2018 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்பப் பாடத்தின் செயன்முறைப் பரீட்சையை, முதற்தடவையாக இணையவழி (ஒன்லைன்) ஊடாக நடத்தப்படவுள்ளது.
இம்மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள இப்பரீட்சை, 18 ஆம் திகதி வரை நாடு முழுவதுமுள்ள 655 பரீட்சை நிலையங்களில் நடத்தப்படுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இப்பரீட்சையில் தோற்றுவதற்காக, ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 97 மாணவர்கள் விண்ணப்பித்திருக்கும் நிலையில்,
குறித்த விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள், சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், இதுவரையிலும் அனுமதி அட்டைகள் கிடைக்காதவர்கள் பாடசாலைகள் ஊடாக பரீட்சைகள் திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சகல பரீட்சார்த்திகளும் உரிய நேரத்துக்கு முன்னரே பரீட்சை நிலையங்களுக்குச் சமூகமளிக்க வேண்டுமென்றும் கேட்கப்பட்டுள்ளதோடு, ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக அனுமதி அட்டையுடன், தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது வாகன அனுமதிப் பத்திரம் இவற்றில் ஏதாவது ஒன்றுடன் குறித்த பரீட்சை நிலையங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு நாளைக்கு இரண்டு அமர்வுகள் வீதம், தொடரச்சியாக எட்டு நாட்களுக்கு இப்பரீட்சை நடத்தப்படும். பரீட்சையின்போது சுட்டிலக்கம் மற்றும் எழுதும் மொழியைத் தெளிவாகக் குறிப்பிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டு வினாத்தாள்களுக்காக மூன்று மணித்தியாலங்கள் வழங்கப்படுவதுடன், பதிவேற்றுவதற்காக மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்படுமென்றும், பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பரீட்சை மண்டபத்திற்குள் ஸ்மார்ட் கைக்கடிகாரம், கையடக்கத் தொலைபேசி, இலத்திரனியல் உபகரணங்கள் என்பவற்றை எடுத்து வருவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் பரீட்சார்த்திகள் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு எந்தப் பரீட்சையிலும் தோற்ற முடியாது தடுக்கப்படுவர் என்றும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
