இராதாகிருஸ்ணன் மாகாண ஆளுநர் மாகாண கல்வி பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து நடவடிக்கை.
அவிஸ்ஸாவெல்லை புவக்பிடிய தமிழ் வித்தியாலயம் மற்றும் ஆரம்ப தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றிற்று இன்னும் இரண்டு வாரங்களில் உயிர்த்த ஞாயிறு தின சம்பவத்தை தொடர்ந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற 17 ஆசிரியர்களுக்கு பதிலாக புதிய ஆசிரியர்கள் உள்வாங்கப்படுவார்கள். இதனை மாகாண ஆளுநர் மற்றும் கல்விப் பணிப்பாளர் தன்னிடம் தெரிவித்துள்ளார் என மலையக மக்கள் முன்ன்ணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக பாடசாலையின் அதிபர் செபஸ்டியன் இது தொடர்பாக நேற்று 04.07.2019 விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து அவர் இது தொடர்பாக மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசாமில் மற்றும் மேல் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.அதன்போதே மாகாண ஆளுநர் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோரும் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வேலுசாமி இராதாகிருஸ்ணன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
குறித்த பாடசாலையின் ஆசிரியர்களை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பூர்த்தி செய்வதாக மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசாமில் மற்றும் மேல் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோர் என்னிடம் உறுதியளித்துள்ளனர்.கடந்த வாரம் பட்டதார் ஆசிரியர்களின் நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளதாகவும் அந்த தேர்வில் தெரிவு செய்யப்படுகின்றவர்களை உடனடியாக குறித்த பாடசாலைக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் ஏற்கனவே குறித்த பாடசாலையில் கல்வி கற்பித்த ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் தற்காலிகமாக இணைந்து கொண்டு சேவையாற்ற விரும்புவார்களானால் அவர்களையும் இணைத்துக் கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் அது தொடர்பான தகவல்களை மாகாண கல்வி பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வருமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
எனவே ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் மேல் மாகாண கல்வி பணிப்பாளருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.கடந்த உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற சம்பவத்தின் பின்பு ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக அவிஸ்ஸாவெல்லை புவக்பிடிய தமிழ் வித்தியாலயம் மற்றும் ஆரம்ப தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றிற்றில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் ஆசிரியர்கள் அன்றை மேல் மாகாண ஆளுநரால் திடீரென இடமாற்றம் செய்ததை தொடர்ந்து அந்த பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது.
இது தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் அது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டனர்.அது மாத்திரமன்றி அன்று இருந்து ஆளுநரும் எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இல்லாமல் குறித்த ஆசிரியர்களை இடமாற்றம் செய்துள்ளார்.இதன் காரணமாக குறித்த பாடசாலையில் கல்வி பயிலுகின்ற பெருந்தோட்ட மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.அது மட்டுமன்றி ஒரு பிழையான முன்னுதாரணத்தை ஆளுநர் மேற்கொண்டுள்ளார் என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட வேண்டும்.
எனவே கல்வி தொடர்பான தீர்மானங்களை எடுக்கின்ற பொழுது மிகவும் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.ஏனெனில் இவ்வாறான பிழையான தீர்;மானங்களால் பாதிக்கப்படுவது மாணவர்களே அன்றி ஆசிரியர்கள் அல்ல.மேலும் பெருந்தோட்ட பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டே குறித்த ஆசிரியர்கள் ஆசிரிய சேவைக்கு உள்வாங்கப்பட்டார்கள்.எனவே அவர்களை எந்தவிதமான திட்டமிடலும் இன்றி இடமாற்றம் செய்த காரணத்தால் அந்த பாடசாலைக்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.