ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
'ஐந்தில் ஆறு பெரும்பாண்மையுள்ள ஐக்கிய தேசியக் கட்சியுடனும், 17 ஆயுதக் குழுக்களுடனும் போராடி, எத்தனையோ, எத்தனையோ தடவைகள் துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து தப்பி, பெருந் தியாகங்களுக்கு மத்தியில் வளர்த்தெடுத்த எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, இதில் எதிலுமே எந்தவிதத்திலும் பங்கெடுக்காத ஒரு தனிமனிதனின் அணுக்குப்பிடிக்குள் சிக்குண்டு சீரழிகிறது. இதனை மீட்டெடுத்து, மறைந்த மாமனிதன் அஸ்றப் அவர்களின் காலத்து யாப்புடனும், கொள்கைகளுடனும் மீண்டும் பயனிக்கவே நாம் இன்று இப்போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம்' என்று ஸ்ரீ.ல.மு.கா. முன்னாள் செயலாளர் நாயகமும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேசியத் தலைவருமான எம்.ரி.ஹசன் அலி தனது உள்ளக் குமுறலைத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் நிந்தவூர் பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று நிந்தவூர் புதுநகர் வட்டாரத்தில் இடம் பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.றசாக் ஜவாத், முன்னாள் மேல்மாகாண வைத்தியப் பணிப்பாளரும், அ.இ.ம.கா நிந்தவூர் பிரதேச அமைப்பாளருமான டாக்டர்.எம்.ஐ.எம்.பரீட், முன்னாள் நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளரும், வேட்பாளருமான எம்.ஏ.எம்.தாஹீர், வேட்பாளர்களான ஐ.எச்.இல்லியாஸ் ஹசன், ஏ.பி.ஏ.வாஹீத் மாஸ்டர், எம்.எம்.சம்சுதீன் வட்டானை, ஏ.அஸ்பர், எஸ்.எம்.ஜெமீல், ஊர்காவல் மஜீத் போன்ற பலரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
மேலும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் எம்.ரி.ஹசன் அலி தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்:-
ஸ்ரீ.ல.மு.காங்கிரசிலிருந்து எம்மை விலக்கவில்லை. அவ்வாறு விலக்குவதற்கு அவருக்குத் தைரியமுமில்லை. மு.கா. என்னுடைய கட்சி! நம்முடைய கட்சி! இந்த மண்ணுக்கும், நமக்குமுள்ள தொடர்பு எவ்வாறானதோ? அவ்வாறானதே நமக்கும் மு.காங்கிரசுக்குமுள்ள தொடர்பு! இந்தக் கட்சியை மீட்டெடுத்து, ஊழல்களை விரட்டியடித்து, இதனைத் தூய்மைப்படுத்தி, மறைந்த மாமனிதன் அஸ்றப் அவர்களின் காலத்து யாப்புடனும், கொள்கைகளுடனும் பயணிக்கவும், இந்தக் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாக முஸ்லிம் காங்கிரசை மாற்றியமைப்பதே எமது தேவையாக இருக்கிறது. இப்போராட்டத்திற்கு சந்தர்ப்பம் வழங்கும் தேர்தலாகவே இதனை நாம் பார்க்க வேண்டும்.
எனவே இந்தத் தேர்தலை மண்ணை மீட்கின்ற தேர்தலாகவும், மு.கா.கட்சியை மீட்கின்ற தேர்தலாகவும், நயவஞ்சகத் தனமான தலைமையை விரட்டியடிக்கின்ற தேர்தலாகவும் கருதி, நீங்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள மயில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்கின்றேன்' என ஆக்ரோசமாகக் கருத்து வெளியிட்டார்.
