கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை
நமது நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய கொடூர பயங்கரவாத யுத்தத்தை இல்லாமல் செய்து சமாதானத்தை ஏற்படுத்தி பாரிய அபிவிருத்தி பணிகளை செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்தவர்கள்; இன்று சிறுபான்மை மக்களின் ஆணையினை கோரி நிற்கின்றனர் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து காத்தான்குடியில் அல்ஹாஜ் சத்தஹத் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் நீர்வழங்கள்,நகர திட்டமிடல், உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இக்கூட்டத்தில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்.....
அரபு நாடுகளில் மன்னர்கள் அதிகாரத்தில் இருப்பது போன்று இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிகாரத்தில் இருப்பதற்கு வாய்ப்புகள் இருந்தன. முப்பது வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நமது நாட்டின் பல தலைவர்கள் முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டனர். நமது நாட்டின் தேசிய தலைவர்களாக செயல்படக்கூடிய அனுபவமிக்க தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா, முன்னாள் அமைச்சர்களான காமினி திசாநாயக்கா, லலித் அத்துலத்முதலி உட்பட பல தலைவர்களை இழந்தோம். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் கூட தனது கண்ணை இழந்து உயிர் தப்பினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரு ஜனநாயகவாதி, வீரம் உள்ள தலைவர் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்து பாரிய அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டது போல் நமது நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் உணர்வுகளை புரிந்து பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்கி இருந்தால் அவர் மரணிக்கும் வரை நமது நாட்டின் தலைவராக இருப்பதற்கான வாய்ப்புக்கள் இறைவனால் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன.
அன்று ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரத்தினை பாவித்து சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செயல்பட்டு வந்த இனவாத சிந்தனையாளர்களால் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்தார். அவரின் தோல்விக்கு காரணமாக இருந்து செயல்பட்டவர்கள் இன்று ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை கோரி நிற்கின்றனர்.
கிழக்கு மாகாண சபையில் இரண்டு தடவைகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்தேன். கிழக்கு மாகாணத்தின் தலைநகரான திருமலை நகரில் பல நூறு வருட காலமாக அமைந்திருந்த முஸ்லிம்களின் வரலாற்றினை எடுத்துகாட்டுகின்ற கடற்படைக்கு அருகில் இருந்த கருமலையூற்று பள்ளிவாசல் திடீர் என உடைக்கப்பட்டது. உடைக்கப்பட்ட பள்ளிவாசலை ஆளும் கட்சியைச் சேர்ந்த எங்களையே பார்ப்பதற்கு அன்று அனுமதி மறுக்கப்பட்டது. அது மாத்திரமின்றி கிழக்கு மாகாண கட்டளையிடும் தளபதி கருமலையூற்றில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று இருக்கவில்லை என அறிக்கை விட்டார். நாங்கள் அதனை எதிர்த்து பள்ளிவாசல் உடைக்கப்பட்ட உண்மையினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து வெளியே கொண்டு வந்தோம்.
காலப்போக்கில் 2014 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறவேண்டும் என்பதற்காக உடைக்கப்பட்ட கருமலையூற்று பள்ளிவாசலை புனரமைத்து முஸ்லிம்களிடம் கையளித்தனர். கிழக்கு மாகாண கட்டளையிடும் தளபதி முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒன்று கருமலையூற்றில் இல்லை என்ற அறிக்கை பொய் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக முஸ்லிம் சமூகம் தீர்மானம் மேற்கொள்ளலாம். ஆனால் நமது முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு எமது சமூகம் வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா ஜனாதிபதியாக வருவதற்கு தலைவர் மர்ஹூம் அஸ்ரப் ஆதரவு வழங்கினார். அதனால் நமது நாட்டின் பாராளுமன்றத்தில் 17 வீதமாக இருந்த விகிதாசாரத்தினை உடனடியாக 5 வீதமாக குறைத்தார். இந்த வரலாற்று நிகழ்வால் இன்று நமது நாட்டில் சிறுபான்மை கட்சிகள் மாத்திரமின்றி பெரும்பான்மை இனத்தில் அமைந்துள்ள சிறிய, சிறிய அரசியல் கட்சிகளுக்கும் பாராளுமன்ற பிரநிதித்துவத்தில் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
நமது நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காமலும், நமது நாட்டின் சமாதானத்திற்கும், சுதந்திரத்திற்கும் பாரிய பங்கினை வழங்கி வந்த போதும் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி சஹ்ரானினால் நடாத்தப்பட்ட மனிதாபிமானமற்ற குண்டுத்தாக்குதல் நிகழ்வால் நமது முஸ்லிம் சமூகம் பாரிய அதிர்ச்சியும், கவலையும், அச்சமும் அடையும் நிலை தோன்றியது. பயங்கரவாதி சஹ்ரானின் நடவடிக்கைகளுக்கு முழு முஸ்லிம் சமூகமும் ஒத்துழைப்பு வழங்கியது போன்ற ஒரு தோற்றத்தினை இனவாதிகள் இணைந்து கட்சி பேதமின்றி வட - கிழக்குக்கு வெளியில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இன வன்முறைகள் ஏற்படுத்தி வந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து கட்சி பேதமின்றி தங்களின் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ததனால் தான் நமது சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதுடன், இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவன்முறை சம்பவங்கள் தொடர்பாக சர்வதேசமும் அறியும் நிலமை ஏற்பட்டது.
இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை பலத்தினை பெற்றுள்ள சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சமூகம் தொடர்பான தீர்மானத்தால் நமது சமூகத்திற்கு இனவாதிகள் இணைந்து மேற்கொள்ள இருந்த செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டன. இது இலங்கை அரசியலின் ஒரு வரலாற்று நிகழ்வாகும். எனவே, இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரமேதாசாவுக்கு வாக்களித்து அவரின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கி இனவாதிகளை தோற்கடிக்க வேண்டும் என தெரிவித்தார்.