தலவாக்கலை பி.கேதீஸ்-
மலையக மக்களுக்கான அபிவிருத்தி, உரிமைசார் விடயங்கள் அனேகமானவை அமைச்சரவை பத்திரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றன. அமைச்சர்கள் மாற்றமடையும்போது அல்லது அரசாங்கம் மாற்றமடையும்போது அத்தகைய திட்டங்கள் கைவிடப்படும் நிலை உருவாகின்றது. ஆகையால், மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அமைச்சர்களின் தயவில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
உத்தேச அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் சிவில் சமூகத்தினரை தெளிவுபடுத்தும் செயலமர்வு சர்வோதய அமைப்பின் ஏற்பாட்டில் நுவரெலியா கூட்டுறவு விடுதியில் நேற்று முன் தினம் இடம்பெற்றது. நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சிவில் சமூக உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வை சர்வோதய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சய நாணயக்கார நெறிப்படுத்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சி.பி.ரத்நாயக்க , எம்.திலகராஜ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு உரையாற்றினர்.
இதன்போது கருத்தரைத்த திலகர் எம்.பி தெரிவித்ததாவது.
இலங்கை, பல்லினங்கள் வாழும் நாடு. இங்கு எல்லோரும் சமமாக வாழும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என சொல்லப்டுகின்றபோதும் அவை அரசியலமைப்பில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சட்டங்களும் நிர்வாக நடைமுறைகளும் வேறுபட்ட சமூகத்துக்கு வேறுபட்ட வகையில் அமுல்படுத்தப்படுகின்றது. இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பாகவே 1931 ஆம் ஆண்டு டொனமூர் யாப்பின் பிரகாரம் சர்வஜன வாக்குரிமை அடிப்படையில் மலையகத் தமிழ் மக்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. அதுவே சோல்பெரி யாப்பு நடைமுறையில் இருந்த 1948 ஆம் ஆண்டு சதந்திரம் கிடைத்த அதே ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு வாக்குரிமை பறிக்கப்பட்டது. அதற்கு பின்னர் 1972, 1978 ஆம் ஆண்டுகளில் இலங்கை குடியரசு யாப்புகள் உருவாக்கப்பட்டபோதும் வாக்குரிமை பறிக்கப்பட்டிருந்த மலையகத் தமிழ் மக்களுக்கு வாக்குரிமை வழங்கும் யோசனை முன்வைக்கப்படவில்லை.
இப்போது வௌ;வேறு காலகட்டங்களில் வௌ;வேறு பரிமாணங்களில் வாக்குரிமை வழங்கப்பட்டாலும் இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழ் மக்கள் இன்னும் முழுமையான இலங்கை பிரஜைக்குரிய அந்தஸ்தினைப் பெறவில்லை. வெளித்தோற்றத்தில் எல்லோரும் சமமாக உரிமை வழங்கப்பட்டுள்ளதுபோல் தென்படலாம் அது அவ்வாறு இல்லை. இன்னும் முழுமையாக அரச நிர்வாக பொறிமுறைக்குள் மலையகத் தமிழர்களும் செறிவாக வாழும் பெருந்தோட்டப்பகுதிகள் உள்வாங்கப்படவில்லை.
இலவசக் கல்வி இலங்கையில் நாற்பதுகளில் இருந்தே நடைமுறையில் இருந்தாலும் எழுபதுகளின் இறுதியிலேயே அது பெருந்தோட்ட மக்களுக்கு கிடைத்தது. அதுவரை தோட்டப் பாடசாலைகள் எனும் முறைமையின் கீழேயே வைக்கப்பட்டது. இன்றும் கூட அரச பாடசாலைகளாக அவை உள்வாங்கப்பட்டாலும் கல்வியமைச்சின் கீழ் பெருந்தோட்டப் பாடசாலைகள் எனும் அலகினாயே நிர்வகிக்கப்படுகின்றது. வைத்திய முறை இன்னும் தேசிய மயமாக்கப்படவில்லை.
பாதை வலையமைப்பு இன்னும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்படவில்லை. பாதைகளை புனரமைக்குமாறு வீதியை புனரமைத்துத் தருமாறு மக்கள் வீதியில் இறங்கிப்போராடுகின்றனர். குறித்த பாதைகள் தமது நிர்வாகத்துக்கு கீழ் இல்லை என அரச அதிகாரிகள் தட்டிக்கழிக்கின்றனர்.
அது அவர்களின் தவறு அல்ல. முறைமை அவ்வாறுதான் உள்ளது. தபால் சேவையும் அவ்வாறு தான். பிரதேச சபைகளுக்கு மலையக பெருந்தோட்ட மக்கள் வாக்களித்த போதும் 1987 ஆம ஆண்டு 15 ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் அதில் இருந்து சேவையை பெற முடியாதுள்ளது. எனவேதான் இன்னும் முழுமையான பிரஜை அந்தஸ்து கிடைக்கவில்லை என சொன்னேன். இப்போதுதான் இந்த சட்டத்தை திருத்தும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றோம்.கடந்த நாற்பது ஆண்டுகாலமாக மலையகத்தின் உரிமைகளும் அபவிருத்தியும் அமைச்சர்களின் தயவில் தங்கியிருப்பதாகவே உள்ளது.
அமைச்சர்கள் மாறும்போதும் அரசாங்கம் மாறும்போதும் அவர்களுக்கான திட்டங்கள் மாறுகின்றன. அல்லது மறுக்கப்படுகின்றன. இந்த நிலைமை புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தோடு மாற வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பு. எங்கும் மலையக மக்களின் பெரும்பாலான உரிமைகள் அரசியலமைப்பில் உறதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
உத்தேச அரசியலமைப்பில் இலங்கையின் இனத்துவ அடிப்படை எங்கும் சொல்லப்படவில்லை. இரண்டாம் சபையாக செனட் சபையும், சமுதாய பேரவைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவற்றுக்கு பிரதிநிதித்துவத்தை உள்வாங்கும் முறைமை பற்றிய தெளிவில்லை. இனத்துவ அடையாளம் உறதிப்படுத்தப்படாமல் முன்வைக்கப்படும் இத்தகைய முன்மொழிவுகள் இனப்பிரச்சினையை தீர்க்க பயன்படபோவதில்லை.
உத்தேச அரசியலமைப்பில் இலங்கையின் இனத்துவ அடிப்படை எங்கும் சொல்லப்படவில்லை. இரண்டாம் சபையாக செனட் சபையும், சமுதாய பேரவைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவற்றுக்கு பிரதிநிதித்துவத்தை உள்வாங்கும் முறைமை பற்றிய தெளிவில்லை. இனத்துவ அடையாளம் உறதிப்படுத்தப்படாமல் முன்வைக்கப்படும் இத்தகைய முன்மொழிவுகள் இனப்பிரச்சினையை தீர்க்க பயன்படபோவதில்லை.
நாம் இந்திய தமிழர் என தொடர்ந்தும் அழைக்கப்படுவதை மறுக்கினறோம். மலையக தமிழர்கள் என்றும் இலங்கையிலிருந்து பிரிந்துபோகும் கோரிக்கை வைத்தவர்களில்லை.எமது இன அடையாளமும் இலங்கையர் அடையாளமும் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.