முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினராகவும் சாய்ந்தமருது பள்ளிவாயில்களின் மரைக்காயராகவும் இருந்து பிரதேசத்திற்கு அரும் பெரும் சேவை செய்த சமூக சேவகன் எஸ்.ரி.கபீர் அவர்களின் மறைவுக்கு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் நேற்று சபை அமர்வில் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து உரையாற்றினார்.
கல்முனை மாநகர சபை விசேட அமர்வு நேற்று (14) திங்கட்கிழமை முதல்வர் ஏ.எம்.றகீப் தலைமையில் இடம் பெற்றது.
இதன்போது சபை அமர்வின் இறுதியில் தர்ம கபீர் என அழைக்கப்படும் எஸ்.ரி.கபீர் அவர்கள் மரணித்த விடயத்தை சபையில் தெரிவித்து உரையாற்றிய முதல்வர் தனதுரையின் போது,
1994 ஆம் ஆண்டு தொடக்கம் 1999 ஆம் ஆண்டு வரை மர்ஹூம் எல்.ரீ.கபீர் முன்னைய கல்முனை பிரதேச சபையின் உறுப்பினராக இருந்து மக்களுக்கு சேவையாற்றியுள்ளார். அத்துடன் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மரைக்கார் சபையிலும் அவர் நீண்ட காலமாக அங்கம் வகித்து, பொதுப்பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவரது இழப்பில் துயருறும் குடும்பத்தினருக்கு சபை சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.
மர்ஹூம் எஸ்.ரீ.கபீர் அவரது பதவிக் காலத்தில் மட்டுமல்லாது ஏனைய காலத்திலும் பல்வேறு சமூக சேவைகளை இப் பிரதேசத்திற்கு செய்ததுடன், அரசியல் கட்சியில் இணைந்து பிரதேச இளைஞர் யுவதிகள் பலருக்கும் தொழில் வாய்ப்புக்களை வழங்கி முன்னின்று உழைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.