ஏறாவூர் நிருபர்-
ஏறாவூர் நகர பிரதேசத்தில் வடிகான்கள் தோண்டி துப்பரவு செய்யப்படாதுள்ளதனால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது மாரி மழைக்காலம் ஆரம்பித்துள்ளபோதிலும் வீதியோர வடிகான்கள் துப்பரவு செய்யப்படாதுள்ளன.
வழக்கமாக ஏறாவூர் நகர பிரதேசத்தில் மாரி காலத்திற்கு முன்னரே நகர சபை ஊழியர்களினால் வடிகான்கள் தோண்டப்பட்டு துப்பரவு செய்யப்படுவதுண்டு. எனினும் இம்முறை வடிகான்கள் தோண்டப்படாதுள்ளமை குறித்து பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நகர சபைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள வடிகான்கூட துப்பரவு செய்யப்படாது கழிவுநீர் தேங்கி நிற்பதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக ஏறாவூர்ப் பிரதான வீதி அகலமாக்கப்பட்டதன் பின்னர் அவ்வீதியின் இருமருங்கிலுமுள்ள வழிகான்கள் அடிக்கடி தோண்டி துப்பரவாக வைக்கப்பட்டதனால் மழைநீர் இலகுவாக வடிந்தோடும்நிலை காணப்பட்டது. அண்மைக்காலமாக இந்த நடைமுறை பின்பற்றப்படாததன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழையின்போது பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியது.
எனவே, ஏறாவூர் நகர சபை இவ்விடயம் குறித்து உடனடி கவனம் செலுத்த வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.