இரத்தினபுரி, கரங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த நபர், 2015 நவம்பர் 6 ஆம் திகதி தனது மகளைக் கொடூரமானவகையில் சித்திரவதை செய்துள்ளதாக இரத்தினபுரி மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் ஆரம்ப விசாரணைகளின்போதே, பிரதிவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை குற்றவாளியென தீர்ப்பளித்து கடந்த முதலாம் திகதி நீதிவான் தண்டனை விதித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இரவு 10 மணியளவில், பிரதிவாதியான தந்தை, தனது மகளுக்கு கணித பாடத்தை கற்பித்துள்ளார். அதன்போது, கணித பாடத்தில் அவர் மிகவும் பலவீனமாக உள்ளதாக தெரிவித்து, குறித்த தந்தை, தனது மகளை கொடூரமாக தாக்கியுள்ளதாக நீதிமன்றில் தெரியவந்துள்ளது. அவ்வாறே, தாக்குதலுக்கு இலக்கான சிறுமி அவ்விடத்திலேயே சிறுநீர் கழித்துள்ளார்.
பின்னர் அவரது தந்தை அவற்றை ஒன்றாக சேகரித்து சிறுமியை பருகச் செய்துள்ளதுடன், மிகுதியை அவரது தலையில் ஊற்றி சித்திரவதை செய்துள்ளதாகவும், பின்னர் சிறுமியை நீராட்டி வீட்டுக்குள் அழைத்து வந்துள்ளதாகவும் வழக்கு விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.
மேலும், குறித்த சிறுமியின் தாய், தந்தையிடமிருந்து பிரிந்து குருணாகல் பிரதேசத்தில் வேறொரு நபருடன் வசித்துவந்துள்ளார். குற்றஞ்சாட்டப்பட்ட நபரும் வேறொரு பெண்ணுடன் வசித்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சிறுமியின் தாய், தந்தை பிரிந்து வேறு திருமணங்களை செய்துகொண்டமையால், சிறுமி தனது பாட்டனாரின் பாதுகாப்பிலேயே இருந்துள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டதால், 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.