நோட்டன் பிரதேச பாடசாலைகளுக்கு விஜயம் செய்த திலகர் எம்பி

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட சமர்ஹில் வட்டாரத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் அந்த பிரதேச பாடசாலைகளுக்கு சுகாதார மேம்பாட்டு போக்குவரத்து வசதிகளுக்காக நிதி உதவிகளை வழங்கியதுடன் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாடசாலை சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேச சபையின் சமர்ஹில் வட்டார உறுப்பினர் எம். ராமச்சந்திரன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில் சமர்ஹில், கிளவட்டன், ஒஸ்போன், டன்கெல்ட் ஆகிய நான்கு பாடசாலைகளின் சுகாதார மேம்பாடுகளுக்காக தலா ஒருலட்சம் ரூபா நிதியினை வழங்கி வைத்ததோடு காபெக்ஸ் கல்லூரியை நோக்கி செல்லும் காசல்ரீ வீதி புனரமைப்புக்கான இருபது லட்சம் ரூபா நிதியினை ஒதுக்கி பணிகளையும் ஆரம்பித்து வைத்தார்.

டன்கல்ட் தமிழ் வித்தியாலயத்திற்கு சிறப்பு விஜயம் மேற்கொண்டிருந்த ஹட்டன் கல்வி வலய அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்த அவர் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுக்கப்படவிருக்கும் காணி உரிமங்கள் தொடர்பிலும், ஆசிரிய உதவியாளர்களை ஆசிரிய சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பிலும் கல்வி அதிகாரிகள், அதிபர்கள் ஆசிரியர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். இதன் போது கருத்து தெரிவித்த அவர்

“ பெருந்தோட்டப் பாடசாலைகள் என்ற வரையறைக்குள் வரும் அனைத்து பாடசாலைகளுக்கும் கட்டட தேவைப்படுகின்றன என்பதனை நாம் அறிவோம். ஆனாலும் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிதி கிடைக்கப்பெற்ற போதும் கூட அவற்றில் பயன்பெற பாடசாலைகளில் உரிய காணி இருக்கவில்லை. பெருந்தோட்ட பகுதி பாடசாலையை அண்மித்த இரண்டு ஏக்கர் காணிகள் அந்த பாடசாலைகளுக்கு வழங்கும் உடன்பாடு 1992 ஆம் ஆண்டே எட்டப்பட்ட போதும் அது இன்னமும் நடைபெறவில்லை. எனவேதான் அந்த காணிகளுக்கு உரிமை பத்திரங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெருந்தோட்டத்துறை அமைச்சு அதிகாரிகளுடனும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க உள்ளிட்ட எமது ஆளுங்கட்சி மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பாராளுமன்ற குழு அறையில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. விரைவில் காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்படும். முதல் கட்டமாக சுமார் 350 பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ள நிலையில் அதில் காணி உரிமம் கிடைக்கப் பெறாத பாடசாலை அதிபர்கள் அடுத்த கட்டத்தில் தமது பாடசாலைகளையும் அதில் உள்ளீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

அத்துடன் 6000 ரூபா அடிப்படை சம்பளத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஆசிரிய உதவியாளர்கள்களுக்கு 10000/= சம்பளமாக மாற்றியமைக்க தான் பாராளுமன்றில் குரல் எழுப்பியதை நினைவுபடுத்மியதோடு அவர்களை நிரந்தர ஆசிரிய சேவையில் இணைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளை ஏப்ரல் மாதத்துடன் செய்வதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்றத்தில் உறுதி அளித்ததன் பிரகாரம் இப்போது அவர்களது கோப்புகள் மாகாண சபை கல்வி திணைக்களங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.இனி அவர்கள் பணியாற்றும் மாகாண சபைக்கு உட்பட்ட அதிகாரிகள் அதற்குரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களுக்கு உரிய சம்பளத்மிட்டத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மாகாண கல்வி திணைக்களத்துக்குரியது. இது தொடர்பில் அண்மைய நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் அதிகாரிகளுடன் பேசியுள்ளோம். முதல் கட்டமாக மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சில் இருந்து நிதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் மாகாண ஆசிரியர் படையில் உரிய தரத்தில் அவர்களையும் இணைத்து உரிய சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பினை மாகாண கல்வி அமைச்சுகளே மேற்கொள்ள வேண்டும்.அண்மையில் ஆசிரிய உதவியாளர்கள் மாகாண கல்வி அமைச்சு தமது விடயத்தில் கவனமெடுக்க வேண்டும் என ஆளுநர்களிடம் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தியது நியாயமானது. இவர்களை மாகாண சபை நிர்வாகங்கள் கண்டு கொள்ளாதிருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு முன்னதாகவும் கூட இதுபோன்று கண்டுகொள்ளாமல் செயற்பட்ட மாகாண கல்வி அமைச்சுக்கு எதிராக கல்வி சமூகத்தினர் கவனயீர்ப்பு போராட்டங்களை செய்திருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அவ்வாறு திரண்டெழவில்லை. இப்போது பாராளுமன்ற உறுப்பினர்களான எம்மிடம் பாடசாலை சமூகத்தினர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். நான் செல்லும் பல பாடசாலைகளில் என்னுடைய நேரடி மாணவர்கள் பலர் அதிபர்களாக ஆசிரியர்களாக இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது. ஒரு ஆசிரியனாக இருந்து அரசியல் செயற்பாட்டாளன் ஆனவன் என்றவகையில் மலையக கல்வி முன்னேற்றம் குறித்த தூரநோக்கு நிகழ்ச்சித் திட்டம் என்வசம் உண்டு. அண்மையில் பாராளுமன்றில் அது குறித்த பிரேரணையை முன்வைத்துள்ளேன். அத்துடன் பாராளுமன்றத்தின் கல்வி, உயர்கல்வி மேற்பார்வை குழுவினது கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளேன். அடுத்த கட்டமாக தீர்க்கமான திட்டங்களுடன் பாடசாலை அபிவிருத்திகள் குறித்து செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -