சாய்ந்தமருதை சேர்ந்த கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலான கலந்துரையாடலின் போது உலமா கட்சித்தலைவர் முபாறக் மஜீத் மேலும் தெரிவித்ததாவது,
கல்முனையை முஸ்லிம், தமிழ் என இன ரீதியில் பிரிப்பதற்கு இடமளிக்கமாட்டோம் என பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ள ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவை கல்முனை, சாய்ந்தமருது மக்கள் ஆதரிக்க முன் வர வேண்டும்.
இந்த வகையில் சாய்ந்தமருது பள்ளிவாயல் முன் வந்து பெசில் ராஜபக்ஷவை அழைத்து தமது ஆதரவை பகிரங்கமாக வழங்குவது பற்றி சிந்திக்க வேண்டும்.
மீண்டும் ஐ. தே க ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையிலும் மூட்டிவிட்டு கூத்து பார்ப்பதே தொடரும். இந்நிலையில் சாய்ந்தமருது மக்களுக்கான பிரதேச சபையும் கிடைக்காது.
கல்முனை பிரதேச செயலகத்தை பிரிக்காமல் அதன் உப செயலகத்தை ரத்து செய்து விட்டு பாண்டிருப்பு பிரதேச செயலகம் என்ற புதிய முழுமையான பிரதேச செயலகத்தை 100 வீதம் பாண்டிருப்பிலும் சேனைக்குடியிருப்பிலும் வாழும் தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு எம்மிடம் எந்த தடையுமில்லை என்பதை உலமா கட்சி பெசில் ராஜபக்ஷவுக்கு தெரிவித்து அதனை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். பெசில் ராஜபக்ஷ அவர்கள் எப்போதும் இனவாதமாக சிந்திக்காமல் நாட்டின் அனைத்து மக்களினதும் நலன் பற்றி சிந்திப்பவர்.
அந்த வகையில் பொது ஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெற்றால் பாண்டிருப்பு செயலகம் வழங்க உலமா கட்சி பெசில் ராஜபக்ஷ ஊடாக முயற்சி எடுக்கும். சொன்னதை செய்யும் வாக்குமாறாத, கௌரவமான அரசியல்வாதிகளாக நாம் மஹிந்த ராஜபக்ஷவையும் பெசில் ராஜபக்ஷவையும் கண்டுள்ளோம்.
அவ்வாறு கல்முனை பிரிக்கப்படாமல் பாண்டிருப்பு பிரதேச செயலகம் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் சாய்ந்தமருத்துக்கும் தனிச்சபை கிடைக்க உலமா கட்சி முழு ஆதரவும் வழங்கும் என்ற உறுதியை வழங்குகிறோம்.
ஆகவே சாய்ந்தமருது மக்கள் இதுபற்றி பள்ளிவாயலுடன் கலந்து பேசி பொதுஜன பெரமுனவை ஆதரிக்க முன் வரவேண்டும். இது விடயத்தில் எத்தகைய முயற்சிக்கும் உதவ உலமா கட்சி தயாராக உள்ளது.