கட்சி, நிறங்களுக்கு அப்பால் நின்று சேவை செய்வதன் மூலமே மக்களின் உள்ளங்களை வெல்ல முடியும் அமைச்சர் பைஸர் முஸ்தபா

ஐ. ஏ. காதிர் கான்-
மூக நோக்காகக் கொண்டு நாம் எதனையும் செய்யும் போது, மக்கள் எப்பொழுதும் எம்முடனேயே இருப்பார்கள். இன, மத, கட்சி பேதங்களின்றி மக்களுக்காகவே சேவைகளைச் செய்தால், அவர்களின் உள்ளங்களை எளிதில் கவர முடியும் என்று மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
கொழும்பு 13, ஜிந்துப்பிட்டி பொது விளையாட்டு மைதானத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய கொழும்பு காரியாலயங்களை பலப்படுத்தும் மற்றும் கிளை உறுப்பினர்களுக்கு அங்கத்துவம் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் துஷார ஹேமந்த (மஞ்சு) வினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றும் போது,
கட்சி, நிறங்களுக்கு அப்பால் நின்று சேவை செய்வதன் மூலமே மக்களின் உள்ளங்களை வெல்ல முடியும்.நாம் ஒரு வட்டத்திற்குள் மாத்திரம் இருந்துகொண்டு சேவை செய்ய முன்வரவில்லை. கொழும்பு வாழ் அனைத்து மக்களுக்கும், தேவையான சந்தர்ப்பத்தில் நிறைந்த சேவைகளைச் செய்து வருகின்றோம்.
கொழும்பு வாழ் மக்களின் சுயதொழில் முயற்சிகளுக்கு ஊக்கம் அளித்துள்ளோம், கை கொடுத்தும் உதவியுள்ளோம். அவர்களுக்குத் தேவையான தொழில் வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதோடு, அடிப்படை வசதிகளையும் போதியளவு நிறைவேற்றியுள்ளோம்.
இதனால், கொழும்பு வாழ் மக்கள் எப்பொழுதும் எம்முடனேயே உள்ளனர். ஜனாதிபதி என்றும் மக்களுடனேயே இருக்கும் ஒரு சிறந்த நாட்டுத் தலைவர். யார் எதைச்சொன்னாலும் மக்கள் இன்று எம்முடனேயே இருக்கின்றனர். நான் இந்த மத்திய கொழும்பை பொறுப்பேற்கும் போது, மக்கள் எம்முடன் இருக்கவில்லை. ஆனால், நகரசபை உறுப்பினர்களின் உதவியினால் அவர்கள் இன்று எம்மோடு கை கோர்த்துள்ளனர். பிரேமதாச ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் மத்திய கொழும்புக்கு பெருமளவில் சிறந்த சேவைகளைச் செய்துள்ளார். அவர் இருக்கும் காலத்தில், மத்திய கொழும்பு செழிப்புடன் இருந்தது. ஆனால் அதன் பின்பு வந்த ஆட்சிகளினால் இந்தத் தொகுதி மக்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை.
எனவே, இவ்வாறான மக்களின் பிரச்சினைகளை இன்றைய நல்லாட்சியின் கீழ் இயங்கும் ஸ்ரீல.சு.க. வினால் தீர்த்து வைக்க முடிந்துள்ளது. ஜிந்துப்பிட்டி என்பது, ஐ.தே.க. வின் பலமுள்ள ஒரு கோட்டை. ஆனால், இன்று இக்கோட்டையில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதைக் காண்கின்றோம். காரணம், இப்பிரதேச மாநகர சபை உறுப்பினர் மிகுந்த அக்கறையோடு மக்களுக்குத் தேவையான சேவைகளை நிவர்த்தி செய்து கொடுத்து வருகின்றார்.
கொழும்பு வாழ் மக்களுக்கு, மேலும் எதிர்காலத்திற்குத் தேவையான வரப்பிரசாதங்களையும், ஒத்துழைப்புக்களையும் பெற, தொடர்ந்தும் எம்முடனும், எமது கட்சியுடனும் இருந்து எமக்குக் கை கொடுத்து உதவுமாறு அன்பு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
நாட்டினதும், மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து நாளைய தலைமுறையினருக்கு சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஜனாதிபதியினதும், பிரதமரினதும் வழிகாட்டலின் கீழ் இயங்கும் நல்லாட்சி அரசாங்கம் நிச்சயம் நிறைவேற்றிக் கொடுக்கும் என்றார்.
மத்திய கொழும்பைச் சேர்ந்த அதிகளவிலான முஸ்லிம் மக்கள், இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில், ஸ்ரீல.சு.க. பொதுச்செயலாளர் ரோஹண லக்ஷமன் பியதாச, ஐ.ம.சு.மு. பொதுச்செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோரும் உரையாற்றினர். 






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -