சஜித்துக்கே மலையக மக்களின் ஆதரவு! அவரை களமிறக்குமாறு வேலுகுமார் எம்.பி. வலியுறுத்து


“ சஜித் பிரேமதாச என்ற நாமமே மக்கள் மத்தியில் இன்று ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது. எனவே, மக்களால் கோரப்படும் வேட்பாளரைக் களமிறக்கி ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் கண்டியிலுள்ள அலுவலகத்தில் நேற்று மாலை (13) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“அரசியல் களத்தில் ஜனாதிபதி தேர்தலானது முன்கூட்டியே சூடுபிடித்துள்ளது. இரு முனைப்போட்டிக்கு பதிலாக இம்முறை மும்முனைப்போட்டியே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச பெயரிடப்பட்டுள்ளார். சிங்கள, பௌத்த வாக்குகளை முழுமையாக வேட்டையாடுவதற்காக அவர்கள் இனவாத அரசியலை கையிலெடுக்ககூடும்.
ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையின மக்களே தீர்மானிக்கும் சக்தி என்பதால் நாம் அனைவரும் விழிப்பாகவும், பொறுப்புணர்வுடனும் செயற்படவேண்டிய காலகட்டம் இது. எம்மை அடக்கி ஆண்டவர்கள் தலையைத்தடவி ஆசை வார்த்தைகளை கூறலாம். அதை செய்வோம், இதை செய்வோம் என வாக்குறுதிகளை வாரி வழங்கலாம். ஆனால், கடந்துவந்த பாதையை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் பொதுவேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டார். ஆனால், அந்த பயணம் நீடிக்கவில்லை. நாட்டில் பலவழிகளிலும் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்திவிட்டு தற்போது மீட்பார் போல் பாசாங்கு காட்டிவருகிறார்.

ஆகவே இறக்குமதி வேட்பாளரை பொதுவேட்பாளராக களமிறக்கும் யுக்தி இனியும் மக்கள் மத்தியில் எடுபடாது என்பதுடன், அது அரசியல் ரீதியிலான சர்ச்சைகளுக்கே மீண்டும் வழிவகுக்கும். ஐக்கிய தேசியக்கட்சிக்கு மட்டுமல்ல அதற்கு ஆதரவு வழங்கிய தோழமைக்கட்சிகளுக்கும் பொதுவேட்பாளரின் முடிவுகளால் பல நெருக்கடிகள் ஏற்பட்டன.
எனவேதான் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த, மக்களால் கோரப்படும் வேட்பாளரை இந்த தடவை களமிறக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இன, மத, மொழி, குல பேதங்களுக்கு அப்பால் அனைத்து மக்களுக்கும் தான் சிறப்பாக சேவைகள் வழங்கக்கூடிய அரசியல்வாதி என்பதை சஜித் பிரேமதாச செயற்பாடுகள்மூலம் நிரூபித்துள்ளார். இதனால்தான் ‘சஜித் வேண்டும்’ என மக்கள் கேட்கின்றனர். மக்கள் கோரிக்கைக்கு செவிமடுத்து சஜித்தை களமிறக்கினால் வெற்றியை நோக்கி பயணிக்ககூடியதாக இருக்கும்.

கடந்தமுறைபோல் அல்ல இம்முறை களநிலைவரம். ஜே.வி.பியும் வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளது. சுதந்திரக்கட்சியும் மாற்று நடவடிக்கையில் இறங்கக்கூடும். வெற்றியை நோக்கி பயணிப்பதற்கு கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும். எனவேதான் மக்கள் பக்கம்நின்று முடிவு எடுக்குமாறு மீண்டும் மீண்டும் கோருகின்றோம். .’’ என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -