இளைஞர்கள் மத்தியில் போதைவஸ்த்து பாவனையின் தீங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தி முரண்பாட்டுச் சூழலில் இளைஞர்கள் எவ்வாறு மதிநுட்பத்துடன் செயற்பட்டு வீண் விபரீதங்களை தடுப்பது தொடர்பில் அறிவூட்டுவற்கும் அவர்களுடைய ஆளுமை விருத்தியை மே;படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கும்வகையிலும் மெஸ்ரோ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'வலிமையான சமூகத்திற்கு ஆளுமையான இளைஞர்கள்' எனும் தொனிப்பொருளிலான தலைமைத்துவ செயலமர்வு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் சம்மாந்துறை தொகுதி இளைஞர்களுக்கு நேற்று (4) திங்கட்கிழமை நடைபெற்றது.
மெஸ்ரோ அமைப்பின் தலைவரும் பதில் நீதவானுமாகிய சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.நசீல் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் பெருந்திரளான இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டதனை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இளைஞர்கள் வழிதவறாமல் தமது இளமைக் காலத்தில் பயணித்து எதிர்காலத்தை வளமானதாக மாற்றிக்கொள்வதற்கு ஏதுவாக நடாத்தப்பட்ட இச்செயலமர்வில் துறைசார் தலைசிறந்த வளவாளர்கள் கலந்துகொணடனர்.
அந்தவகையில் இலங்கையின் சமகால அரசியலும் முஸ்லிம் இளைஞர்களின் வகிபாகமும் என்னும் தலைப்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரும் மெஸ்ரோ அமைப்பின் ஸ்தாபக தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீசும், புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சியும் சிறுபான்மைச் சமூகங்களும் என்னும் தலைப்பில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறைத் தலைவரும் மெஸ்ரோ அமைப்பின் ஸ்தாபக உறுப்பினருமான கலாநிதி எம்.எம். பாசிலும், முரண்பாட்டுச் சூழலில் இளைஞர்களின் வகிபாகம் என்னும் தலைப்பில் கலாநிதி ரவூப் செய்னும், தடுமாறும் இளைஞர்களும் சமூகப் பொறுப்புக்களும் என்னும் தலைப்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் மொழித்துறை பதில் தலைவருமான பேராசிரியர் றமீஸ் அப்துல்லாவும், போதையற்ற தலைமுறை என்னும் தலைப்பில் மனநல வைத்தியர் சராப்தீனும் கருத்துரையாற்றினார்;கள்.
காலத்திற்கு பொருத்தமானதும் இளைஞர் சமூகத்திற்கு ஏற்றதுமான தலைப்புகளில் இங்கு கருத்துரையாற்றப்பட்டமை இளைஞர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையப் பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.