S.சஜீத்-
தேசிய பாரிசவாத தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி "இருளில் இருந்து ஒளியை நோக்கி பயணம்" எனும் தொனிப் பொருளில் இலங்கை தேசிய பாரிசவாத சங்கமும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நரம்பியல் வைத்திய பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து மாபெரும் தேசிய பாரிசவாத நடை பவனி ஒன்றினை இன்று (24) ஏற்பாடு செய்து காலை 7.30 மணியளவில் மட்டக்களப்பு, கல்லடி பாடுமீன் பூங்காவில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம் வரை நடைபெற்றன.
இந் நடை பவனியில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ. ரோஹித போகல்லாகம கலந்து கொண்டதோடு மேலும் அதீதிகளாக பிரதி சுகாதார அமைச்சர் கௌரவ பைசல் காசிம், மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்க உதயகுமார் ஆகியார் உட்பட அரச மற்றும் தனியார் ஊழியர்கள், கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மற்றும் தாதி பீட மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனைய சமூகம் சார்ந்த அமைப்பு உறுப்பினர்கள் பொலிஸ் பாதுகாப்பு அதிகாரிகள் என்று சுமார் 2000க்கும் மேற்பட்டோர் இந் நடைபவனியின் போது கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இதன்போது பாரிசவாத நோய் தொடர்பான பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் என்பன மருத்துவர்கள் மூலம் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டதுடன். குறித்த நடைபவனியானது கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற முதல் பாரிச வாத விழிப்புணர்வுக்கான நடைபவனி என்பது குறிப்பிடத்தக்கது.