- கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி
ரிஹ்மி ஹக்கீம் PMASகடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் -
மீனவ சமூகம் இன்று அடைந்திருக்கும் நிலைமையினை பார்க்கும் போதும் கேட்கும் போதும், பாரிய கவலையும் வருத்தமும் ஏற்படுவதாகவும், இத்துறையில் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து கடற்றொழில் துறையை எழுச்சியடையச் செய்ய துறை சார்ந்த அறிவு மற்றும் அனுபவமுடைய குழுவொன்றின் மூலம் ஆலோசனைகளைப் பெற்று கடற்றொழிலை இந்நாட்டின் மூன்றாவது அதி கூடிய வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித் தரும் கைத்தொழிலாக மாற்றுவோம் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி தெரிவித்தார்.
நீர்கொழும்பில் உள்ள தேசிய கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். சங்கத்தின் தற்போதைய நிலைமை மற்றும் குறைபாடுகள் குறித்து அங்கு உரையாடப்பட்டது. தேசிய கடற்றொழில் கூட்டுறவு சங்க பிரதான காரியாலயத்திற்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரொருவர் வந்திருப்பதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இராஜாங்க அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், "உங்களது சகல பிரச்சினைகளையும் கேட்டறிந்தேன். மட்டுமல்லாது அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். நான் 1977 இல் மாதெல் பிரதேச கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தின் முகாமையாளராக இருந்தேன். அதன் மூலம் இது தொடர்பான அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன். கடற்றொழில் புரிபவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பதை அனுபவத்தில் தெரிந்துள்ளேன். ஜோசப் மைக்கல் பெரேரா தான் கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களை நாடு முழுவதும் ஸ்தாபித்தார். அதன் மூலம் கடற்றொழிலில் பாரிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆனால் இன்று அது இல்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது. நான் கடற்றொழில் இராஜாங்க அமைச்சராக மூன்றரை வருடங்கள் இருக்கிறேன். ஆனால் தனி ஐதேக ஆட்சிக்கு வந்த பிறகே வேலை செய்ய முடிகிறது.
கடற்றொழில் கூட்டுறவை பலப்படுத்த துரித முன்னெடுப்பு
எமது நாட்டில் மீனவர் போன்று கடற்றொழிலையும் விற்று சாப்பிடும் யுகம் தான் இருந்தது. மீனவர்களின் நலனுக்காக கௌரவ ஜோசப் மைக்கல் பெரேரா கடற்றொழில் கூட்டுறவு சங்கம் அமைத்தது போன்று கௌரவ ராஜித சேனாரத்ன தேசிய கடற்றொழில் மகா சம்மேளனத்தினை அமைத்தார். ஆனால் முதலாவது மாகாண அரசின் கீழும், கடற்றொழில் அமைச்சின் கீழும் வருகிறது. 25 இலட்சம் கடற்றொழிலாளர்களுக்கான வங்கி முறையை கொண்டு வந்தது போல அவர்களுக்கான காப்புறுதித் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். கொரியா போன்ற நாடுகளில் இவையனைத்தும் கடற்றொழில் சம்மேளனத்தின் கீழே இயங்குகின்றன.
சிறியளவு மீன்பிடி கைத்தொழில் புரிபவர்களுக்கு மானிய உதவி
கடற்றொழிலில் சிறந்த அறிவுள்ள ஒரு நிபுணர் குழுவை அமைத்து அவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள இருக்கிறேன். எமது மீனவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்குரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஆனால் இன்று அவர்களது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. காரணம் நாம் நேசிக்கும் கைத்தொழிலின் நிலை. பாரியளவு மீன்பிடி கைத்தொழில் புரிபவர்களுக்கு போன்று சிறியளவு மீன்பிடி கைத்தொழில் புரிபவர்களுக்கும் மானியம் வழங்க நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அவர்களது படகுகளின் இயந்திரங்களுக்காக 50% மானியம் வழங்குவதற்கான நடைமுறைகளை செயற்படுத்தி வருகிறோம்.
கடற்றொழில் மாவட்டங்களில் மீனவ வீடமைப்புத் திட்டங்கள்
மீனவர்களின் வீட்டுப் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத் தரும் செயற்பாடுகளில் நான் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதை கூற வேண்டும். இதற்காக கடற்றொழில் மாவட்டங்கள் முழுவதும் மீனவ வீடமைப்புத் திட்டங்கள் ஏற்படுத்தப்படும். இதற்காக காணியுடன் ரூபா 500 000 கடனும், ரூபா 150 000 நிதியுதவியும் அரசாங்கம் வழங்கும்" என்றும் இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, தேசிய கடற்றொழில் மகா சம்மேளனத்தின் செயலாளரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.