ஆசிரியர் உதவியாளர்களை வீதிக்கு இறக்கிவிட்டு வேடிக்கை பார்க்காமல் உடனடியாக அவர்களை ஆசிரியர் சேவையின் 3;:2 ற்கு உள்வாங்குவதோடு அவர்களுக்கு அதற்கான கொடுப்பனவையும் வழங்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
மலையகத்தில் பெருமளவிலான இளைஞர், யுவதிகளின் தொழிற் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவும், மலையக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்காகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எடுத்த முயற்சியினால் 2015ம் ஆண்டு ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டது.2015ம் ஆண்டு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அரசதுறைசார் ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது.
பல அரச நிறுவனங்களில் தற்காலிக வேலைகளில் அமர்த்தப்பட்டவர்கள் 180 நாட்கள் வேலை செய்திருப்பின் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. அத்துடன் சமயா சமய ஊழியர்களாக வேலை செய்தவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. இவர்களுக்கு அரச சுற்று நிறுபத்திற்கேற்ப அடிப்படை சம்பளமும், மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டது. இவர்களின் விடயத்தில் கரிசனையோடு செயற்பட்ட அரசாங்கம் ஆசிரியர் உதவியாளர்களை ஏன் கைவிட்டது? மலையகத்தை மாற்றாந்தாய் மனப்பாண்மையுடன் நோக்கும் போக்கு ஆசிரியர் உதவியாளர் விடயத்திலும் பின்பற்றப்படுகிறது.
இதே போல இந்த வருட முற்பகுதியில் ஆசிரியர் உதவியாளர்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு சென்று பயிற்சி பெற அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விடயம் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் தலையீட்டினால் இவர்கள் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு சென்று பயிற்சி பெற வழிவகுத்து கொடுக்கப்பட்டது.ஆசிரியர் உதவியாளர்களின் விடயத்தில் உரிய தீர்வை வழங்க வேண்டியது கல்வி அமைச்சின் கடமையாகும். காலத்தின் தேவைக்கேற்ப வர்த்தமாணி அறிவித்தல்களை அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து அங்கிகாரத்தை பெற்றுக்கொள்வதன் ;மூலம் மாற்றமுடியுமென கல்வி அமைச்சிற்கு சொல்லித்தான் தெரியவேண்டுமா?
2014ம் ஆண்டு வர்த்தமாணி அறிவித்தலில் உள்ளது போல ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பயிற்சியை முடித்தபின் அவர்கள் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படுவார்கள் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.ராதாகிருஸ்ணன் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
அமைச்சர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதிய அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்து தனது ஆளுமையை காட்ட வேண்டும். அதே நேரத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக இருக்கும் காலப்பகுதியில் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பட்டம் பெற்றவர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
அரசாங்கம் தேவையற்ற இழுத்தடிப்புக்களை செய்யாமல். நொண்டி சாக்கு போக்குகளை சொல்லி காலத்தை கடத்தாமல் ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க வேண்டும்.ஆசிரியர் உதவியாளர்கள் தனித்து விடப்பட்டவர்கல்ல. அவர்கள் மலையக சமூகத்தின் ஒரு அங்கம். அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு வழு சேர்க்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பின்நிற்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
