அஸ்லம் எஸ்.மௌலானா-
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையினால் கல்முனை ஸாஹிராக் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு ஒழுங்கு செய்யப்பட போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் ஆளுமை விருத்தி தொடர்பிலான விசேட செயலமர்வு நேற்று முன்தினம் கல்லூரியின் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.
பேரவையின் திட்டத் தவிசாளர் எஸ்.தஸ்தகீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதலாவது அமர்வில் மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் போதைப்பொருள் பாவனையில் இருந்து மாணவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான உபாயங்கள் குறித்து தேசிய ஒளடத, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பரிசோதகர் எம்.காலித் விரிவுரையாற்றினார்.
இரண்டாவது அமர்வில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் இளைஞர் வலுவூட்டலுக்கான திட்ட தவிசாளர் யூ.எம்.பாஸீல், இலக்கை அடைதலுக்கான ஆளுமை விருத்தி எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கு செயன்முறை ரீதியாக பயிற்சியளித்தார்.
இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்ட பேரவையின் தேசியத் தலைவர் எம்.என்.எம்.நபீல், பொதுச் செயலாளர் ஷஹீட் எம்.றிஸ்மி, கல்லூரி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் ஆகியோர் செயலமர்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர். செயலமர்வில் திறமை காட்டிய மாணவர்களுக்கு விசேட பரிசுகளும் வழங்கப்பட்டன.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் அம்பாரை மாவட்ட பணிப்பாளர் கே.எல்.சுபைர், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.