மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் பிரபல்யமான அரசியல்வாதிகள் மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்களே தவிர பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. மஹிந்த, பெசில், சமல், நாமல் கூட மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதை நாம் மறக்க முடியாது.
இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ நினைத்திருந்தால் கோட்டாபய ராஜபக்ஷவை பாராளுமன்ற உறுப்பினராக்கி அமைச்சு பதவியையும் கொடுத்திருக்க முடியும். அவர் அவ்வாறு செய்யாததன் மூலம் மஹிந்த ஜனநாயகத்தை பெரிதும் மதித்தார் என்பது தெளிவாகிறது. தனது குடும்பத்தவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தனது சகோதரரை, மாமனாரை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தார். இன்னொரு சகோதரரை கல்முனையின் அபிவிருத்திக்கு பொறுப்பாக நியமித்தார். இந்த அத்துமீறல் குடும்ப ஆட்சியை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் மஹிந்த விடயத்தில் மட்டும் குடும்ப ஆட்சி என்பது நடு நிலைச்சமூகத்துக்கு அழகானதல்ல.
ஒரு ஜனநாயக நாட்டில் முழு குடும்பமும் தேர்தலில் போட்டியிட்டு, வென்று ஆட்சிக்கு வரலாம். அதில் தடையே இல்லை. அதுதான் ஜனநாயகமும் கூட.
மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர்கள் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்ததாலேயே மஹிந்த ஜனாதிபதியாகி நான்கு வருடங்களுள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் என்பதை முஸ்லிம்கள் மறக்க முடியாது. யுத்தம் முடிந்ததால் இந்த நாட்டு சிங்கள மக்கள் பெற்ற நன்மையை விட கிழக்கு முஸ்லிம்களே மிகப்பெரிய நன்மைகளை பெற்றனர்.
ஆகவே சிங்கள மக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள மஹிந்தவின் பெரு நம்பிக்கையை பெற்ற கோட்டாபய ராஜபக்ஷவை வெல்ல வைப்பதன் மூலம் முஸ்லிம்களும் அடுத்த ஆட்சியில் சம பங்காளராக மாறி அரசியலில் சிங்கள பெரும்பான்மையுடன் இணைந்து பயணிப்பதே சிறுபான்மை சமூகங்களின் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.