அம்பாறை மாவட்ட எல்லை நிர்ணய கூட்டத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடு


னாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாட்டில் உள்ள மாகாண சபை தேர்தல் எல்லைகளை நிர்ணயம் செய்வது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்துக்கான அமர்வு முறைகேடாகவும், மூடுமந்திரமாகவும் இடம்பெற்றதால் இவரின் கருத்து வெளியிடும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு உள்ளதாக காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், புஷ்பா பொருளாதார கல்வி சமூக அபிவிருத்தி அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளருமான செல்லையா இராசையா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து உள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் இவரின் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவரின் வாய்மூல முறைப்பாட்டை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் லத்தீப் இஸ்ஸதீன் செவிமடுத்த பிற்பாடு எழுத்துமூல முறைப்பாட்டை பதிவு செய்து உள்ளார்.

செல்லையா இராசையாவின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளவை வருமாறு:-

நாட்டில் உள்ள மாகாண சபை தேர்தல் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயம் செய்வது தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஆணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாணைக் குழு ஒவ்வொரு மாவட்டங்களிலும் மேற்படி எல்லை நிர்ணயம் தொடர்பாக பகிரங்க அமர்வுகளை நடத்தி அரசியல் கட்சி, பொது அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோரின் அபிப்பிராயங்கள், ஆலோசனைகள், யோசனைகள் ஆகியவற்றை செவிமடுத்து வருகின்றது.

இவ்வகையில் அம்பாறை மாவட்டத்துக்கான அமர்வு அம்பாறை மாவட்ட செயலகத்தில் 2017 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 11 ஆம் திகதி பிற்பகல் 8.30 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை இடம்பெறுவதாக ஆணைக் குழுவால் வெளியிடப்பட்ட பகிரங்க எழுத்துமூல அறிவித்தலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வறிவித்தல் பிரதேச செயலகங்களின் அறிவிப்பு பலகைகளில் அனைத்து தரப்பினரதும் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. காரைதீவு பிரதேச செயலக அறிவிப்பு பலகையிலும் இவ்வறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டது.

நான் ஒரு அரசியல் சமூக செயற்பாட்டாளன் என்கிற வகையிலும், இவ்வமர்வில் நான் போன்றோர் பங்கேற்பது நல்லது என்று காரைதீவு பிரதேச செயலாளரால் எனக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் என் போன்ற அரசியல் சமூக செயற்பாட்டாளர்களையும் அழைத்து கொண்டு, வாடகைக்கு வாகனம் அமர்த்தி 2017 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 11 ஆம் திகதி இரவு 7.30 மணி அளவில் அம்பாறை மாவட்ட செயலகத்தை சென்றடைந்தேன். ஆனால் அங்கு அமர்வுக்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக தெரியவில்லை. மாவட்ட செயலக வாசலில் கடமையில் பாதுகாப்பு ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் வினவியபோது அவ்வாறு ஒரு அமர்வு அன்று இரவு கிடையாது என்றும் அன்று காலையில் ஒரு அமர்வு நடந்து இருந்தது என்றும் சொல்லினார்கள். நான் சில மணி நேரங்கள் காத்திருந்து, அமர்வு இல்லை என்பதை உணர்ந்தவனாக திரும்பி வந்து விட்டேன்.

2017 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 11 ஆம் திகதி முற்பகல் 8.30 மணி முதல் நண்பகல் வரை மேற்படி அமர்வு நடந்ததாக பத்திரிகைகள் மூலம் அறிந்து கொண்டேன். அவ்வமர்வில் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று இருந்தனர் என்றும் தெரிந்து கொண்டேன். அவர்களுக்கு எவ்விதம் அமர்வு தொடர்பான சரியான நேர விபரம் தெரிந்து இருந்தது? என்பது எனது கேள்வி ஆகும்.

இந்நிலையில் பிழையான நேர சூசியை பகிரங்க அறிவித்தலில் மேற்படி ஆணைக்குழு வெளியிட்டு அறிவித்து இருந்த நிலையில் அரசியல் சமூக செயற்பாட்டாளன் என்கிற வகையில் என்னால் குறித்த அமர்வில் பங்கேற்று எனது அபிப்பிராயங்கள், ஆலோசனைகள், யோசனைகள் ஆகியவற்றை ஆணைக் குழுவுக்கு சமர்ப்பிக்க முடியாமல் செய்யப்பட்டு விட்டது. இதனால் கருத்து வெளியிடும் உரிமை உட்பட எனது அடிப்படை உரிமைகள் நிறைவேற்று துறையினரால் மீறப்பட்டு விட்டன.

எனவே எனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமைக்காக உரிய நிவாரணங்களை பெற்று தரப்படுவதோடு மூடுமந்திரமாக இடம்பெற்று முடிந்த அமர்வு செல்லுபடியெற்றதேன பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் புதிதாக அமர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டு கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -