சஜித்துக்கு ஆதரவாக உருவாகியுள்ள பேரலைகளை எவ்வாறு சமாளிப்பது என தெரியாமல் ராஜபக்சக்களும் அவர்களின் சகாக்களும் திக்குமுக்காடிபோய் உள்ளனர்


“மலையகத் தமிழர்களின் அமோக ஆதரவைப்பெற்ற அரசியல் கூட்டணியாக தமிழ் முற்போக்கு கூட்டணி விஸ்வரூபமெடுத்துள்ளது. எனவே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்காவிட்டால்கூட மக்கள் சஜித்துக்கே வாக்களித்து அவரை நிச்சயம் அரியணையேறவைப்பார்கள்.”
இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
கண்டியில்  நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவை வருமாறு,
“நாட்டில் எந்தமூலை முடுக்குக்கு சென்றாலும் திரும்பும் திசையெல்லாம் ‘சஜித் வந்துவிட்டார், வெற்றிநிச்சயம்’ என்ற மக்கள் ஆதரவு குரலே ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இவ்வாறு சஜித்துக்கு ஆதரவாக உருவாகியுள்ள பேரலைகளை எவ்வாறு சமாளிப்பது என தெரியாமல் ராஜபக்சக்களும் அவர்களின் சகாக்களும் திக்குமுக்காடிபோய் உள்ளனர்.
அதுமட்டுமல்ல ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து வெளியேறிய பலரும் சஜித்தின் கரங்களை மேலும் பலப்படுத்துவதற்காக மீண்டும் தாய்வீடு திரும்பிவருகின்றனர். இன்னும் சில நாட்களில் மஹிந்தவின் முகாமிலிந்தும் சஜித்துக்கு ஆதரவான படையணியொன்று வெளிக்கிளம்பவுள்ளது. எனவே, இனிவரும் நாட்களில் தரமான மற்றும் சிறப்பான அரசியல் சம்பவங்கள் அரங்கேறவுள்ளன.
மறுபுறத்தில் தோல்விபீதியால் கதிகலங்கிபோயுள்ள மொட்டு கட்சிக்காரர்கள் வழமைபோல் இனவாத ஆயுதத்தை கையிலேந்தி – சிங்கள, பௌத்த மக்கள் திசைதிருப்பி வாக்குவேட்டை நடத்துவதற்கு தயாராகிவருகின்றனர். ஆனால், இம்முறை இந்த குறுக்குவழி அரசியல் யுக்தியும் வெற்றிபெறாது என்பதை மொட்டுக்கட்சிக்காரர்களுக்குகூறி வைக்கவிரும்புகின்றேன்.
அதேவேளை, மலையகத்தில் பருவகால அரசியலுக்கு பேர்போன இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடித்துவருவதை அக்கட்சி உறுப்பினர்களால் விடுக்கப்படும் அறிக்கைகள்மூலம் தெளிவாகின்றது.
ஒக்டோபர் அரசியல் சூழ்ச்சியின்போது மஹிந்தவிடம் தஞ்சமடைந்து அமைச்சுப் பதவியை வாங்கிய ஆறுமுகன் தொண்டமானுக்கு தற்போது கோட்டாவுக்குதான் ஆதரவு என்பதை பகிரங்கமாக அறிவிப்பதற்கு ஏன் முடியாதுள்ளது.
அதுதான் இ.தொ.காவின் சந்தர்ப்பதாவ அரசியலாகும்.
இன்று மலையக தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களே செயற்படுகின்றனர். மக்களின் ஆதரவும் எமக்கே முழுமையாக இருக்கின்றது.
எனவே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வருகைக்காக செங்கம்பளம் விரிந்து, மலர் செண்டுடன் காத்திருக்கவேண்டிய தேவைப்பாடு ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடையாது. இ.தொ.காவினர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்தால்கூட அது சஜித்தின் வெற்றியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.” என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -