பெண்களும் அரசியலில் ஈடுப்பட உள்வாங்கப்பட வேண்டும் என்ற வகையில் 25 வீத பெண்கள் பிரதிநிதித்துவத்தை நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலின் பின்பாக 25 வீத பெண்கள் அரசியல் உள்ளீடு தொடர்பில் தேர்தல் ஆணையகம் தற்பொழுது நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அந்தவகையில் இந்த 25 வீத பெண்கள் அரசியலில் ஈடுப்படுவதற்கு மலையக மக்கள் முன்னணி அதன் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என என கல்வி இராஜாங்க அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
மஸ்கெலியா ஸ்டர்ஸ்பி குமரி தோட்டத்தில் 01.03.2018 அன்று இடம்பெற்ற ஆலய நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அந்தவைகயில் 25 வீதம் பெண்களுக்கு அரசியல் உள்ளீடு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 10ம் திகதி அட்டனில் நடைபெறும் சர்வதேச மகளிர் தின விழாவில் மலையக பெண்கள் சிறப்பு பெறுவார்கள்.
மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 10ம் திகதி அட்டனில் மகளிர் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவின் போது இந்தியாவின் சிறந்த பேச்சாளர் ஒருவர் விழாவில் கலந்து கொண்டு பெண்களை உயர்வுப்படுத்தி உரையாற்றுவார்.
இதன்போது மலையக மக்கள் முன்னணி மலையக பெண்களுகளை உயர்வுப்படுத்தி கௌரவப்படுத்தும் என்றார்.