என்னால் முன்னெடுக்கப்படுகின்ற சகல அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் நான் ஒருபோதும் ஊடகங்களுக்கு வழங்குவதில்லை. ஏனென்றால் நான் கொண்டு வருகின்ற அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் தடுக்கின்றவர்களாக சில அரசியல்வாதிகள் காணப்படுகின்றார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரும் அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான யு.கே.ஆதம்லெப்பை தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் அதன் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நியாயமான முறையில் எவ்வித பொய், பித்தலாட்டங்களும் இல்லாத முறையில் எனது அரசியல் பயணத்தை அல்லாஹ்வுக்குப் பயந்து பயணித்துச் செல்கின்றேன். இவ்வாறு அரசியல் பயணத்தைக் கொண்டு செல்கின்ற என்னைப் போன்றவர்களுக்கு அரசியல் பயணம் ஒருபோதும் சரிவராது.
மக்கள் பணிக்காகவும், அவர்களின் தேவைகளை தாமதப்படுத்தாமல் மிக விரைவாக பூர்த்தி செய்து கொடுப்பதற்காக எனது காரியாலயத்தை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் திறந்து வைத்துள்ளேன். என்னக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டும் நான் சேவை செய்யவில்லை. என்னை நாடிவருகின்ற மூவின மக்களுக்கும் நீதி, நியாயமான முறையிலேயே எனது பார்வை செலுத்தப்பட்டு அவர்களின் தேவைகளையும், பிரச்சினைகளையும் என்னால் இயன்றவரை மிக விரைவாக அதனை நிவர்த்தி செய்து கொடுத்தும் வருகின்றேன்.
அதுமாத்திரமல்லாமல், என்னால் இயலுமான முயற்சிகளைச் செய்து பல நியமனங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளேன். இவ்வாறு பெற்றுக்கொடுத்த நியமனங்களில் இன மத வேறுபாடுகளை நான் பார்க்காமலேயே பெற்றுக்கொடுத்துள்ளேன்.
எந்தவொரு காரியமாக இருந்தாலும் என்னால் செய்து கொடுக்க முடியமாக இருந்தால் அதைச் செய்துகொடுப்பேன். இல்லை என்றால் என்னால் முடியாது என்று அவர்களிடமே கூறிவிடுவேன். அரசியல் வாழ்க்கைக்காக அம்மக்களிடத்தில் பொய்களைக் கூறி அவர்களை ஒருபோதும் அழைந்து தெரிய விடமாட்டேன் என்றார்.
இந்நிகழ்வின்போது ஊடகவியலாளர்களின் பணிகளை மேம்படுத்துவதற்கான தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் அமைப்பாளர் ஆதம்லெப்பையிடம் கையளிக்கப்பட்டதுடன் நுஜா ஒன்றியத்தின் டீ சேர்ட்டும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.