்தப்பட்டவர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இங்கு எழுகின்ற முதலாவது கேள்வி: அப்பொழுது முஸ்லிம் தீவிரவாதமொன்று இருக்கவில்லை. அந்நிலையில் எந்தத் தீவிரவாதம் சம்பந்தமான தகவலைப் பெறுவதற்கு இவர்கள் உளவாளிகளாகப் பயன்படுத்தப்பட்டார்கள்?

இரண்டாவது கேள்வி: அவ்வாறு தீவிரவாதிகளைக் காட்டிக்கொடுப்பதற்காக நியமிக்கப்படுகின்ற உளவாளிகள் எப்போதும் அரச சார்பானவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் எவ்வாறு தீவிரவாதியானார்கள்?

அவ்வாறானால் இனவாதிகளின் முன்கூட்டிய தீவிரவாத எச்சரிக்கை, பிற்காலத்தில் தீவிரவாதிகளாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு அரசு நிதிவழங்கியமை; இவைகளெல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட, சிறந்த திட்டமிடலுடனான ஒரு பின்னணியைக் கொண்டதா? என்ற ஒரு பலமான சந்தேகத்தைத் தோற்றுவிக்கவில்லையா?

2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி 1981ம் ஆண்டு 7.5 வீதத்திற்கு உட்பட்டாதாக இருந்த முஸ்லிம் சனத்தொகை 2012ம் ஆண்டு 9.7 வீதமாக அதிகரித்திருந்தது. இதன் காரணமாக, இனவாதிகள் இத்தனையாம் ஆண்டு இலங்கை முஸ்லிம் நாடகப்போகிறது; என்று சிங்கள மக்களை அச்சமூட்டிக் கொண்டிருந்தார்கள்.

எனவே, முஸ்லிம்களுக்கெதிராக சிங்கள மக்களிடத்தில் வெறுப்பையும் முஸ்லிம் இளைஞர்களிடம் தீவிரவாதத்தையும் விதைத்து ஒரு பாரிய இனசுத்திகரிப்பை செய்ய ஒரு திட்டம் இருந்ததா? சிலவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனிப் பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளால் வெற்றிபெற்றிருந்தால் அந்த இன அழிப்பு செயற்படுத்தப்பட்டிருக்குமா? என்ற விடைதெரியாத கேள்விகள் மனதைக் குடைந்துகொண்டுதான் இருக்கின்றன.

இன்னும் அச்சத்தை உண்டாக்குவதென்னவென்றால் அடுத்த பத்தாண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பு பெரும்பாலும் 2022ம் ஆண்டு வெளியாகும். அதில் சிலவேளை முஸ்லிம்களின் விகிதாசாரம் இன்னும் அதிகரித்து; அப்பொழுது அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒருவர் ஆட்சியாளராக இருந்தால் முஸ்லிம்களின் நிலை என்னவாகும்; என்பதாகும்.

( இன்ஷாஅல்லாஹ் தொடரும்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -