ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறு பரப்பிய ரகித ராஜபக்ஷவின் பேஸ்புக் கணக்கை விசாரணைக்குட்படுத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் இந்த தகவலை மேற்கோள்காட்டி அவதூறு பரப்பிய இணையத்தளங்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக்கொண்டதாக பரப்பப்பட்ட வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை (06) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் பைசால் காசிம் மேலும் கூறியதாவது;
முஸ்லிம்களின் பிரச்சினைகளை பிரதமருக்கு எழுத்துமூலம் சமர்ப்பித்து, அவற்றுக்கு தீர்வுகாண்பதற்கான உடன்பாடு எட்டப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்தது.
இந்நிலையில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரும் தலா 750 மில்லியன் ரூபா பெற்றுக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தார்.
இது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயல் மட்டுமின்றி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியில் சேறுபூசும் நோக்கத்துடன் திட்டமிட்டு செய்யப்பட்ட அவதூறாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் வைத்துள்ள நல்லபிப்பிராயத்தை இல்லாமலாக்கும் நோக்கில், இட்டுக்கப்பட்ட இந்த செய்தி பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறும் செயல் என்பதினால் இதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
ராகிதவின் கூற்றை மேற்கோள்காட்டி முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் மீதும் அவப்பெயரை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்தும் நோக்கில் சில இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தை கொச்சைப்படுத்தி, கட்சி மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையில் சேறுபூசும் முகமாக செயற்படும் இத்தகைய இணையத்தள முகவர்களுக்கு, சில அரசியல் கட்சிகள் மக்கள் வரிப்பணத்திலிருந்து கொடுப்பனவுகளையும், சுகபோக வாழ்கைக்காக அரச திணைக்களங்களிலிருந்து சொகுசு வாகனங்களையும் கொடுத்து வருகிறது.
இந்த இணையத்தளங்களில் வெளிவரும் இப்படியான அவதூறு செய்திகளுக்கு அரசாங்க ஊடகங்களிலுள்ள சில அரசியல்வாதிகளின் கையாட்கள் உண்மை வடிவம் கொடுத்துவருகின்றனர். இப்படியான மக்கள் விரோத இணையத்தளங்களுக்கும், அவதூறு சொல்லுகின்ற தனிநபர்களுக்கும் எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.