128/டீ, பிஸ்கால் வீதி
அக்கரைப்பற்று 03
07.06.2019
கௌரவ றவூப் ஹக்கீம், பா.உ
கௌரவ றிசாட் பதியுடீன், பா.உ
கௌரவ கபீர் ஹாசீம், பா.உ
கௌரவ எம்.எச். அப்துல் ஹலீம், பா.உ
கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ், பா.உ
கௌரவ அலிஷாஹீர் மௌலானா, பா.உ
கௌரவ பைசால் காசீம், பா.உ
கௌரவ எம்.எஸ். அமீர் அலி,பா.உ
கௌரவ ஏ. மஹ்ரூப், பா.உ
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு,
இனங்களுக்கிடையில் சந்தேகமற்ற,உறுதியான சமூக நல்லிணக்கத்தை உருவாக்க அமைச்சுப் பதவியை தியாகம் செய்த தங்களிடம் அன்பான வேண்டுகோள்
இலங்கை நாட்டில் பல நூற்றாண்டு காலமாக சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகங்கள் எல்லோருமே ஒரே இலங்கையன் என்ற ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்து வருகின்ற சூழ்நிலையில் ஒருசில இனவாத சக்திகள் எமது சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைக்குமுகமாக குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கெதிராக வன்முறை தாக்குதல்களை மேற்கொண்டமையானது தாங்கள் அறிந்த விடயமே!
கடந்த ஏப்ரல் மாதம் 21 ம் திகதி எமது நாட்டில் கிறிஸ்தவர்களுடைய ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று அப்பாவி கிறித்தவர்கள் மீது முஸ்லிம் பெயர் தாங்கிய சில பயங்கரவாத தீய சக்திகள் மிலேச்சத்தனமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு பாரிய உயிரழிவை ஏற்படுத்தியமையானது மனதால் ஏற்றுக்கொள்ள முடியாததும் பாரபட்சம் இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டியதொரு கொடூரச் செயலாகும்.
நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களுமே இச் செயலை மேற்கொண்ட பயங்கரவாத சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை கண்டுபிடித்துக் கொடுப்பதற்கு இலங்கைத் தேசிய பாதுகாப்புப் படையினருக்கு பல வகையிலும் உதவியிருந்த நல்லதொரு வேளையில், மீண்டும் ஒரு தடவை ஒருசில இனவாதிகளின் சூழ்ச்சிகளினால் முஸ்லிம் மக்களுக்கெதிராக சென்ற மே மாதம் முஸ்லிம்கள் நோன்பிரிந்த தினங்களில் சில பிரதேசங்களிலே காட்டுமிராண்டித்தனமான வன்முறைகள் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடு மனதை உருக்கி நிற்கின்றது.
இச் சூழ்நிலையில் ஈஸ்டர் தாக்குதல்களுடன் ஒருசில முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருக்கின்றது எனச் சந்தேகிக்கப்பட்டு அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கூறி கௌரவ பாராளுமன்ற உறுப்பினரான சங்கைக்குரிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்த சூழ்நிலையில் அமைச்சர்களாக பதவிவகித்த தாங்கள் அனைவரும் தங்களில் சிலருக்கெதிரான சுதந்திரமான விசாரணையை உறுதிப்படுத்துமுகமாக, அனைவருமாக தங்களுடைய அமைச்சுப்பதவியை இராஜனாமா செய்தமையானது, எமது முஸ்லிம் சமூகம் நாட்டின் சமாதானத்திற்காகவும் குழப்பமற்ற நிம்மதியான தேசத்தை உருவாக்குவதற்காகவும் எதனையும் இழக்கத் தயாராக இருக்கின்றது என்பதை பறைசாற்றியிருக்கின்றது. இப்பதவி கூட்டு இராஜனாமாவானது சுபீட்சமான வாழ்க்கையை எதிர்பார்க்கும் அனைத்து மக்களினதும் உள்ளத்தில் பாரிய நன்மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் நாடு பூராகவும் வசிக்கின்ற அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் கடந்த நோன்பு காலத்தில் நிம்மதியாக வணக்க வழிபாடுகளில் ஈடுபட இந்த இன வன்முறைகளை தூண்டும் இனவாதிகளின் செயற்பாடுகள் மனஅச்சத்தை ஏற்படுத்தியிருந்த சூழ்நிலையில் பெருமளவான முஸ்லிம்கள் இரவு நேர வணக்கங்களில் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மன்றாடி கேட்ட துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதின் பிரதிபலிப்பாகவே சமூகங்களுக்கிடையில் சந்தேகங்களற்ற நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தங்களுடைய கூட்டுப்பதவி இராஜனாமா அமைந்திருக்கின்றதெனலாம்.
மட்டுமல்லாமல், தங்களுடைய பதவி இராஜனாமாவைத் தொடர்ந்து இலங்கையில் உயரிய அந்தஸ்த்தைக் கொண்டுள்ள சங்கைக்குரிய பௌத்த மகாநாயக்கர் தேரர்கள் தங்களை மீண்டும் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்க விடுத்திருக்கும் செய்தியானது, தங்கள் எல்லோரினதும் பதவி இராஜனாமாவில் நாட்டு மக்களுக்கிருந்த உண்மையான அனுதாப உணர்வைக் காட்டியிருக்கின்றது.
ஆனால் சங்கைக்குரிய பௌத்த மகாநாயக்கர் தேரர்களினது வேண்டுகோளை செவிமடுக்க வேண்டியுள்ள இச் சூழ்நிலையில் தங்களது பதவி விலகலின் போது நீங்கள் விதித்திருந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்துமுகமாக,
பயங்கரவாதத்தோடு தொடர்புடையவர்களாக சந்தேகப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள், முன்னெடுக்கப்படும் விசாரணையின் போது பயங்கரவாதத்தோடு தொடர்புபட்டிருந்தால் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகுப்பதுடன் மாறாக அவ்வாறு முஸ்லிம் அரசியல்வாதிகள் பயங்கரவாத தாக்குதலோடு சம்பந்தப்படாதிருப்பின் அவர்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர்களுக்கெதிராக வேண்டுமென்று சூழ்ச்சி செய்து அரசியல் செய்ய எத்தனிக்கும் ஒருசில அரசியல்வாதிகளின் கேவலமான நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன்,
நாட்டில் இனவாதிகளின் வன்முறைகளிலிருந்து முஸ்லிம் மக்களையும் ஏனைய சிறுபாண்மை மக்களையும் பாதுகாக்குமுகமாகவும் மற்றும் அண்மையில் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதலோடு சம்பந்தப்பட்ட வன்முறையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வைப்பதுடன்
குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கும் அவர்களின் மத வழிபாட்டுத்தலங்களுக்கெதிராக பிரயோகிக்கப்பட்ட தாக்குதலுக்கான முழுமையான நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்ளுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னருமே ...
தாங்கள் இவ் அமைச்சுப் பதவியை மீண்டும் பொறுப்பேற்பது மிகவும் சிறந்த நிலையான தீர்வாகவும் (Sustainable Solution) இருக்கக் கூடும்.
மேலும் இந்நாட்டில் சுபீட்சமானதொரு சூழல் உருவாகுவதுடன் அனைத்து சமூகங்களுக்குமிடையிலும் ஒரு சிறந்த சகோதர உணர்வு ஏற்படுத்தப்பட்டு போட்டித்தன்மைமிக்க சர்வதேச சூழலின் சவாலினை முறியடித்து எமது இலங்கை தேசம் மிகப்பெரிய வெற்றிகளை அடைய வேண்டுமென இறைவனை அன்றாடம் வேண்டும் ஒரு தூய்மையான இலங்கையனாக மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
தங்களது அனைத்து சமூக ரீதியிலான செயற்பாடுகளுக்கும் ஏழைத் தாய்களினதும் அப்பாவி முஸ்லிம்களினதும் துஆக்கள் எப்போதும் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.
சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூக அரசாங்க உத்தியோகத்தர்களைக் கொண்ட தொழிற்சங்கமொன்றினது தலைமைப் பதவியை சுமந்து கொண்டிருப்பதில் மற்றைய சமூகங்களோடு எவ்வாறான விட்டுக்கொடுப்பனவோடும் புரிந்துணர்வோடும் ஒற்றுமையாக வாழ வேண்டியதின் முக்கியத்துவத்தை உணர்வுபூர்வமாக அறிந்தவனாகவே இக் கடிதத்தை எழுயுள்ளேன்..
மிக்க நன்றி
விசுவாசமிக்க இலங்கையன் (A Loyal Sri Lankan)
ஒப்பமிடப்பட்டது
கே.எம். கபீர்
அக்கரைப்பற்று