காரைதீவு பிரதேசசபை தவிசாளர் ஜெயசிறில் வேண்டுகோள்.
காரைதீவு நிருபர் சகா-இந்துகலாசார அமைச்சர் மனோகணேசன் இனிமேல் வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் உரிமைப்பிரச்சினைகளில் தலையிடுவதில்லை என இன்றுகூறியிருப்பது இப்பிராந்திய அடிமட்டதமிழ்மக்களின் மனங்களை வெகுவாகப்பாதித்துள்ளது.
அவர் எந்தக்காரணம்கொண்டும் பிறந்த இனத்திற்கு துரோகம்செய்யக்கூடாது. அவரது சேவை தொடர்ந்து வடக்கு கிழக்கு மக்களுக்கு தேவை. எனவே அவர் அவரது முடிவைமாற்றி அடிமட்டத்தமிழ்மக்களுக்கு கட்டாயம் சேவையாற்றமுன்வரவேண்டும்.
இவ்வாறு காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்:
அமைச்சர் மனோகணேசன் இன்றுகாலை தேசிய தொலைக்காட்சியொன்றுக்கு நேரடி பேட்டியளித்துக்கொண்டிருக்கையில் மேற்படி தகவலைச் சொன்னார்.அதைக்கேட்டவுடன் நாம் அதிர்ச்சியடைந்தோம்.
இன்று நல்லாட்சி என்றுசொல்லப்படுகின்ற ஆட்சியில் வடக்குகிழக்கில் புதியதொரு பௌத்தமேலாதிக்கம் தலைதூக்கிவருகிறது. அதைவிட இஸ்லாமியஅடிப்படைவாதம் மற்றயவர்களை நசுக்கிவருகிறது. இஸ்லாமிய ஒருசிலஅரசியல்தலைமைகள் தமிழர்உரிமைகளை திட்டமிட்டு அடக்கிஒடுக்கி மிதித்துவருகிறது. இந்த நிலையில் இந்துக்கள் சார்பில் கட்டாயம் உரிமையுடன் குரல்கொடுக்கவேண்டிய தார்மீகக்கடமை இந்துகலாசார அமைச்சர் என்றவகையில் அமைச்சர் மனோகணேசனுக்குண்டு.
அவர் நாதியற்றிருக்கும் தமிழ்மக்களின் குறிப்பாக இந்துக்கள் எங்கெல்லாம்பாதிக்கப்படுகின்றனரோ இந்துகலாசார அமைச்சர் என்றவகையில்அங்கெல்லாம் ஓடோடிச்சென்று தனது குரலை உயர்த்தி முடிந்தளவு ஜனாதிபதியுடன்பேசி தீர்வுகண்டுவருகிறார்.
அது கன்னியாவாகட்டும் கல்முனையாகட்டும். எனவே தங்களது சேவையை குரலை தமிழ்மக்கள் வேண்டிநிற்கிறார்கள். அண்மையில் நாவிதன்வெளி தவிசாளர் ஊடகங்களில் கூறியது ஞாபகத்திற்குவருகிறது. எமது கட்சியைவிட அமைச்சர் மனோகணேசனின் நிதிஒதுக்கீடு தமது பகுதியில் அதிகளவாக இருப்பதாகக்குறிப்பிட்டார். அது உண்மை.
அவரது அமைச்சின் சேவைகளால் வடக்குகிழக்கு பிரதேசங்கள் அபிவிருத்தி கண்டுவருகின்றன. அண்மையில் கதிர்காமக்காட்டுப்பாதையை திறந்துவைத்த அவர் கதிர்காமபாதயாத்திரையை தேசிய யாத்திரையாக பிரகடனம் செய்யவும் உகந்தமலைமுருகனுக்கு இராஜகோபுரம் அமைக்கவும் காரைதீவில் சுவாமிவிபுலாநந்த மணிமண்டபத்திற்கு மேலும்40லட்சருபா ஒதுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதைவிட பலகோடி ருபா செலவில் சகல தமிழ்ப்பிரதேசங்களிலும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகிறார்.வெறும் ஏமாற்று உறுதிமொழிகளைத்தவிர்த்து யதார்த்தவாதியாகவிருக்கிறார்.
அதுமட்டுமல்ல இந்துக்கள் சார்பில் உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் அவரது குரல் உச்சத்தில் உரிமையுடன் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
எனவே அடிமட்டத்தமிழர்கள் அமைச்சரின் சேவையை பிரசன்னத்தை மிகவும் விரும்புகிறார்கள். அவர்களுக்காகவாவது அவரது முடிவை மாற்றி முழுத்தீவுக்குமான அமைச்சர் என்றவகையில் இங்கும் சேவையாற்றவேண்டும்.
