நேர்கண்டவர் தேவராசா விருஷன்-
கேள்வி – அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சிறுபான்மை மக்களுக்கு எதிரான விடயமாக பார்க்கப்படுவது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்- பிரேரணையில் உள்ள விடயங்களின் உண்மை மற்றும் பொய் என்பன எனக்குத் தெரியாது. இருப்பினும், மிகப் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
எனினும், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. எனவேதான், பல தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பான இறுதி முடிவை எடுக்கவில்லை.
இது இவ்வாறிருக்க, சிறுபான்மை இனங்களுக்கிடையிலான ஒற்றுமையென்பது முக்கியமானது. ஆனால், அந்த ஒற்றுமை பரஸ்பரமாக இருக்க வேண்டும். குறிப்பாக, வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பானது முஸ்லிம் இனத்தவரான அஸ்மின் என்பவருக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியை வழங்கியது. அதேபோன்று, கிழக்கு மாகாணத்திலும் எம்மிடம் 11 உறுப்பினர்கள் இருந்த போதும் 7 உறுப்பினர்களை கொண்ட அவர்களிடமே முதலமைச்சர் பதவியை கொடுத்தோம்.
இதற்குக் காரணம் தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதற்காகவேயாகும்.
ஆனால், தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட கல்முனை தமிழ் பிரதேச செயலகம் அமைப்பதற்கு முஸ்லிம் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பினை வெளியிடுகின்றனர். இவ்வாறான நிலைமையில், வெறுமனே தமிழ் மக்கள் மத்தியிலிருந்து மாத்திரம் இன ஒற்றுமையை எப்போதும் வெளிப்படுத்த முடியாது. ஓற்றுமை என்பது பரஸ்பரம் இருக்க வேண்டும். அந்நிலை இல்லாதபோது தமிழ் மக்கள் குறிப்பாக மன்னார், மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இப் பிரேரணை விடயத்தில் ஆதரவாக செயற்படுமாறு வலியுறுத்துகிறார்கள். இதுவே உண்மை.
கேள்வி - இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரேரணை தொடர்பாக எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ளப் போகிறது?
பதில் - கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாகவே தீர்மானித்துள்ளது. அதே போன்று, மன்னார் மாவட்ட தமிழரசுக்கிளையும் இதே முடிவை எடுத்துள்ளது. இது தவிர, கூட்டமைப்பின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாகவே கருத்துக்களைக் கூறுகிறார்கள். ஆனால், கூட்டமைப்பின் முடிவு இன்னமும் எட்டப்படவில்லை. எமது பாராளுமன்றக் குழுக்கூட்டம் இடம்பெற்று அதில் முடிவொன்று எட்டப்பட்ட பின்னரே நான் அது தொடர்பாகக் கூற முடியும்.
கேள்வி - கூட்டமைப்பின் பங்காளி கட்சியான உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்- எமது கட்சியிலும் பெரும்பான்மையானோர் பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிக்கக் கூறுகிறார்கள். எனினும், நாம் கட்சி ரீதியாக இறுதி முடிவை எடுக்கவில்லை. எனினும், இப் பிரச்சினைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உடைத்துவிட மாட்டோம். அதற்கேற்றவகையில் எல்லோருமாக ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
கேள்வி – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே இப் பிரேரணை தொடர்பாக காணப்படும் வௌ;வேறு விதமான கருத்துக்கள் கூட்டமைப்புக்குள் முரண்பாட்டை ஏற்படுத்துவதாக உள்ளதே?
பதில் - சாதாரணமாக ஒரு கட்சிக்குள்ளேயே பல கருத்துக்கள் உள்ளதை நீங்கள் அவதானிக்க முடியும். இந்நிலையில், பல கட்சிகளைக் கொண்ட கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள் இருப்பது சகஜம். ஆனால், அது முரண்பாடல்ல. கூட்டமைப்பின் செயற்பாடு ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்கின்றோம். கருத்து வேறுபாடுகளைத் தாண்டிய முரண்பாடான நிலை உருவாகுமானால் அதனை நாம் கவனமாக கையாள்வோம்.
கேள்வி – பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவின் செயற்பாடுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில் - இக் குழுவானது அரசியல் இலாபங்களுக்காக செயற்படக்கூடாது. இது மிகப் பாராதூரமான பிரச்சினை. ஓட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே அரசியலுக்காக எந்தவொரு செயற்பாடும் மேற்கொள்ளப்படக் கூடாது நேர்மையாக செயற்படுவதனூடாகவே நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல முடியும். மேலும் இவ்விவகாரத்தை பலர் மத்தியில் தெரிவுக்குழு விவாதிப்பது கேள்வியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, இவற்றை கவனமாக செயற்படுத்த வேண்டும்.
கேள்வி – ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் பின்னர் நாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டாலும் வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டில் வேறெங்கும் இல்லாதளவு அதிகரிக்கப்பட்டுள்ளதே?
பதில் - உண்மை, இது பிழையான அணுகுமுறையாகும். இது தொடர்பாக ஜனாதிபதியிடத்திலும் பிரதமரிடத்திலும், பாராளுமன்றத்திலும் பேசியிருக்கிறோம். பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமானது. ஆனால் விசேடமாக மக்களை ஒடுக்குகின்ற அவர்களை மன ரீதியாகத் தாக்குகின்ற வகையில் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது.
கொழும்பிலிருந்து மதவாச்சிவரை எந்தவொரு சோதனைச்சாவடியும் இல்லை. ஆனால் அதற்குப் பின்னர் 10 கிலோ மீற்றருக்கு ஒன்று என்ற வீதத்தில் சோதனைச்சாவடிகள் காணப்படுகின்றது. இது தேவையற்ற ஒன்று. தமிழ் மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்துகின்றதான செயற்பாடாகும். இது தொடர்பாக நாம் பேசியிருக்கிறோம். ஆவர்கள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.
கேள்வி – தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக விட்டுக்கொடுப்புகளை செய்கின்ற போதும் தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படவில்லை. அதற்கான சாத்தியங்கள் இனிமேலும் இருக்கின்றதா?
பதில் - இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது புதிய அரசியலமைப்பு உருவாக்கமாகும். ஆனால் தென்னிலங்கை அரசியல் மூன்றாக உடைந்துள்ள இச்சூழலில்
புதிய அரசியலமைப்பு உருவாகும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. ஆரம்பத்தில் இப்புதிய அரசாங்கம் அமையும் போது எம்மிடம் அந்த நம்பிக்கை இருந்தது. காரணம் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்திருப்பதால் இச்சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் எனத் தீர்மானித்திருந்தோம்.
நாம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதற்குக் காரணம் இனப் பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையினை நாங்களாகவே உடைப்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகும். நாங்கள்தான் தவறிவிட்டோம் என்ற நிலையை இந்த அரசு சர்வதேசத்துக்கு காண்பித்து விடக்கூடாது. இப்போது இந்த அரசு எதையும் செய்யாதென்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாக்கியிருக்கிறது. இனி சர்வதேச ரீதியாக நாம் அழுத்தங்களைக் கொடுக்கின்ற போது என்ன நடக்கின்றது என்பதைப் பார்ப்போம். மேலும் இதனை ஓர் பேசுபொருளாக வைத்திருக்காவிட்டால் அது மறந்து போய்விடும். எனவே தொடர்ச்சியாக அதனை பேசுபொருளாக வைத்திருப்பது தமிழ்க் கட்சிகளது கடமை.
கேள்வி – நாடு தற்போது எதிர்கொண்டுள்ள இன்பிபரச்சினைக்கு மத்தியில் தீர்வு கிடைப்பதற்குரிய சாத்தியம் தொடர்ந்தும் இருப்பதாக கருதுகின்றீர்களா?
பதில் - சாத்தியமில்லை. தென்னிலங்கை அரசியல் மூன்றாக உடைந்துள்ள நிலைமை, அது தவிர சிங்கள அரசியல்வாதிகள் அடிப்படையிலேயே அதிகாரப் பரவலாக்கத்துக்கு எதிரானவர்கள். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேவையொன்று அவசியமான நிலையிலேயே பிரதமர் ரணில் புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். ஆகவே தமிழ் மக்கள் பலமாக ஒரே அணியாக இருப்பது முக்கியமானது.
கேள்வி – கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மன்னார் மாவட்டத்தில் 500 ஏக்கர் காணியை வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உங்களது கருத்தென்ன?
பதில் - இவ்வாறான சம்பவங்கள் பல இடம்பெறுகின்றன. இது அப்பிரதேசங்களை ஆக்கிரமிக்கின்ற எண்ணத்துடனே செய்யப்படுவதாக தமிழ் மக்கள் நம்புகின்றார்கள். அந்நிலையில் இத்தகைய சம்பவங்கள் நாம் முன்னர் கூறியது போல இன ஒற்றுமை என்ற விடயம் பாரிய கேள்விக்குரியாக அமையும்.
கேள்வி – நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கூட்டமைப்பு அதனை ஆதரிப்பதாக அல்லது நடுநிலை வகிப்பதாக தீர்மானித்தால் அதனூடாக தமிழ் மக்களுக்கான நன்மை என்ன?
பதில் - நேரடியான இலாபம் எதுவும் தமிழ் மக்களுக்கு இல்லை. எனினும் இச் சம்பவத்தில் அதிகளவு இறந்தவர்கள் தமிழ் மக்களே. எனவே எமக்கு நேரடியான பொறுப்பொன்று உள்ளது. இதற்கு சரியான நியாயம் கிடைக்க வேண்டும்.
கேள்வி – அமைச்சர் றிஷாட் பதியூதீன் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்து நடுநிலையான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென தென்னிலங்கை அரசியலில் வலுக்கும் கருத்துக்கள் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?
பதில் - அது அவரது சொந்த விருப்பம். ஆனால், குழப்படைந்துள்ள இந்நிலைமையிலிருந்து நாட்டையும் அவரையும் மீட்க வேண்டுமானால் தனது பதவியை இராஜினாமாச் செய்வது புத்திசாலித்தனமாக அமையும்