ஓ.எல் படிக்கும் சிலமாணவர்; ஒருசொல்லைக்கூட எழுதத்தெரியாத அவலநிலை நிஸாம் அதிரடித்தகவல்!

கிழக்கில் 11வருட பாடசாலைப்படிப்பைப் பூர்த்திசெய்த 10ஆயிரம் மாணவர்களை 
வெறுங்கையோடு வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றோம்: சிந்தியுங்கள்!
ஓ.எல் படிக்கும் சிலமாணவர்; ஒருசொல்லைக்கூட எழுதத்தெரியாதஅவலநிலை
சம்மாந்துறையில் கிழக்குமாகாணகல்விப்பணிப்பாளர் நிஸாம் அதிரடித்தகவல்!
காரைதீவு நிருபர் சகா-

கிழக்கு மாகாணத்தில் 11வருடகாலம் அதாவது தரம் 1இலிருந்து தரம் 11வரை 2100நாட்கள் பாடசாலைப்படிப்பைப் பூர்த்திசெய்த 10ஆயிரத்து 250 மாணவர்களை வெறுங்கையோடு வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றோம். இதனையிட்டு கல்விச்சமுகம் கவலைப்படாமலிருக்கலாமா? பெற்றோராக இருந்து சிந்தியுங்கள்.
இவ்வாறு கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் சம்மாந்துறையில் நடைபெற்ற கல்விஅபிவிருத்தி மாநாட்டில் தெரிவித்தார்.

கடந்தவாரம் கிழக்கில் 3பாடசாலைகளுக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டபோது அப்பாடசாலைகளில் க.பொ.த.சாதாரணதரம் கற்கும் சில மாணவர்கள் ஒரு சொல்லைக்கூட எழுதமுடியாமல் சிரமப்பட்டதை அவதானிக்கமுடிந்தது. இதற்கு யார் காரணம்? இந்த 11வருடகாலமும் அவர்களுக்கு நாம் எதைக்கற்றுக்கொடுத்தோம்? அவர்கள் உங்கள் பிள்ளைகளென்றால் விடுவீர்களா? சிந்தியுங்கள் என்றும் கூறினார்.
சம்மாந்துறைவலய க.பொ.த.சா.தரம் கற்பிக்கும் ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்விசார் உத்தியோகத்தர்களுக்கான கல்வி அபிவிருத்தி மாநாடொன்று நேற்றுமுன்தினம் (15) சனிக்கிழமை ஒருநாள்பூராக சம்மாந்துறை தென்கிழக்குப்பல்கலைக்கழக பிரயோகவிஞ்ஞானபீட கேட்போர்கூடத்தில் வலயகல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் தலைமையில் நடைபெற்றபோது மாகாணக்கல்விப்பணிப்பாளர் நிஸாம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்குமாகாண கல்வித்திணைக்களம் மாகாணத்திலுள்ள 17கல்வி வலயங்களிலும் இத்தகைய கல்விஅபிவிருத்தி கலந்துரையாடல்களை நடாத்திவருகின்றது. இது 7வது கலந்துரையாடல் நிகழ்வாகும். இதில் 700பேரளவில் கலந்துகொண்டனர். உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்ச்சியை நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்திலிருந்து பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.கலாநிதி திருமதி கே.வரதசீலன் திருமதி ஜோன்சன் உள்ளிட்ட கல்விஅதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
2100நாட்கள் பாடசாலையில் கற்கும் ஒரு மாணவன் சா.த.பரீட்சையை எழுதிவிட்டுச்செல்கையில் அனைத்துப்பாடங்களிலும் சித்தியில்லாது செல்லுகின்ற அவலநிலை கிழக்கில் உள்ளது. அந்தத்தொகை 10ஆயிரத்து250பேர் எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இது யாருக்குப் பாதிப்பு? நாமனைவரும் அதையிட்டுச் சிந்திக்கமாட்டோம். ஆனால் அவர்களைப் பெற்றெடுத்த தாய்தந்தையர் வாழ்நாள் பூராக கண்ணீர்விட்டு அழுதுபுலம்புவார்கள்.வேதனையடைவார்கள்.


எதைக்கற்றுக் கொடுத்தோம்?
11வருடங்களின்பின்னர் ஒருமாணவன் 1 சொல்லைக்கூட எழுதமுடியாதவனாக இருக்கின்றான் என்றால் இந்த 2100 நாட்களில் நாம் அவனுக்குச் கற்பித்தது என்ன? எதைக்கற்றுக்கொடுத்தோம்? இதற்கு யார் பொறுப்பு?
நான் ஆசிரியரைக் குற்றம் சொல்லமாட்டேன். இந்த அதிபர்கள் என்ன செய்தார்கள்? அதிபர்கள் இப்பணியிலிருந்து விலகிக்கொள்ளமுடியாது. அதிபர்களின் மேற்பார்வை இல்லாமையே இதற்கு முதல்காரணம்.
உங்களை நம்பி பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தங்கள் கரங்களில் ஒப்படைக்கின்றார்கள். அவர்களுடனான ஒப்பந்தத்திற்கு இறைவன் சாட்சி. அந்த எழுதப்படாத ஒப்பந்தத்தை யார் மீறுகின்றார்களோ அவர்களை இறைவன் நிச்சயம் தண்டிப்பான்.
அர்ப்பணிப்பானசேவையா? அலட்சியமானசேவையா?
அன்று ஆக ஒரேயொரு ஆசிரியர்கலாசாலைப் பயிற்சியை பூர்த்திசெய்த ஆசிரியர்கள் கற்பித்த மாணவர்கள் அனைவரும் எவ்வாறு எழுதினார்கள்? எவ்வாறு பிரகாசித்தார்கள்? என்பதை நாமறிவோம்.
இன்று ஆசிரியர்களுக்கு மாதாமாதம் பல்வேறுபட்ட செயலமர்வுகள் பயிற்சிவகுப்புகள். இருந்தும் 10ஆயிரத்து 250மாணவர்கள் வெறுங்கையோடு எழுதவாசிக்கத்தெரியாமல் அனுப்புகின்றோம் என்றால் என்ன காரணம்?
முந்தியது அர்ப்பணிப்பான சேவை. பிந்தியது அலட்சியசேவை என்று கூறத்தோன்றுகிறது.
வீட்டுச்சண்டையை மற்றும் அதிபருடான சகஆசிரியருடனான சண்டையை மாணவரிடத்தில் காட்டக்கூடாது.இது இறைசேவை. கற்பிக்கமுடியாதவர்கள் இந்தச்சேவையைவிட்டு வெளியேறவேண்டும்.
பாடசாலையால் ஒதுக்கப்பட்ட பலர் பாடசாலையால் கைவிடப்பட்ட பலர் பிற்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளர்களாக இருப்பதை மறுப்பதற்கில்லை.

இலங்கையில் 8வது இடத்தில் கிழக்கு!
இலங்கையிலுள்ள 9 மாகாணஙகளில் பொதுக்கல்விப்பெறுபேற்றை மையமாவைத்து ஆய்வுசெய்கையில் கிழக்குமாகாணம் 8ஆம் இடத்திலும் வடக்கு மாகாணம் 9வது இடத்திலும் உள்ளது. சமுகவலைத்தளங்கள் இதனை பல்வேறு கோணங்களில் விமர்சிக்கின்றன. அதனை திடிரென எழுந்தமாத்திரத்தில் மறுக்கவும் முடியாது.
க.பொ.த. சாத பெறுபேற்றினடிப்படையில் 2010இல் கிழக்குமாகாணம் 42வீத சித்தியுடன் 8ம் இடத்திலிருந்தது. 2010இற்குப்பின் அது உயர்ச்சிபெற்றுள்ளது. 2013இல் 4வது இடத்திலும் 2014இல் 5வது இடத்திலும் இருந்தது. ஆனால் 2015இல் வீழ்ச்சிநிலையை அதாவது 8வது இடத்திற்கு குறைந்தது. ஆனால் மீண்டும் 2017இல் கூடிய வளர்ச்சியைக் காட்டியது. அதாவது 2017இல் 6.2வீத வளர்ச்சியைக் காட்டியது. 67வீதம் என்ற பதிவு. 2018இல் இது அதிகரிக்கும் என்பது எமது நம்பிக்கை.
வளர்ச்சியில் வடக்குகிழக்கு சாதனை!
இலங்கையிலுள்ள 9 மாகாணங்களோடு ஒப்பிடுகையில் 2016-2017 இடையிலான சித்திவீதம் ஆகக்கூடுதலான 6.2வீதமாக இருப்பது கிழக்கு மாகாணத்தில்தான் என்பதை மகிழ்ச்சியோடு சுட்டிக்காட்டலாம். அதற்கடுத்ததான வளர்ச்சி 5.46வீத வளர்ச்சி வடமாகாணத்திற்குரியது.
இதிலிருந்து ஒன்றை அறியலாம். இலங்கையில் இறுதி இரண்டு இடங்களுக்காக மோதிக்கொள்ளும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் வளர்ச்சி வீதத்தில் இலங்கையிலேயே 1ஆம் 2ஆம் இடங்களில் முன்னேறியிருப்பது வரவேற்புக்குரியது.

நாம் துரோகம் செய்யலாமா?
வகுப்பில் பிள்ளைகள் சித்தியடையத்தவறினாலும் பெற்றோர்கள் நம்பிக்கை இழப்பதில்லை. எப்படியோஅடுத்த பரீட்சையில் ஆசிரியர் காப்பாற்றிவிடுவார் என்ற நம்பிக்கையிலிருப்பார்கள். அப்படி இறுதிக்கட்டம்வரை அவர்கள் ஆசிரியர்மீது வசைபாடாமல் நம்பிக்கையோடு இருப்பார்கள்.அப்படியான கௌரவத்தை இந்தசமுதாயம் ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்தக்கௌரவத்தை பாதுகாக்கவேண்டியது ஆசிரியரின்பொறுப்பு.
அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு நாம் துரோகம் செய்யலாமா? இதனை இறைவன் ஏற்பானா?
சிறந்த பெறுபேறு என்றால் பாராட்டு கௌரவம் பொன்னாடை. இப்படிப்பல. இவையனைத்தும் ஆசிரியர்க்கே. தேவையானால் அதிபருக்கும். தப்பித்தவறி அந்தவிழாவிற்குப்போனால் வலயக்கல்விப்பணிப்பாளருக்கும் மாகாணகல்விப்பணிப்பாளருக்கும் வேறுவழியின்றிப் பொன்னாடை போர்த்துவார்கள். ஆனால் மனத்தால் பாராட்டிக்கௌரவமளிப்பது ஆசிரியரை மட்டுமே.
ஒரு பாடசாலையில் நல்ல பரீட்சை முடிவு கிடைத்துவிட்டால் பலரும் உரிமைகோருவார்கள். ஆனால் அதுவே மோசமாகவந்துவிட்டால் அந்தக்குற்றம் அதிபர் மீது சுமத்தப்படும்.

ஆசிரியர்பணி ஆபத்தானது ஏன்?
ஆசிரியசேவை இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட சேவை.உலகில் கல்வி என்பது இறைவன் வழங்கும் கொடை.இற்றைக்கு 2500வருடங்களுக்கு முன் பிறந்த குழந்தையும் இன்று பிறக்கின்ற குழந்தையும் ஒன்றல்ல. பிறக்கின்ற முறை ஒன்றாகஇருந்தாலும் அவர்களது அறிவு வித்தியாசம். கருவிலிருக்கும்போது அறிவைப்பெற்றுக்கொள்கின்றது.
இறைவன் அந்தக்கால உலகுக்குப் பொருத்தமான குழந்தைகளை உருவாக்கி வழங்குகின்றான். அதற்கேற்ப நாமும் அறிவை மீளுருவாக்கம்செய்துகொள்ளவேண்டும்.
இறைவன் யாருக்கும் அநீதி செய்யமாட்டான். கோடானுகோடி மக்கள் உலகில் வாழ்ந்துவருகையில் உங்களை ஏன் இந்தக்கல்விப்பணிக்கு இறைவன் தேர்ந்தெடுத்துள்ளான்.? நீங்கள் பாக்கியம்செய்தவர்கள். இதுஇறைசேவை. ஏனைய தொழில்களை விட ஆசிரியர்சேவை மதிப்பானது கௌரவமானது. இதற்கு இறைவன் சிலரையே தேர்ந்தெடுக்கின்றான்.
அந்த சேவையை அலட்சியப்பாங்கில் செய்தோமானால் இறைவனின் கடுமையான தண்டனை நிச்சயம்கிடைக்கும்.ஆசிரியர்பணி ஆபத்தானது. மனச்சாட்சிக்கு விரோதமாக நடக்கக்கூடாது.

இறைவன்தான் பரிபூரண மேற்பார்வையாளன்!
நான் கல்விப்பணிப்பாளர்கள் ஆசிரியஆலோசகர்கள் பாடசாலைக்குச்சென்று மேற்பார்வைசெய்யலாம். ஆனால் இறைவன் பரிபூரணமான மேற்பார்வையாளன். நீங்கள்செய்யும் மனச்சாட்சியுடனான சேவையை மேலிருந்து மேற்பார்வைசெய்கின்றான். சிசிரிவி கமரா சிலவேளை ஓய்வெடுத்தாலும் இறைவனின் கமராவில் எதுவும் தப்பாது.யாராவது தவறுவிட்டால் அதுவும் பதிவில்வரும்.நன்மை என்றால் வரவு தீமை என்றால் செலவு. இதிலிருந்து யாரும் விடுபடமுடியாது.
நாம் கல்வி அதிகாரிகள் மேற்பார்வை செய்யலாமே தவிர கற்பிப்பவர்கள் ஆசிரியர்கள்தான். உங்களை நான் நூற்றுக்கு ஆயிரம் வீதம் நம்புகிறேன். அதற்காகவே உங்களை சந்திக்கவந்துள்ளேன். இனி மாணவர்களையும் சந்திப்பேன்.
நீங்கள் உண்மையாகசேவையாற்றினால் மட்டுமே கல்வி அபிவிருத்தியைக்காணலாம். ஏனெனில் ஆசிரியர்களே மாணவர்களுடன் நேரடியாக அறிவுப்பரிமாற்றம் செய்பவர்கள்.
எனவே நடந்தவை நடந்தவையாகட்டும் கடந்தவை கடந்தவையாகஇருக்கட்டும். இனிமேல் புதியசிந்தனையுடன் மனச்சாட்சியுடன் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் இறைவன்வழங்கிய இந்த சேவையை புதியபாதையில் அர்ப்பணிப்புடன் செய்வோம். என்றார்.

இந்த சுயவிமர்சனத்துடன் கூடிய பாடரீதியான கல்விக்கலந்துரையாடல் மாநாடு காலை 9.30மணிக்கு ஆரம்பமாகி மாலை 6.45மணியளவில் நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது. 













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -