ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளிள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதங்களில் பங்கேற்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகார பணிப்பாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சட்டமுதுமானி ஏ.எம்.பாயிஸ் இன்று (17) சனிக்கிழமை சுவிற்சர்லாந்து நோக்கி பயணமானார்.
மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னர் கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்த அவர், ஜெனீவா பிரஸ்தாப கூட்டத்தொடரிலும் அதற்கு, சமாந்தரமாக உறுப்பு நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளுடன் வெவ்வேறாக நடைபெறும் அமர்வுகளிலும் பங்குபற்றி அங்கு முன்வைக்கவுள்ள கருத்துக்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இனரீதியான வன்செயல்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கையாண்ட மெத்தனப்போக்கு பற்றியும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதஉரிமை மீறல்கள், தண்டனையிலிருந்து தப்பித்தல் பற்றியும் உறுப்பு நாடுகளின் கவனத்தை அவர் ஈர்க்கவுள்ளார்.
நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் போன்றவை தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தினதும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் தரப்பினரின் அசமந்தப்போக்கு குறித்து மனித உரிமைகள் பேரவையில் ஏ.எம்.பாயிஸ் பிரஸ்தாபிக்கவுள்ளார்.