அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடு சுகாதாரதுறைக்கு பாரிய அச்சுறுத்தல்

எம்.ஜே.எம்.சஜீத்-

ரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடு சுகாதாரதுறைக்கு பாரிய அச்சுறுத்தல்: முன்னாள் சுகாதார அமைச்சர் சுபையிர் குற்றச்சாட்டு

வைத்தியர் ஒருவர் தனது இடமாற்றத்திற்காக முன்வைத்த சிறிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் கவனம் செலுத்துகின்ற அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நோயாளர்களின் நலனில் அக்கரை செலுத்தாமை கவலையான விடயமாகும் என கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், ஸ்ரீ.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய பொது வைத்திய நிபுணரின் இடமாற்றத்தினால் குறித்த வைத்தியசாலையின் வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப்பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் (23) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பல்வேறு வளப்பற்றாக்குறையுடனும், ஆளணிப்பற்றாக்குறையுடனும், இயங்கி வரும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த பொது வைத்திய நிபுணர் ஒருவர் எவ்வித பதிலீடுகளுமின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் குறித்த வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை நிலவிவருவதாகவும், வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து ஏறாவூர் பிரதேச மக்கள் (21) வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.

வைத்தியர் ஒருவர் தனது இடமாற்றத்திற்காக முன்வைத்த சிறிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் கவனம் செலுத்துகின்ற அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நோயாளர்களின் நலனில் அக்கரை செலுத்தாமை கவலையான விடயமாகும்.

குறிப்பாக அந்த வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த ஒரே ஒரு வைத்திய நிபுணரை எந்தவிதமான பதிலீடுகளுமின்றி இடமாற்றம் செய்துவிட்டு ஒரு சிறிய சம்பவத்தை பூதாகரமாக்கி நொண்டிக் குற்றச்சாட்டுக்களை சுமத்த முற்படுவது வேடிக்கையான விடயமாகும்.

மேற்படி இடமாற்றம் செய்யப்பட்ட வைத்திய நிபுணர் தங்கியிருந்த விடுதிப்பக்கம் சிறுவர்கள் பட்டாசு கொழுத்தியதனை பெரிதுபடுத்தி அந்த சம்பவம் வைத்திய நிபுணருக்கு அசௌகரியத்தையும், மன உலைச்சலையும் ஏற்படுத்தியது என வைத்தியர் தனது மேலதிகாரிகளுக்கும், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்திலும் முறையிட்டுள்ளார்.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்திய நிபுணரை எந்தவிதமான பதிலீடுகளுமில்லாமல் விடுவிக்குமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அராஜகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நோயாளர்களின் நலனில் அக்கரை செலுத்தாது, ஒரு சிலர் செய்கின்ற சிறிய சம்பவங்களை காரணம் காட்டி ஒட்டுமொத்த சமூகத்தையும் பழிவாங்குகின்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இது சுகாதார துறைக்கு ஆரோக்கியமான விடயமுமல்ல.

நோயுற்ற மனிதன் தனது நோயினை சுகப்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வதற்கே வைத்தியசாலை வருகின்றான். உயிருக்காக போராடிக்கொண்டு வைத்தியசாலைக்கு வருகின்றவர்களுக்கு சிகிச்சையளிப்பது சுகாதார துறையினரின் கடமையாகும். இவ்வாறு சேவையாற்றுகின்ற சுகாதாரத்துறையிலே கடமையாற்றுகின்ற உயர் அதிகாரிகள் அலட்சியமாகவும், பாரபட்சமாகவும் நடந்துகொள்வது கவலையான விடயமாகும்.

அத்துடன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் பௌதிக வளங்கள் மற்றும் மருத்துவ தேவைகள் குறித்து மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் போதிய கவனம் செலுத்தாது அலட்சியமாக நடந்துகொள்கிறார். இது கண்டிக்கத்தக்க விடயமாகும். இதனை ஒரு சமூகத்திற்கு எதிரான விடயமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

ஏறாவூர் பிரதேசமானது பல குக்கிராமங்களையும், அதிக சனத்தொகைகளையும் கொண்ட ஒரு பரந்த பிரதேசமாகும், இங்கு அமைந்துள்ள ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக நாளாந்தம் நூற்றுக்கணக்கணக்கானோர் வருகை தருவது வழக்கமாகும்.

இங்குள்ள ஒரே ஒரு வைத்திய நிபுணரையும் இடமாற்றியிருப்பது ஏறாவூர் மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், அவ்வைத்தியசாலையின் அன்றாட நடவடிக்கைகளும், சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மேற்படி ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு உடந்தையாக செயற்படவில்லை என்பதற்காகவும் அவரையும் இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அறிய முடிகிறது. இவ்வாறான பழிதீர்க்கின்ற நிருவாக செயற்பாடுகள் சுகாதாரதுறைக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் பௌதீக வளங்கள் மற்றும் மருத்துவ தேவைகள் இடமாற்றங்கள் என்பவற்றில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கொண்டுள்ள அலட்சியம் தொடர்பில் பூரண விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சரிடமும், கிழக்கு மாகாண அளுநரிடமும் கோரியுள்ளேன்.

மேலும், எதிர்காலத்தில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் ஒருவரை நியமித்து வைத்திசாலையின் நடவடிக்கைகளை சிரமமின்றி முன்னெடுக்குமாறும் சம்மந்தப்பட்டோரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சுபையிர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -