அம்பாறை மாவட்டத்தில் காணிச் சமபங்கு அவசியம் – சாய்ந்தமருதில் நடைபெற்ற கருத்தாடலில் வலியுறுத்தல்!



சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் 2026 ஏப்ரல் 19 ஆம் திகதி, “அம்பாறை மாவட்டம்: காணிச் சமபங்கு வேண்டும்” என்ற தலைப்பில் சட்டத்தரணி சர்ஜுன் ஜமால்தீன் எழுதிய நூலை மையமாகக் கொண்டு விரிவான கருத்தாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றதுடன், ஒன்றியத்தின் முகாமைத்துவ செயலாளர் பிர் முகம்மது தலைமை தாங்கினார்.

ஒன்றியத்தின் நிர்வாக செயலாளர் எம்.எம். உதுமாலெப்பையின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட செயலக பொறியியலாளர் ஏ.எம். சாகிர் பிரதம அதிதியாகவும், தபாலதிபர் எம்.எம்.ஏ. முபாரக் (J.P) விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர். மேலும் விரிவுரையாளர் எம்.ஐ.எம். சதாத், முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார் உள்ளிட்ட பல கல்வியாளர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்தனர்.

பிரதம அதிதியாக உரையாற்றிய பொறியியலாளர் ஏ.எம். சாகிர், இந்நிகழ்வு ஒரு சாதாரண சந்திப்பு அல்ல; இது சமூகத்தின் எதிர்கால உரிமைகள் குறித்து சிந்திக்க வைக்கும் முக்கியமான மேடையாகும். சமூகத்தின் உண்மையான செல்வம் கட்டிடங்களோ பொருளாதார வளங்களோ அல்ல, கல்வியே அதன் அடிப்படை என அவர் வலியுறுத்தினார்.

மேலும் பேசிய அவர், கல்வி மூலமே நிர்வாகத்திலும் சமூக வழிநடத்தலிலும் வலுவான நிலையை அடைய முடியும்.

அம்பாறை மாவட்டத்தில் காணி பங்கீட்டில் சமநிலை இல்லாத நிலை கவலைக்குரியது. மக்கள்தொகை அடிப்படையில் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களுக்கு உரிய அளவிலான காணிகள் வழங்கப்படவில்லை. சில சமூகங்களுக்கு அதிகளவில் காணிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மற்றவர்கள் குறைந்த நிலப்பரப்பில் வாழத் திணிக்கப்பட்டுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் குடியிருப்பு மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

சட்டத்தரணி சர்ஜுன் ஜமால்தீன் தனது பிரதான உரையில், அம்பாறை மாவட்டத்தில் காணி பகிர்வில் முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள காணிச் சம பங்கீடு மரபுகளை தரவுகளின் அடிப்படையில் விளக்கினார்.

அவர் தனது உரையில், மாவட்டத்தின் மக்கள்தொகை விகிதத்திற்கு ஏற்ப காணிகள் சமமாக பகிரப்படவில்லை. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் 45.6% மக்கள் தொகையுடன் பெரும்பான்மையாக இருந்த போதும் வெறும் 678 சதுர கிலோமீட்டர் கனிகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் முஸ்லிம்களுக்கு 2013 சதுர கிலோமீட்டர் கானிகள் கிடைக்கப்பெற வேண்டும். 16.9% உள்ள தமிழ் மக்களுக்கு 749 சதுர கிலோமீட்டர் காணிகள் கிடைக்கப்பெற வேண்டும். ஆனால் அவர்களுக்கு 449 சதுர கிலோமீட்டர் கானிகள் மாத்திரமே உண்டு. 37.1 வீதமாக உள்ள சிங்கள பௌத்தர்களுக்கு 1637 சதுர கிலோமீட்டர் காணிகள் தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு 3225 சதுர கிலோமீட்டர் கனிகள் திட்டமிட்ட முறையில் வழங்கப்பட்டுள்ளது. சனத் தொகைக்கு ஏற்ப உரிய அளவில் காணி பங்கீடு வழங்கப்படவில்லை. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள மக்களுக்கு மக்கள்தொகையை விட அதிக காணி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அடர்த்தி அதிகரித்துள்ளதால் காணி பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். “காணி, கல்வி, நீர்” என்ற மூன்று அடிப்படைகளும் மிக முக்கியமானவை யாகும். இதில் காணி இருந்தால் தான் ஏனைய இரண்டு அடிப்படைத் தேவைகளையும் எம்மால் நிவர்த்தி செய்ய முடியும். அடுத்த தலைமுறைக்கு இவை பாதுகாப்பாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒலுவில் துறைமுகம் மற்றும் கனியவள அகழ்வு போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளூர் மக்களின் நில உரிமையை பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

தலைமை உரையாற்றிய பிர் முகம்மது, இந்நிகழ்வு வெறும் நூல் அறிமுகம் அல்ல; சமூக உரிமைகள் மற்றும் நிலையான அபிவிருத்தி குறித்து சிந்திக்க வைக்கும் அறிவுசார் மேடை எனக் குறிப்பிட்டார். வரலாற்று ரீதியாக சமூக உரிமைகள் முழுமையாக பிரதிபலிக்கப்படாத நிலை இருந்ததை சுட்டிக்காட்டிய அவர், கல்வி, ஆய்வு மற்றும் வாசிப்பு கலாசாரம் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.

முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார் உரையாற்றுகையில், யுத்தத்திற்கு முன் மற்றும் பிந்தைய சூழ்நிலைகளின் அடிப்படையில் காணி பிரச்சினையைப் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறினார். அரச திணைக்களங்கள் மூலம் காணிகள் கைப்பற்றப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்த அவர், நிர்வாகப் பதவிகளில் சமநிலை இல்லாமையும் காணி பிரச்சினையை தீவிரப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், முழுமையான அதிகாரங்களுடன் கூடிய தேசிய ஆணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

விரிவுரையாளர் எம்.ஐ.எம். சதாத் தனது உரையில், காணி என்பது ஒரு சமூகத்தின் அடையாளம், உரிமை மற்றும் வாழ்வாதாரத்துடன் நேரடியாக தொடர்புடையது எனக் குறிப்பிட்டார். பாரம்பரிய காணி இழப்பு, சட்ட ஆவணங்களின் பற்றாக்குறை, நிர்வாக தடைகள் உள்ளிட்ட காரணிகள் பிரச்சினையின் அடிப்படையாக இருப்பதாக அவர் தெரிவித்தார். அறிவியல் மற்றும் தரவுகளின் அடிப்படையிலான கொள்கை அணுகுமுறை அவசியம் எனவும் அவர் பரிந்துரைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கல்வியாளர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகளும், காணி பிரச்சினையை தீர்க்க ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம் என வலியுறுத்தினர். மக்கள் தங்களது உரிமைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து, ஆய்வு மற்றும் தரவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

நிகழ்வின் இறுதியில், சட்டத்தரணி சர்ஜுன் ஜமால்தீன் எழுதிய இந்த நூலை வாசித்து சமூக விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும், காணி பிரச்சினை தீர்வுக்கான தொடர்ச்சியான முயற்சிகள் அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வு, அம்பாறை மாவட்டத்தில் காணி சமத்துவம் குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்திய முக்கியமான சமூக கருத்தாடலாகக் கருதப்படுகிறது.
























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :