உபதவிசாளர் ஜெயச்சந்திரனின் முயற்சியில் மன்சூர் கோடீஸ்வரன் எம்பி. திறந்துவைப்பு!
காரைதீவு நிருபர் சகா-34வருடங்களின் பின்னர் அம்பாறையையடுத்துள்ள மல்வத்தையில் வாராந்தச் சந்தை மீண்டும் நேற்று(15) புதன்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மல்வத்தைப் பிரதேச மக்களின் நலன்கருதி சம்மாந்துறை பிரதேசசபையின் உப தவிசாளர் வெ.ஜெயச்சந்திரன் எடுத்துக்கொண்ட முயற்சியின் பலனாக இச்சந்தை மீண்டும் கோலாகலமாக மேளதாளத்துடன் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரசின் பிரதித்தலைவரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான எம்.ஜ.எம்.மன்சூர் ,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான ஏ.கே.கோடீஸ்வரன் ஆகியோர் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டு இச்சந்தையை சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்தனர்.
சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள், செயலாளர் மொகமட் ,மல்வத்தை அபிவிருத்திக்குழுத்தலைவர் பொ.நடராசா ,வங்கி முகாமையாளர் ரி.ரஜனிகாந்த ,மல்வத்தை வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் மர்சூக் உள்ளிட்ட பலர் கலந்துசிறப்பித்தனர்.நேற்று பெருந்தொகையான பொதுமக்களும் கலந்துகொண்டு பொருட்களைக்கொள்வனவு செய்தனப்.
கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த மல்வத்தைச் சந்தியில் பிரதி புதன்கிழமை தோறும் இவ்வாராந்த சந்தை இயங்கும்.
இதனால் மல்வத்தை, புதுநகரம் ,வளத்தாப்பிட்டி, தம்பிநாயகபுரம், கணபதிபுரம், மஜீத்புரம் ,பளவெளி ,புதியவளத்தாப்பிட்டி ,மல்லிகைத்தீவு போன்ற பல பின்தங்கிய கிராம மக்கள் நன்மையடைவர்.
இந்தச்சந்தை கடந்தகாலங்களில் இயங்காமையினால் மேற்படிகிராம மக்கள் தமது தேவைக்காக ஒன்றில் அம்பாறைக்கு அல்லது சம்மாந்துறைக்குச் சென்று வந்திருந்தனர்.
மூவின மக்களும் கூடும் இச்சந்தையில் பெரும்பாலான பொருட்கள் விற்பனைக்கிடப்படும்.
அந்தக்காலத்தில் இவ்வாராந்த சந்தை மிகச்சிறப்பாக இயங்கிவந்ததாகவும் 1984 இனமுறுகலைத் தொடர்ந்து அது இயங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.