சமஷ்டிக்குச் சார்பாகவும், வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களின் ஆலோசனையின் பிரகாரமும் செயற்படும் இரண்டு அரசியல்வாதிகளாலேயே இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இலத்திரனியல் ஊடகமொன்றில் நடைபெற்ற அரசியல் நிகழ்வில் பங்கேற்று, புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் "சமஷ்டி என்ற சொற்பதம் வெளிப்படையாகக் குறிப்பிடப்படாவிட்டாலும், நாடாளுமன்றத்தில் குழுநிலையின்போது, ஒத்திவைப்புப் பட்டியல் நீக்கப்படும். ஆளுநருக்குரிய அதிகாரங்கள் மீளப்பெறப்படும். திருத்தமொன்றை முன்வைத்தால் புதிய அரசமைப்பு சமஷ்டியாக மாறிவிடும். எனவே, இதுவிடயம் தொடர்பில் விழிப்பாகவே இருக்கவேண்டும்.
இலங்கையிலுள்ள மொத்த தமிழ் மக்களின் எண்ணிக்கையில், அரை பங்குக்கும் குறைவான மக்களே வடக்கில் வாழ்கின்றனர். எனவே, எதற்காக அவர்களுக்குத் தனி அலகொன்று தேவைப்படுகின்றது? நிர்வாக மட்டத்திலான அதிகாரங்களைப் பகிரலாம். அதற்கான சிறந்த தீர்வாக 13ஆவது திருத்தச் சட்டம் இருக்கின்றது. அதை எப்படிப் பாதகமில்லாத முறையில்அ முல்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராயவேண்டும்.
அதேவேளை, நாடாளுமன்றத்தில் இன்று என்ன நடைபெறுகின்றது என்பதுகூட சிலருக்குத் தெரியாமல் இருக்கின்றது. சமஷ்டிக்குச் சார்பான இருவராலேயே இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒருபோதும் மக்கள் ஆணை வழங்கமாட்டார்கள். ஏன், நாடாளுமன்றத்தில்கூட மூன்றிலிரண்டு ஆதரவைப் பெறமுடியாமல்போகும். ஜனாதிபதி பக்கமுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் எதிராகவே வாக்களிப்பார்கள்.
அப்படி நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவைத் திரட்டினாலும் சர்வஜன வாக்கெடுப்பின்போது மக்கள் ஆணை கிடைக்காது'' என அவர் குறிப்பிட்டார்.
