நான் எதிர்நோக்கும் அச்சுறுத்தல் காரணமாகவே எனக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது -அமைச்சர் மனோ கணேசன்




டகொழும்பில் எனக்கு இருக்கும் அச்சுறுத்தல் காரணமாகவே எனக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கலந்துரையாடல்களில், நான் எதிர்நோக்கும் அச்சறுத்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நான் தெரிவித்துள்ளேன்.

நான் கொழும்பு மாவட்ட எம்பி. ஆனால், முழு நாட்டையும் உள்ளடக்கிய,இந்நாட்டில் வாழும் அனைத்து இனத்தவரையும் தழுவிய தேசிய அரசியலையே நான் செய்கிறேன். எனினும் எனக்கு இருக்கும் அச்சுறுத்தல் வழமையாக பழி சொல்லப்படுவது போல் வடக்கு கிழக்கில் இருந்து வரவில்லை. மலைநாட்டிலும் எனக்கு அச்சறுத்தல் இல்லை. கொழும்பு மாவட்டத்திலும் மக்கள் மத்தியில் இருந்தும் எனக்கு அச்சறுத்தல் இல்லை. ஆனால், வட கொழும்பில் மையம் கொண்டுள்ள ஒருசில அரசியல் நபர்களிடமிருந்தே எனக்கு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

என்னை பயமுறுத்தி என்னை வீட்டுக்குள் முடக்கி தேர்தலில் வெல்லலாம் என இங்கே சிலர் கனவு காண்கிறார்கள். ஆனால், இதைவிட அச்சறுத்தல் மிகுந்த கடந்த கால கட்டத்தையும் துணிச்சலுடன் எதிர்த்து நின்று போராடி கடந்து வந்தவன், நான் என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள். அன்றும் எனது பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி ஐநா செயலாளர் நாயகத்தின் சார்பாக அவரது மனித உரிமை பாதுகாவலர்களின் பாதுகாப்பு தொடர்பான அதிகாரி நேரடியாக இலங்கை அரசை கோரியிருந்தார். ஆகவே அன்று எனக்கு அரசாங்கம் விரும்பாமல் தயக்கத்துடன் எனக்கு பாதுகாப்பு வழங்கியது. இன்று நாம் உருவாக்கிய நமது அரசாங்கம் விருப்பத்துடன் தயக்கமின்றி எனக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளது.

என்னிடம் ஒட்டுக்குழுக்கள் இல்லை. என்னிடம் பாதாள குழுக்களும் இல்லை. போதை வஸ்து வியாபாரிகளும் இல்லை. அரச நிதியை கொள்ளையடித்து அதை கொண்டு வாக்குகளை விலைக்கு வாங்கும் பழக்கமும் இல்லை. ஆகவே அமைச்சர், கட்சி தலைவர், கூட்டணி தலைவர், மனித உரிமை போராளி என்ற முறையில் சட்டப்படியான பாதுகாப்பை பெறும் உரிமை எனக்கு இருக்கிறது. ஆகவே இது தொடர்பில் எவரும் அலட்டிக்கொள்ள தேவையில்லை.

இன்று இந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு எனக்கு மட்டுமல்ல,அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, ரிசாத் பதுர்தீன், பழனி திகாம்பரம்,ரவுப் ஹக்கீம் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை தனது கட்சிக்கு ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் எனக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினனார் என சில இணைய தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவற்றுக்கு இங்கே இருந்து சில அரசியல்வாதிகள் கட்டுக்கதைகளை எழுதி அனுப்பியுள்ளார்கள். இது என்னையும்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் அவமானப்படுத்தும் கட்டுக்கதைகளாகும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் என்னிடம் தேர்தல் அரசியலைப்பற்றி ஜனாதிபதி பேசவில்லை. தனது அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு தொடர்பில் அவருக்கு இருக்கின்ற பொறுப்பை அவர் செய்துள்ளார் என நான் நம்புகிறேன்.

மேலும் என்னை அறிந்த மக்களுக்கு என்னைப்பற்றி நன்கு தெரியும். இலங்கை அரசியல் வரலாற்றில் ஒருபோதும் விலைபோகாத சிறுபான்மை கட்சி தலைவர் என்ற பெருமை எனக்கு இருக்கிறது. ஒருபோதும் திசைமாறாத நேர்வழியில் வந்த வரலாறும் எனக்கு இருக்கிறது. இதைவிட அரிய பல சந்தர்ப்பங்களை நான் கடந்து வந்துள்ளேன் என்பது மக்களுக்கும், நண்பர்களுக்கும் நன்கு தெரியும். இதை இலங்கை அரசியல் உலகமும் நன்கு அறியும். சிலருக்கு மறந்துவிட்டால் அதுபற்றி நான் எதுவும் செய்ய முடியாது.

அதேபோல், எனது ஜனநாயக மக்கள் முன்னணிக்கும், நான் தலைமை ஏற்றுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் எந்தவித முரண்பாடும் கிடையாது. எங்கெங்கே தேர்தல் உடன்பாடு இல்லையோ அங்கே நாம், ஒருமித்த முற்போக்கு கூட்டணியாக ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறோம். உடன்பாடு இருக்கும் இடங்களில் நாம், ஐக்கிய தேசிய முன்னணியாக யானை சின்னத்தில் போட்டியிடுகிறோம். அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்துவிட்ட,ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ஒருசில தனிநபர்களுடனான முரண்பாடு, நமது கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடு இல்லை என்பதை புரிந்துக்கொள்ளும் அரசியல் முதிர்ச்சியும், பக்குவமும் எனக்கு இருக்கிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -