நான் ஜனாதிபதியை 5 சதத்திற்கும் நம்பவே மாட்டேன் – ஹிருணிகா
கஹட்டோவிட்ட ரிஹ்மி-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் இன்னும் ஒரு வருடம் பொறுமையுடன் இருந்திருந்தால் அழகாக வெற்றியை தனதாக்கிக் கொள்ள முடிந்திருக்கும். ஆனால் அவர் ஜனாதிபதியின் பேச்சை நம்பி தற்போது ஏமாந்து விட்டார் என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்தார்.
இன்றைய தினம் (18) அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சென்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொது ஜன பெரமுன கட்சி பாரிய வெற்றியை பெற்றுக்கொண்டது. அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி அவர்கள் ஒரு வருடம் பொறுமையுடன் இருந்திருந்தால் ஆட்சிக்கு வர முடிந்திருக்கும். ஆனால் ஜனாதிபதி சிறிசேன தம்மிடம் 113 பேரின் ஆதரவு இருப்பதாக கூறி அவரை பிரதமராக்கினார்.
அதன் பின்னரே இத்தகைய மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச அவர்கள் மீது மக்கள் வைத்திருந்த மதிப்பும் இல்லாமல் ஆகியுள்ளது. இவை அனைத்திற்கும் காரணமான ஒரே நபர் ஜனாதிபதி அவர்களே!
15 ஆம் நாள் கட்சித் தலைவர்களைக் கூட்டி, மறுநாள் பிரச்சினைகள் எதுவும் நடைபெறாது. பயப்பட வேண்டாம் என்று கூறினார். ஆனால், மறுநாள் நடந்தவற்றைப் பார்க்கையில் அவர் இரட்டை வேடம் இடுகிறாரோ என்று தோன்றியது. மஹிந்த ராஜபக்ச அவர்கள் விரலை நீட்டினால் 2, 3 இற்கு மடிபவர்கள் அன்று அத்தனை அட்டகாசம் செய்தனர்.
ஜனாதிபதி சிறிசேன அவர்கள் மீண்டும் தேர்தல் கேட்க வேண்டாம் என்று அவர்களை கேட்டுக்கொள்கிறேன். மிகவும் அவமானப்பட்டுப் போவீர்கள். இந்த நேரத்தில் இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவர்கள் பகிரங்கமாக ஊடகவியலாளர்களை அழைத்து, ‘ஜனாதிபதி என்னை ஏமாற்றினார். 113 இருப்பதாக கூறினார். ஆனால் நான் சென்ற பிறகு அவ்வாறு இல்லை. எதிரணியிலிருந்து விலைக்கு வாங்குவதிலும் தோல்வியுற்றோம். எனவே பின் வாங்குகிறோம்’ என்று.
மிளகாய்த் தூள் கொண்டு வந்தவர் மஹிந்தானந்த அளுத்கமகே. வீசியவர் பிரசன்ன ரணவீர. அவர் பொலிசாரினை கன்னத்தில் அறைந்தார். அது சிறைத் தண்டனை வழங்கப்படவேண்டிய குற்றம். நான் நினைக்கிறேன் 10 வருடங்களாவது சிறைத் தண்டனை அனுவிக்க வேண்டிய குற்றமாகும்.
இந்த நிலையில் செய்திகளில் முக்கியமான விடயங்கள் மறைக்கப்பட்டாலும் சமூக ஊடகங்கள் மூலம் எமது செய்திகளை பகிர்வோருக்கு விசேடமாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது மக்கள் அறிவு மிக்கவர்கள். சமூக ஊடகங்கள் மூலம் அவர்களுக்கு யார் செய்தது பிழை என்று நன்றாகத் தெரியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.