ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாங்கேணியில் இயற்கைமுறை விவசாயத்திலீடுபடுபவர்களுக்கு புதன்கிழமை 05.07.2017 வாழ்வாதார உதவியாக சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நீரிறைக்கும் இயந்திரத் தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டதாக மட்டக்களப்பு திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைத் தலைவியாகக் கொண்ட தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் இயற்கை முறை விவசாயத்திலீடுபடுபவர்களுக்கு நீரிறைக்கும் இயந்திரத் தொகுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாங்கேணி பிரதேசத்தில் நீண்ட காலமாக கடற் தொழிலில் ஈடுபட்டு வாழாவாதாரத்தினை இழந்தவர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இயற்கை முறை பயிர்ச்செய்கை கிராமத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 10 பேருக்கு இந்த உதவிகள் கிட்டியுள்ளன.
இந்த இயற்கை முறையிலான பயிர்ச்செய்கையில் 23 பேர் ஈடுபட்டு வருகின்றனர். மிகுதியானவர்களுக்கும் இயந்திர உபகரணஙக்ள் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்று மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
அத்துடன், இந்த பயிர்ச்செய்கையாளர்களுடைய உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பினை ஏற்படுத்துதல் மற்றும் வியாபாரத்தினை ஊக்குவிக்கும் நோக்கில் மாங்கேணியில் விற்பனை நிலையம் ஒன்றும் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாகவும் திட்டமிடல் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
உதவிகள் வழங்கும் இந்நிகழ்வில் வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ். நேசராஜா, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்களான எஸ். முரளிதரன், கே. கங்காதரன் ஆகியோரும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.


