கரிச் சட்டி கழுவும் போது
கண்ணுக்குள் காட்சி வரும்
பரீட்சையில் மதிப்பெண் பெற
பாடு பட்டு படித்த நாட்கள்
மீன் கழுவி ஆக்கும் போது
மீண்டும் காட்சி வரும்
தேன் தமிழில் கவி எழுதி
திறமைப் பரிசு பெற்ற நிகழ்வு
பம்பஸைக் கழற்றி எடுத்து
பாலிதினீல் போடும் போது
கெம்பஸில் எழுதிய தீஸிஸ்
வம்பாக மனதில் தோன்றும்
கோழி முட்டை பொரித்து
கோப்பையில் போடும் போது
தோழிமார் கூட்டமாய்
தோளில் சாய்தல் நினைவு வரும்
சோறு ஆக்கி இறக்கி
ஆறவைத்து ஊட்டும் போது
நூறு மார்க்ஸ் வாங்கி
தேறியது நினைவு வரும்
என்றாலும் நினைவுகளால்
இதயத்தில் கவலை வராது.
நன்றாக என் பிள்ளை
நாளை வர வேண்டுமென்ற
ஒன்றே மனதில் நிற்கும்
ஓயாது இயங்கச் சொல்லும்.
இன்று படிப்பென்று
இருக்கின்ற பிள்ளைகளும்
என்றோ ஒரு நாளில்
இதே நிலை அடைவீர்கள்!
ஆதலால் எல்லை மீறி
அடுத்த பக்கம் செல்லாது
போதிய கவனமெடுத்து
புத்தியாய்ப் படியுங்கள்.
அப்படிப் படிக்கும்
அழகிய ஞாபகங்கள்
எப்பவும் மனதில் நின்று
இனிமையாய் வாழ் வைக்கும்
தப்பான வழி நடந்தால்
தனிமையில் நினைவுகளில்
அப்படி நடந்தவைகள்
ஆழ் மனதை அறுத்து நிற்கும்....!
ஆதலால் எல்லை மீறி
அடுத்த பக்கம் செல்லாது
போதிய கவனமெடுத்து
புத்தியாய்ப் படியுங்கள்
